Tuesday, December 11, 2007

தாயுமானவள்


நீயும் என் அன்னையே

உன்னை கண்ட இன்று
காலவேந்தன் பின்னோக்கி இழுத்துச் செல்ல
மெல்ல விரிந்து மனதில் தங்கிய காட்சி
உள்ளம் தான் எத்துணை ஆரவாரிக்கிறது

அரைக்கால் டவுசருடன் நான் திரிந்த அந்த அருமையான நாட்கள். கால் இறுதி விடுமுறை என்னை கூத்தாட வைக்க, தலைதெறிக்க வீடு சென்று, புத்தக மூட்டைதனை தூக்கியெறிந்து, கால் தரை படாது ஓடிய அக்கணம், இரு கரங்கள் எனை இழுத்தணைத்தது. உனைக் கண்டதும் விரைந்து ஓடத் துவங்க, விரட்டி விரட்டி எனைத் தொடர்ந்து, வெட்க மிகு, என் தாயின் முந்தானை தேட, கேலியுடன் தான் அவள் மிருதுவாக எனை அணைக்க, பெரியவனாக நான் தள்ளிவிட்டேன் அவளை. அவள் வரவெண்ணி களித்திருந்த போதிடினும், அவள் வந்ததும் ஓரக்கண் பார்வையாய் நான். நான் என் சகஜ நிலைக்கு வர, அவள் செய்த குறும்புகள், என்னையும் அறியாமல் சிரிக்கிறேன் இன்று.

பாட்டி தான் அவள் தன் பக்கம் இழுத்து, தலை நிறைய எண்ணெய் கொட்டிவிட, அவள் முகம் போன போக்கு. அப்பப்பா… காண கண் கோடி வேண்டும். என் சிரிப்பு அவளை வெறுப்பேற்ற, குமுறினாள் தன் தாயிடம். தாழம்பூ வைத்து பின்னலிட்ட அவள் ஜடை, என் கைவசம் சிக்கித் தவிக்க வைக்கும் என் குறும்பு.



காட்டுப் புலியென்றும், கிணற்றுக்குள் பேயென்றும் கதை சொல்லி கிடுகிடுக்க வைப்பாள். பயந்து நான் அலறவே, தட்டிக் கொடுத்து உறங்க வைப்பாள்; கால் போன போக்கிலே, காட்டெருமை கதை பேசி கை பிடித்தே நடந்திடுவாள்; பால் சோறு ஊட்டிடுவாள். யாரும் அறியா வண்ணம் ஒரு கவளம் உண்டிடுவாள்.


கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது.

மாப்பிள்ளை என்றனர். நாணி கவிழ்ந்த அவளை கேலி செய்தனர். புதியதாய் அவள் எனக்கு. திருமணம் முடிந்தது, புதியனளாய் அவள். நடையில் துள்ளல் இல்லை, வார்த்தையில் கேலி இல்லை. என்னை இழுத்து அணைப்பாளும் இல்லை. காலம் தான் மாறிப் போனது.

கேலி செய்யும் பருவம் எனதானது. கேட்டு மகிழும் பருவம் அவளானது. நாம் கேட்காமலே மாறிப்போனது எப்போது? காளையாய் நான். கல்லூரி கதை சொல்ல, புதிதாய் கேட்பாள்; எத்தனை முறை கேட்டிருப்பினும், வாய் விட்டு சிரிப்பாள் முதல் முறை கேட்பவள் போல். அவள் சிரிக்கவே பல பொய் கதைகள் உருவான காலமும் உண்டு. பொய்யென அறிந்தும், மெய்யென கனிவுடன் கேட்பாள். கதை கதையாய் நான் அளந்துவிட, கொல்லென சிரித்து, கண்ணீர் துடைப்பாள். அவளை சிரிக்க வைப்பதில் எனக்கின்பம்.

மறைத்து வைத்து காசு கொடுப்பாள். மறுத்திடின் முறைத்திடுவாள். வளரும் பிள்ளை என்பாள்; வளர்ந்த பிள்ளையென அறிந்திடினும். அவள் வீட்டு அவலம் மறைத்து, கவள உருண்டை என் வாயில் திணிப்பாள்.


என் ஆசைகளும், கனவுகளும் அவளறிவாள். அவளுள் புதைந்த ஆசைகள் என்னவோ? கனவுகள் என்ன ஆனதோ? நானும் கேட்டதில்லை; அவளும் சொன்னதில்லை. அவளுக்கென கனவுகள் இல்லாமலா இருந்திருக்கும்?

பதின்ம மாத குழந்தையின் த்தைக்கு கொண்டாடியவள்
பத்து வயதில் விரட்டி ஓடி மகிழ்ந்தவள்
பதினைந்து வயதில் சரிக்கு சரி வாதிட்டவள்
பதினெட்டு வயதில் தோழியானவள்
என்றென்றும் என் தாயும் ஆனவள்
எனதருமை அத்தையம்மா!
இன்று உன்னைக் கண்டதும், என்னை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சி; தோழியை கண்டெடுத்த துள்ளல். எனதருமை அத்தையே, நீயும் என் அன்னைதான் என்பதை உன்னால் மறக்கவோ, மறுக்கவோ முடியுமோ?

அன்புடன்,
என் செல்ல அத்தையின்
உன் செல்ல மருமகன்.

Sunday, December 09, 2007

அவனுக்கு தெரியும்… இவனுக்கு தெரியுமா?

இரு தினங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நடந்தது காலை 7 மணியளவில். இந்நாட்டில் அதிகாலையில் வேலை செல்வோர் அதிகம். வங்கியை கொள்ளையடித்து விட்டு, போலீஸில் மாட்டிக் கொண்டவன், தன் காரில் ஓட்டமெடுக்க…… அவனை விரட்டினர் காவலர்கள். போலீஸில் மாட்டிக் கொண்டால் என்னாவது என்ற பயத்தில், நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையின் எதிர் திசையில் புகுந்தான் நம் கதாநாயகன் கள்வன். 70 மைல் வேகம் செல்லும் அந்நெடுஞ்சாலையில், மக்கள் சர்வ சாதாரணமாக 80களில் செல்வர். எதிரே யாரும் வரமாட்டர்கள் எனத் தெரிந்ததால், பின் வரும் கார்களின் வேகத்தோடும், முன் செல்லும் கார்களின் ப்ரேக்கிங், லேன் மாற்றுதல் முதலியவற்றில் மாத்திரம் கவனம் கொண்டு செல்வது நடைமுறை.

நம் கதாநாயக கள்வனோ, போலீஸின் அதிரெடி சேஸிலிருந்து தப்பிக்க, தவறுதலாக எதிர்திசை புகுந்ததும் அவனுக்கு தெரிந்திருக்கும், தான் பிழைக்க சாத்தியமில்லை என. என்ன கொடுமையடா இது…. காலையில் மனைவி மக்களிடம் சொல்லிக் கொண்டு, மாலை வரும் போது கடைகண்ணிக்கு போய் வருவேன் என சொல்லி சென்றவன்… தனக்கு நேர் எதிர் வந்த கள்வனின் நோக்கம் அறியாது, என்ன செய்வது என்றும் அறியாது, நிலைகுலைந்து, எதிர் மோதி, இருவரும் அத்தலத்திலே இறந்தனர். இது தான் செய்தி.

எதிர்திசையில் நுழைந்ததால் கள்வனுக்கு தெரியும் தான் இறந்துவிடுவோம் என்று. ஆனால், இம்மனிதனுக்குத் தெரியுமா இன்று நாம் இறக்கடிக்கப் படுவோம் என்று? செய்தியில் காண்பிக்கும் போது…. அந்த இரு கார்களின் நிலையும், அம்மனிதன் பின் வந்த மற்ற கார்களின் நிலையும் மனதை கசக்கிப் பிழிவதாய் இருந்தது.

Tuesday, December 04, 2007

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்போரம்
தனிச்சி நின்னு நான் பாடவே
தலைசாச்ச நாத்தோட
காத்தும் வந்து விளையாடுதே

காத்திலாடும் கிளைமேலே
சல சலக்கும் இலையினூடே
வள மூக்குப் பச்சக் கிளி
கெஞ்சலாய் கொஞ்சுதே

பச்ச மண்ணு அது மேல
குமரிகள் நாத்தாங்கால் நட
கையிசையின் தாளமாய்
வரிசை வனப்பூட்டுதே

மரத்தசைவு சுகத்தினிலே
பச்சப் புள்ள கண்ணுறங்க
அம்மையின் துணையின்றி
காத்து வந்து தூளியாட்டுதே

ஓடிவரும் தண்ணீரு
தேங்கி நிக்கும்-அதனுள்ளே
ஆமக்குட்டி நீந்த
குட்டித் தவள கொட்டமடிக்குதே

கருக் கொண்ட சோளக் கதிரு
குமுஞ்சி நிக்கும் தன்னாலே
ராத்தூகம் போயி
வெடித்து சிதற நேரம் பாக்குதே

ஆத்தாங்கரையோரம்
வளர்ந்திருக்கும் புல்வெளில
ஆட்டுக்குட்டி தன்னோட
கன்னுக்குட்டியும் ஆட்டம் போடுதே


-- காட்டாறு

Thursday, November 29, 2007

இயற்கையின் சந்தோஷ கூச்சல்

இயற்கையின் சந்தோஷ கூச்சல்


கருக் கொண்ட மேகங்கள்
கண்ணிமைக்க மறக்க
கரிய விழிப் பார்வைதனை
மின்னல் படம் பிடிக்க

செல்லச் சிணுங்கலில்
பித்தம் தலைக்கேற
இடி டம டமத்து
தண்டோரா போட

சிலிர்க்கும் மேகம்
மழையாய் ஆனந்த கூத்தாட
விரிந்து வழியும் வெண் பொதியாய்
சந்தோஷ கூச்சலிட்ட அருவி

தடுமாறா வேகத்தில்
கரை புரண்டு ஓடிடும்
பாறை தனில் மோதி
வான் எட்டிப் பிடிக்கும்

இரு கரையடைத்து
நாணலுடன் விளையாடும்
பச்சிளம் கொடிகளை
தலை கோதி செல்லும்

காடு மலை தாண்டி
வரும் பாதை சிறப்பித்து
சல சலத்து நுரை பொங்க
சேர்ந்திடுமே தன்னவனிடத்து
-- காட்டாறு

Wednesday, November 14, 2007

இயற்கை சிற்பி நீ யாரோ

இயற்கை சிற்பி நீ யாரோ

கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ

கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ

மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ

பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ

மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
-- காட்டாறு

Monday, November 12, 2007

உன்னுயிர் ஏந்தி

உன்னுயிர் ஏந்தி

மன்னவனே!
உனைத்தானே நம்பியிருந்தேன்
உனையன்றி வேறேதும் அறியேனே
தவிக்க விட்டுச் சென்றாயே
புரிகிறதா என் தவிப்பு

உன்னை என்னிடம் சேர்த்த
படைத்தவனைப் புகழ்வேனா
உன்னை தன்னிடம் சேர்த்த
எடுத்தவனைப் பழிப்பேனா
இல்லை,
என்னைதான் நோகுவேனா

உலகம் என்னைப் பழிக்குமா
சுடு சொல் என் மனம் தாங்குமா
குழந்தையுமாய் என்னைத் தாங்கினாயே
இன்று தாயும் தந்தையும் நானாக்கினாயே

என்ன செய்வேன்
இனி எப்படி வாழ்வேன்
தழுவி வாழ்ந்தவள்
தனித்து வாழ முடியுமா

கலங்கி நிற்கும் நம் செல்லங்களை
கரை சேர்க்க
உன் அன்பையும் சேர்த்துத் தர
அரணாய் நிற்க
என்னால் முடியுமா

வழிகாட்டியாய் வழி நடத்த
உன்போல் அரவணைத்து
அறிவுரைத்து,
தோழனாய் கொண்டாட
என்னால் முடியுமா

என்ன செய்வேன் நான்
என்னுயிர் தான் உன்னில் நீத்ததோ
உன் ஊணுடல் தான் மறைந்ததோ
உன்னுயிர் என் ஊணுடல் கலந்ததோ
புரியாது புரிய வைத்தாயோ

உன்னுயிர் ஏந்தி
உன் கனவு நனவாக
வழி நடத்துவேன் நம் மக்களை
சான்றோன் என கேட்கும் வரை!

சுவாசமாய் தாங்கிய என்னுயிரே
உன் நினைவில் உன்னுடன் வாழ்வேன்
துணையிருப்பாய் என்னுடனே
என் ஊணுடல் மறையும் வரை!
-- காட்டாறு

Friday, November 09, 2007

மீண்டும் மீண்டும் வா....

வெள்ளை நிற… மாளிகை போல் உள்ள சுண்ணாம்பு அடிச்ச கல் கட்டிடம். ஒரு கார் சர்ருன்னு வேகமா வந்து, அநாயசமா வளைவுல திரும்பி, சட்டுனு ப்ரேக் போட்டு, கல் வீட்டு வாசல் முன்னாடி வந்து நிக்குது. அதிலிருந்து காட்டாறு போல் விருட்டுனு இறங்கின ஆளு, இறுகிய முகத்தோட வாசலையே முறைச்சி முறைச்சிப் பார்த்துட்டு நிக்கிறாரு. மனசை தேத்திக்கிட்டு, மெதுவா வாயினருகிலே போய், சாவி கொடுத்து வீட்டைத் திறக்கிறார். திறந்து பார்த்தால் தூசும், தும்புமாய், ஒட்டடையும் வவ்வாலின் இருப்பிடமுமாய், பார்க்கவே ரொம்ப பயங்கரமாய் இருக்குது……. இறுக்கமான முகத்துடன், வரும் தும்மலை கட்டுப் படுத்திக் கொண்டு, தன்னையே நொந்தவராய், மோவாயை தடவியவாறு யோசனையில் ஆழ்கிறார்.

பின்னர் மள மளன்னு, தூசு தட்டி, மெருகேத்தி வைக்க ஆரம்பமாய், மீண்டும் ஒரு முறை வலம் வர ஆயுத்தமாகிறார். வேறு ஒன்னுமில்லிங்கோவ்… அதிகமா சன் டீவி பார்த்ததால மட்டுமில்ல… அதிலே வரும் நாடகங்களை வீட்டுப் பெரியவங்க கூட கம்பெனி கொடுக்குறேன் பேர்வழின்னு கூட உட்ககர்ந்து பார்த்ததால் வந்த விளைவு தானுங்கோவ்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா (மாதங்களா) தமிழ்மணம் பக்கம் வராம இருந்துட்டு, என்னோட பதிவு பக்கம் போனாலே, ஏதோ புதுசா ஒரு இடத்துக்கு வந்த மாதிரி இருக்குதுங்க. என்னத்த கிறுக்குனோம் இவ்ளோ நாளான்னு பாத்தா…. ஒன்னுமே புரியல…. மண்டைக்குள்ள இருந்து எல்லாம் தூசு தட்டு எடுக்க வேண்டியிருக்குது… கொஞ்சம் டடம் வேணும் அதுக்கு. அதுக்கு முன்னனல....சரி ஒரு வணக்கத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கலாமின்னு… வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறேன்…. இனியும் வீட்டை மூடிட்டு, ஓடிப்போகாம ஒழுங்கா இருக்கிறேனான்னு பார்க்கலாம். வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க.

Wednesday, September 19, 2007

அஞ்சு வெரலும் ஒன்னாவா இருக்கு

இன்னக்கி பாருங்க.... 25 பேரு சேர்ந்து வெட்டியா ஒரு அறைக்குள்ள நின்றும், நடந்தும், உட்கார்ந்தும் கேள்வியும் பதிலுமா(இதெல்லாம் சும்மா) பேசிட்டு இருக்காங்க. கேட்டா மூளையை உபயோகிக்க சரியான நேரம் இது தான். ஒரு பிரச்சனைக்கு தீர்வு உட்கார்ந்து பேசி தீர்மானிக்கிறதாம். சரி….. ஏதோ செய்துட்டு போகட்டும். நாம மோட்டுவளைய பார்த்துட்டு உட்கார்ந்திருப்போமின்னு கலந்து கிட்டா… மோட்டுவளைய பார்க்கக் கூடாதுன்னு சட்டமின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன செய்ய.. கையைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்த வேளை… ஒரு அறிவு ஜீவி சொல்லுறாரு… எல்லாமே ஒரு காரணத்தோட தான் இருக்கும். காரணம் இல்லாது காரியம் இல்லைன்னு. அடடா... தத்துவம்... தத்துவம்...

அவ்வளவு நேரம் சும்மா இருந்த சிறு மூளை படக்குனு விழித்தெழுந்துட்டார். பெரு மூளையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க. தூங்கிட்டு இருந்த பெரு மூளைக்கு ஒன்னும் புரியல. நம்மகிட்டேயே கேள்வியான்னு திரு திருன்னு பேய் முழி முழிக்கிறாரு. கேள்வி இது தாங்க. எதுக்காக விரல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு சைஸ்ல இருக்குது? அதுக்கு என்ன காரணம் இருக்க முடியுமின்னு. சபாஷ் சரியான கேள்வி. ஆனா பதில்… நீங்க தாங்க நமக்கு விளக்கனும். இந்த அஞ்சி விரல் கதையை எத்தனை முறை கேட்டிருக்கோம்…. நாமே எத்தனை முறை சொல்லியிருக்கோம். அப்போல்லாம் தோனாத கேள்வி.. இன்னக்கி… தேவையா? கொஞ்ச நேரம் நானும் மூளைய சொரண்டி பார்த்தேன். அவங்கள திடீருன்னு வேலை செய்ய சொன்னா.... எப்படி செய்வாங்க… சொல்லுங்க.

நானும் கொஞ்சம் முயற்சி செய்துட்டு உங்க கிட்ட வரமின்னு......சரி… நமக்கு தெரியலைன்னா….. உடனே நம்ம குரு… ஞானி… இருக்கவே இருக்காருன்னு… 12 வயசிடம் கேட்டா… அவங்க ஒரு லுக்கு விட்டாங்களே பார்க்கனும். உனக்கு எங்கிட்ட கேள்வி கேக்குறதே வேலையாப் போச்சின்னு என்ற மாதிரி. எப்பவும் கேள்வியோட அவங்களை சந்திச்சா... பின்ன இது தானே கதி.... அவங்க உடனே அறிவி ஜீவியா… கூகிள்ல தேடினியா… அது செய்தியா.. இது செய்தியான்னு… நானோ… எனக்கு கேட்க மட்டும் தான் தெரியுங்க… நீங்க தான் பதில் எனக்கு சொல்லனுமின்னு அடம் பிடிக்க… அப்புறம் வான்னு துரத்திட்டாங்க. அவங்க அப்பாட்ட முறையிட்டா…. உன் பாடு… அவள் பாடுன்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்.

சரி…போன்னு விட முடியாம… ஆருயிருக்கு போன் செய்தா… கேள்வியைக் கேட்டதும்… சரிம்மா.. வீட்டுக்கு வந்ததும் பாத்திரம் கழுவித் தாரேன். அப்புறம் அந்த அறைய சுத்தம் செய்ய சொன்னியே… அதையும் செய்துறலாமின்னு சம்பந்தமில்லாம பேசுறாங்க. இது வேலைக்கு ஆகாதுன்னு நான் எஸ்கேப்.

அடுத்தது யாரிடம் கேட்பதுன்னு தெரியல… கண்முன்னாடி தெய்வம் வந்து நிக்குது. அன்னையேன்னு சரணடைஞ்றலாமின்னு கேள்வியைக் கேட்டா… அவங்க….. ஒன்னோட குசும்புக்கு அளவே இல்லாம போச்சின்னு ஒரு இடி இடிச்சிட்டு ஓடிப் போய்ட்டாங்க.

நமக்கு மண்டைக்குள்ள உள்ள குடைச்சல் நின்னாத்தானே….. உடனே ஆபத்பாந்தவனா நினைவுக்கு வந்தது நம்ம தமிழ் மண தெய்வங்கள் தான். கேள்வியை கேட்டுட்டேனப்பா… என்ன காரணத்துக்கு நம் ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவுல இருக்குது. பதில் சொல்லிப் போடுங்கய்யா. சரியா… என் சிற்றறிவுக்கு எட்டுற மாதிரி பதில் சொன்னீங்கன்னா…. உங்களுக்கு நம்ம பங்காளி வச்சிருக்கிற கோப்பை நிச்சயமாக பரிசாக உண்டு... உண்டு… உண்டு.

பின்குறிப்பு: (பங்காளிக்கு மட்டும்)
பங்காளி… அய்யா… ராசாத்தீ…. கால வாரிப் புடாதீக. இன்னும் கப்பு வச்சிருக்கீகல்ல. உங்களை நம்பி வாக்கு கொடுத்துட்டேன். பார்த்துக்கோங்கப்பா.

பின் வந்த பின்குறிப்பு: (வடுவூர் குமாருக்கு மட்டும்)
பங்காளி அய்யா கால வாரிட்டாகன்னா.. நீங்க பெளவுலிங் போட்டியில வாங்கின கப்பை வச்சி தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க.... நம்ம தமிழ் மண அறிவு கடலுக்கு பரிசா கொடுத்துருங்க. ஹி ஹி ஹி.

Saturday, September 08, 2007

கலர் பார்க்க வாரீகளா?

செப்டம்பர் போட்டி வச்சாச்சி.... கடைசி நாளும் வந்தாச்சி... காட்டாறு நானும் ஜோதியில ஐக்கியமாயாச்சி

இதோ போட்டி லிங்க்: http://photography-in-tamil.blogspot.com/2007/08/pit_30.html



வண்ண வண்ண விளையாட்டு விளையடலாம் வாங்க. புள்ளைங்க விடுமுறைல இருந்தப்போ... வா வான்னு அழைத்து... நானும் போனா.... நம்ம சைஸுக்கு..... ச்ச்ச்ச்ச்சச... இந்த பழம் புளிக்குமின்னு சுட்டுத் தள்ளிட்டு வந்திட்டேன்.




நயகரா நீர்வீழ்ச்சி.... 30 மாடி கட்டிடத்தில் இருந்து பார்த்தால், அப்படியே மெர்குரியை கொட்டிப் போட்டாற் போல் இருந்தது. சரி... புகைப் படம் எடுத்தால் எப்படியிருக்கும் எனப் பேராவல் எழ.... கிளிக்கினால்... அப்படியே... என் கண்கள் கண்ட காட்சியே... அசந்துட்டேன். வண்ணமயமாக தெரியாவிட்டாலும், போட்டிக்கு இது தான் அனுப்பவேண்டும் என மனம் ஆர்ப்பரிக்க.... இதோ உங்கள் முன்..


எனக்குப் பிடித்த சில:
கிறிஸ்தவ கோயில்களில் இது போல் கண்ணாடி பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கும். எனக்கு இது மாதிரி புகைப் படம் எடுக்க ரொம்ப ஆசை. நெறையா கைவசம் இருக்குது. இது ச்சும்மா என் ஆசைக்கு.


பரிசா இதைத் தருவாங்களா? நிஜமான கார். கிறிஸ்மஸ் திருவிழா சிறப்பா கொண்டாடுவாங்க மேலை நாடுகளில். இம்முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த wrapping செய்யப்பட்ட சிவப்பு கார்.

Wednesday, August 15, 2007

அறுபதில், அறுபதிலிருந்து பேசலாமா?

அறுபதாம் சுதந்திர தினம். இந்த நன்னாளில், எனக்கு பரிச்சயமான, நான் பின்பற்றுகிற ஒன்னு; எல்லோரும் அப்படியிருந்தால் நல்லா இருக்குமேன்னு நான் தினம் நினைக்கிற ஒன்னை உங்களுக்கும் சொல்லலாமின்னு தான் இந்த பதிவு. குழந்தையும் தெய்வமும் ஒன்னு. ஏன்னா அவங்க என்ன எப்போ நெனைக்கிறாங்கன்னு சொல்ல முடியாது. :-) அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் தெய்வங்கள் தான். ஏன்னா, அவங்களும் குழந்தைகளும் ஒன்னாச்சே. அறுவதில் அறுவதைப் பற்றி பேசுவது சரியாயிருக்குமின்னு தோணுது. அய்ய… நான் என் வயசை சொல்லலப்பா…..

நம்ம தலைவர் ஆறிலிருந்து அறுபது வரை சொல்லிட்டுப் போய்ட்டார். நம்ம அறுபதிலிருந்து எதுவரை பத்தி சொன்னாலென்னன்னு தோணிய எண்ணங்கள் தாம் இவை. அவரைப் போல முடியலைன்னாலும், ஓரளவுக்கு எனக்கு(!) புரியிற மாதிரி, சுவாரசியமா (எனக்கு தான்) எழுத முயற்சிக்கிறேன்.

அறுபதுக்கு மேல குழந்தை போல் ஆயிருவாங்கன்னு கேள்வி பட்டிருக்கோம். ஏன்… நாமளே சொல்லுவோம். ஆனால் உண்மையிலே குழந்தை தானே என எண்ணி வழிவிட்டிருக்கோமா என்றால், பதில் கேள்விக்குறிதான். நம்ம என்ன செய்யிறோம், எப்படி நடந்துக்குறோமின்னு நான் சொல்ல வரல. அவங்க, அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குணம் எப்படி குழந்தை குணமா இருக்குதுன்னு பார்க்கலாம். சரியா? 15 வயது வரை குழந்தைகள் என்பது என்னுடைய கருத்து. அதனால ஒப்பீடு 15 வயதுக்குள் மட்டும் தான். எழுதியிருக்கிற அத்தனை கருத்துக்களும் என்னோட கருத்து தான். சண்டைக்கு வந்தாலும், ஈன்னு சிரிச்சிட்டு போயிருவேன். ஏன்னா நானும் குழந்தை தான். ;-) 15 வயசுன்னா குழந்தை தானே.

இங்கே சின்ன குழந்தை 15 வயதுக்குட்பட்டவர்கள். பெரிய குழந்தை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தூக்கம்: 1 வயதுக்குள்
சின்ன குழந்தை:
நமக்கு தூக்கம் வரும் போது இவங்களுக்கு தூக்கம் வராது. அவங்களுக்கு தூக்கம் வரும் போது, நாம் அன்றாட கடமைகளை செய்ய வேண்டியதாயிருக்கும். 2 அல்லது 3 மணி நேரம் தான் தூங்குவாங்க. அவங்களுக்கு தூக்கம் வரும் போது தூங்க விடலைன்னா…… வ்வீச் வ்வீச் தான்.
பெரிய குழந்தை: கோழித்தூக்கம் போடுவாங்க. கேட்டா, தூங்கவேயில்லைன்பாங்க. சும்மா வாய கிளறுனோமோ, குதறிருவாங்க.

மற்றவரைப் போல் செய்தல்: 1-2 வயதுக்குள்
சின்ன குழந்தை: கூட இருக்குறவங்க என்ன செய்தாலும் அதே போல செய்வாங்க. சொல்லிக் கொடுத்தவுடனே செய்வாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, நாம நெனைக்காத தருணத்தில செய்து காண்பித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திருவாங்க.
பெரிய குழந்தை: அவங்க எடத்துல இருக்குறவரைக்கும் எதுவும் புதுசா கத்துக்கனுமின்னு அவசியம் இருக்காது அல்லவா. புதுசா கத்துக்க வேண்டிய கட்டாயம் வந்தால், நாம சொல்லிக்கொடுத்தா, எனக்கு எல்லாம் தெரியும். உன்னை படிக்க வச்சி ஆளாக்குனதுக்கு, நீ எனக்கு சொல்லித் தர்றீயான்னு ஒரு பார்வை…. இல்லை சொலல் இருக்கும். ஆனா, டக்குன்னு புடிச்சிப்பாங்க. என்ன புரிஞ்சிச்சோன்னு நெனைக்கிற போது, அழகா செய்து அசத்திருவாங்க.

நிறைவு: 2-4 வயதுக்குள்
சின்ன குழந்தை: வயிறு நெறஞ்சியிருந்தா, ரொம்ப தெம்பா ஓடியாடி விளையாடுவாங்க. சள சளன்னு பேசுவாங்க. நமக்கு புரிஞ்சா, அவங்க நடையில ஒரு துள்ளல் இருக்கும். புரியலைன்னா, வேற கதை பேச ஆரம்பிச்சிருவாங்க
பெரிய குழந்தை: அவங்க மனசு நெறஞ்சியிருந்தா, அவங்களப் போல் நக்கல் பண்ண யாராலும் முடியாது. பழகி பார்த்தவங்களுக்கு அது புரியும். உடம்புல தெம்பு இல்லைன்னாலும், மனசுல தெம்பு வந்துதுன்னா, ஒரு துள்ளல் நடையிருக்கும் அவங்க பேச்சில. பேசிட்டே இருப்பாங்க; கேட்க ஆளிருந்தால்.

செவிமடுத்தல்: 4-7 வயதுக்குள்
சின்ன குழந்தை: இது என்னப்பா/என்னம்மா அப்படிம்பாங்க. நாம விளக்க ஆரம்பிச்சா, எங்கேயோ இருக்கும் அவங்க கவனம். அரைகுறையா கவனிக்கிற மாதிரி இருக்கும். நாம சொல்லி முடிக்கிறதுக்குள்ள அடுத்த கேள்வியோட ரெடியாயிருவாங்க. எப்பவாது நாம் சொன்ன விளக்கத்தை நமக்கே சொல்லுவாங்க.
பெரிய குழந்தை: தெரியலைன்னாலும்/புரியலைன்னாலும் தானே வந்து கேட்க மட்டாங்க. ஆர்வமா பார்த்துட்டு இருப்பாங்க. நாம குறிப்பறிந்து விளக்கனும். அப்படி விளக்கும் போது, ஏதோ கண்டுக்காத மாதிரி இருக்கும். ஆனா உன்னிப்பா தான் கேப்பாங்க. மனசுல குறிச்சிக்குவாங்க. நாம விளங்குதா கேட்டா, கோபம் வந்துரும். “எனக்கெல்லாம் தெரியும்” அப்படின்னு ஒரு லுக்கு விடுவாங்க. ரொம்ப நேரம் விளக்கம் கொடுத்தா போரடிச்சிரும். டக்குனு வேற இடத்துக்கு மாறிருவாங்க.

தன்னையறிதல்: 7-9 வயதுக்குள்
சின்ன குழந்தை: அவங்க எண்ணங்கள் அவங்களைப் பத்தி மாத்திரம் தான் இருக்கும். சுத்தியிருப்பவங்க ….. அப்படி யாரும் இருக்குறதாவே அவங்களுக்கு தெரியாத பருவம் இது. அவங்க செய்ற குறும்புகளை நாம் எடுத்து சொல்லச் சொல்ல, மேலும் நம்மள கவருற மாதிரி நடந்துக்குவாங்க
பெரிய குழந்தை: நீங்க நல்லா சீராட்டி வச்சிருக்கீங்கன்னு வச்சிக்கோங்க, அப்போ அவங்க சின்ன வயசுல இழந்த சுகமெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும். நான் எப்படியிருக்கிறேன், குண்டா இருக்கிறேனோ, மெலியனுமோ அப்படி இப்படின்னு அவங்களைப் பத்தியே கேள்வி கேட்டுட்டு இருப்பாங்க. அவங்க நமக்கு செய்த காரியங்களை நாம பெருமையா சொன்னோமின்னு வச்சிக்கோங்க, அப்படியே பகல் கனவுக்குள்ள போயிருவாங்க

லாஜிக் பார்ட்டி: 9-11 வயதுக்குள்
சின்ன குழந்தை: லாஜிக்கா யோசிக்க ஆரம்பிப்பாங்க. பேச ஆரம்பிப்பாங்க. எல்லாம் அவங்களுக்கு புரிஞ்ச மாதிரி நடந்துப்பாங்க. ஒழுங்கு படுத்தி பார்க்கத் தெரியும் இந்த ஸ்டேஜில். இப்படித்தான் இருக்குதுன்னு அழுத்தமான நம்பிக்கை ஒன்னை வச்சிட்டு தான் எதையும் ஆராய்வாங்க. அவங்க நெனச்ச மாதிரியே வந்தால், அடுத்த யோசிப்புக்கு போயிருவாங்க.
பெரிய குழந்தை: சிறு வட்டத்துக்குள் இருந்து பழகியவர்களானால், இவங்க இப்படி தான் என்று தனக்குள் வரையறுத்துக் கொண்டு, வருத்தப் பட்டுட்டு இருப்பாங்க. எந்த பிரச்சனைக்கும் ஒரு எல்லைக் கோடு போட்டுருவாங்க. அந்த கோட்டை விட்டு வெளிக் கொணருவது கடினம். அப்படி அவங்க நெனச்ச மாதிரி அந்த ஆளோ, பொருளோ இல்லைன்னு வச்சிக்கோங்க, ரொம்ப பாராட்டாம அடுத்த கவலைக்குள்ள போயிருவாங்க

கேள்விகள் உலகம்: 11-15 வயதுக்குள்
சின்ன குழந்தை: மனசுக்குள்ள கேள்வி கேட்டு தேடும் வயது இது. இப்படின்னா எப்படி இருக்கும். அப்படின்னா எப்படியிருக்குமின்னு கேள்வி மேல கேள்வியா அவங்களையே கேட்டுப்பாங்க. இந்த ஸ்டெஜில அவங்களுக்கு தேவை என்னன்னா பெற்றோர், சுத்தியிருப்போர் வழிகாட்டுதல். இந்த வயசுல புசுக்குன்னு கோபம், அழுகை எல்லாம் வரும்
பெரிய குழந்தை: இவங்க மனசுல ஏதாவது ஒன்னு குடைந்து கொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ, ரொம்ப யோசிப்பாங்க. தீர்வு அவங்க கைல இல்லைனாலும், குழப்பத்தின் உச்சத்தில் தான் இருப்பாங்க. இப்படி செய்தா எப்படி, அப்படி செய்தா எப்படின்னு. அவங்க கருத்தை சில சமயங்களில் வாய் விட்டு வெளில சொல்லி, மகன், மருமகள், மகளிடம் திட்டு வாங்குவோர் அதிகம். என்ன சொன்னாலும் (நல்லதோ, கெட்டதோ) கண்ணீர் வந்துரும் இவங்களுக்கு. கோபத்தை சாப்பிட்டில் காட்டுவார்கள்

Moral of the story-ல்லாம் ஒன்னும் இல்லை. :-) இந்நன்னாளில், நாம நாட்டுக்கு என்ன செய்தோம், நாடு நமக்கு என்ன செய்ததுன்னு கேள்வியெல்லாம் கேட்காம, நம்மளால் முடிந்த ஒன்றை செய்வோம். அது நம் வீட்டில் ஆரம்பிக்கட்டுமே. நம்மூட்டு பெரியவங்களை குழந்தைகள் போல் நடத்துவோமே. அப்படி நடத்தும் போது, நீங்கள் அவர்களின் குழந்தை என்பதை மனதில் கொண்டால், கடிந்து நடக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், சுமூகமாக பேசும் திறன் வரும். நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.

ஜெய்கிந்த்! இது முற்றுமல்ல... நீங்கள் தொடரவும்.

பின்குறிப்பு:
Mangai: http://manggai.blogspot.com/2006/10/growing-old.html
TheKa: http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html

Sunday, August 12, 2007

கலையாமல் கலைந்தேன் கண்மணி

கண்மணி யக்கோவ்...... இந்த பதிவு உங்களைப் பத்தியது இல்ல. பயப்பட வேண்டாம். இது ச்ச்சும்மா ச்ச்சும்மா...... :-)
நண்பன் ஒருவன் இதை வாசித்து விட்டு, இருவர் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போல் சொல்லிப் பார்த்தேன்; அருமையாக இருந்தது என்றான். ஏதோ அவன் போறாத காலம் நான் எழுதும் அனைத்தும் வாசிக்க வேண்டிய கட்டாயம். ஆனாப் பாவம் நீங்க. அவன் என்னடாவென்றால் ஞான் பெற்ற இன்பம், தமிழ்மணமும் பெறட்டும் என்கிறான். இதோ என் அருமைத் தோழனின் விருப்பத்திற்கிணங்க, உங்களையும் கஷ்டப் படுத்தியாற்று. ;-)


கலையாமல் கலைந்தேன்


கலையாத உன் தூக்கத்தில்
கலைந்த உன் குங்குமத்தில்
கலைந்தது என் மனம்
கலையாமல் என்னிடம்
வந்துவிடு என் கண்மணி
கலைந்து கிடக்கும் என்
மனம் புரிந்துவிடு கண்மணி

குவிந்து உன் உதடு
என்னைக் காதலிப்பதாய் முணுமுணுத்தது
அது கண்டு
என் மனம் விரிந்து குவிந்தது
என் தொண்டைக்குழியில் ஏறிய பரவசம்
வயிறு வரப் பாய்ந்தது
நாபி அடைந்த்து ஊணுடல் கலந்தது

கலையாது என் கை எடுத்து
உன் மேனி வைத்தாய்
என் மேனி கழன்றது
என்னுள் நடக்கும் மாற்றம்
அறிவாயா என் கண்மணி
கலையாமல் நீ நடத்தும் நாடகத்தில்
கலைந்து போனேன் கண்மணி

புரியுமா என் கண்மணி
கனவிலும் உனைப் பிரியேன் என்று!

-- காட்டாறு

Thursday, August 02, 2007

பழசு தான்... ஆனாலும் புதுசு

இந்த மாத போட்டிக்கு டாண்ணு வந்துடோம்மில்ல..... ராசாத்தீகளா.... காட்டாறுன்னு ஓடிப்புடாதீக..... பார்த்து, இரசித்து மகிழுங்க.

2 வருடங்களுக்கு முன்பு எடுத்தப் படங்கள் தான் இவை. ஆனாலும் போட்டிக்குப் புதுசு. ;-) குழந்தைகளை புகைப் படம் பிடிப்பது என்பது ஒரு தனி கலை தான். அவங்க பண்ற சேட்டைகளை நாம் இரசித்து கொண்டு இருக்கும் போது, புகைப் படம் எடுக்க மறந்து விடும். புகைப் படம் எடுக்க நாம் ரெடியா இருக்கும் போது, குழந்தைகள் நமக்கு அல்வா கொடுத்துருவாங்க. நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த 4 புகைப்படங்கள். முதல் இரண்டும் போட்டிக்கு. மற்ற இரண்டும் எனக்காக. ;-)

(எல்லா படங்களும் Camera - Sony DSC F717 ஆல் எடுக்கப்பட்டவை. )




எங்க அத்தை வாங்கி வந்த சாக்லெட். ம்ம்ம்ம்ம்.......... நல்லா இருக்கு. எங்க அத்தை என்னை சாக்லேட் பேபின்னு கூப்புடுவாங்க. பேரு நல்லா இருக்கா?



அத்தை நல்லா சிரிப்பு காமிப்பாங்க. எப்படி சிரிக்கிறேன்னு பாத்தீங்களா? அத்தைக்கு போட்டோ எடுக்குறது புடிக்கும். ஒரு அத்தை சிரிப்பு காமிச்சாங்க, இன்னொரு அத்தை போட்டோ எடுத்தாங்க. அத்தைங்க ரெண்டு பேரும் வந்தாலே ஜாலி தான்.




இங்கே அழுறது பாட்டியா இல்லை பேத்தியா? அவங்க அழுததில் இன்னும் இரண்டு குழந்தைகள் அழுதது தான் ஹைலைட்டே.



அடொரேஷன் என்பது சிறு வயதிலே வந்துருது பாருங்க. அப்பாவை இந்த குழந்தை இரசிக்கிறது எவ்வளவு அழகா இருக்குதில்ல. அப்பாவை இரசித்த பாப்பாவையும், பாப்பாவை இரசித்த அப்பாவையும் இரசித்து அத்தை எடுத்த புகைப்படம் இது.

Friday, July 20, 2007

என்னை சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்கப்பா

புகைப்பட போட்டின்னு நம்ம நட்சத்திர பதிவாளர் முத்துலெட்சுமி பதிவைப் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். உடனே கோதவில் இறங்க எங்கே நேரம். அதனால சமீபத்தில் எடுத்த படங்களை உங்களுக்காக இங்கே. 50 பேரு தான் பங்கேற்க முடியுமாமே.... அதனால என்ன... கலந்து கொண்டேன்னு பேர் பண்ணிக்கலாமின்னு...... ஹீ ஹீ ஹீ.




அண்ணாத்தை வீட்டின் பின்புறம் உள்ள காட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். கிளிக்கிட்டேன். உதறல் கொஞ்சம் இருந்தாலும், அவரை இவ்வளவு பக்கத்தில் பார்த்த பெருமிதத்திலும் தைரியமா பக்கத்தில் போய் எடுத்த படம். கொஞ்மும் டச்சப் செய்யாமல் எடுத்தது போலவே தந்துள்ளேன். Camera -- Sony DSC F717





ஒரு மழை நாள் வீட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தேன். மரங்கள் அசைவதும், இலைகள் பட படப்பதும் கவிதைத்துவமாக் இருந்தது. வீட்டின் முன்னுள்ள செடியில் பூத்திருந்த லில்லி மலர்கள் தேனில் தோய்த்தெடுத்த பலா பழத்தை நினைவு படுத்தின. கிடைத்த தாளில் என் கிறுக்கல்களை கிறுக்கி விட்டு, அக்கணத்தை கிளிக்கினேன். மழையாக இருந்ததால், Light effect சரியாக இல்லை. Level increase மட்டும் செய்ய வேண்டியதாகி போச்சி. வேறொரு மாற்றமும் செய்யவில்லை. Camera -- Sony DSC F717.

இன்னும் படம் வேணுமா, இதுவே போதுமா?

Thursday, July 19, 2007

பெண்ணின் நிலை

என் நண்பனிடமிருந்து ஈமெயில். 82 வயதான மூதாட்டியார் தில்லி மாநகரில் கற்பழிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, 2 நாளில் இறந்து போனார். இது 2 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இது கேட்டதும் என் கண்களில் நீர். மனதில் குடைச்சல். நாம் மனிதர்கள் தானா? ஆறறிவு படைத்தவர்கள் தானா? வேலை செய்ய மனமில்லாமல், வீட்டுக்குள் ஓடி ஒளிந்தேன். என்ன ஆச்சி நம்ம மக்களுக்கு? ஏனிந்த புத்தி பேதலிப்பு? மூதாட்டியாரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்? கேள்வி மேல் கேள்வி. மன உளச்சல்.

என் கண்முன் பற்பல காட்சிகள் வந்து போகின்றன. பல வருடங்களுக்கு முன் நடந்த கதையிது. ஆந்திராவில் நடந்தது இது. அங்கு கொத்தடிமை என்பது சர்வ சாதரணம். பல கிராமங்களில் பெண்களின் நிலை ஆண்களால் (தகப்பன் - மகள், தனையன் - தங்கை என்ற பாகுபாடின்றி) எச்சூழ்நிலையில், எவ்வாறெல்லாம் சூறாடப்படுகிறது என்பது பற்றியும், அதை ஒரு பொருட்டாக கருதாத அம்மக்கள் பற்றியும் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. நான் பணி செய்த இடத்தில், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, எங்களை குழுக்களாக பிரித்து, பெண்களிடன் பேசி, அவர்களின் மன புழுக்கத்தை வெளிக் கொணரவும், தற்காப்பு முறைகள் பற்றி விளக்கவும் அனுப்பினார்கள். அவர்கள் சொன்னவையாவும் பதிவில் இடமுடியாதவை. ஆனால் 82 வயது பாட்டியின் செய்தி, இந்த கிராமத்து நிலையை என் கண்முன் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அப்போது இருந்த என் உள்ள வெளிப்பாடு தான் இந்த கிறுக்கல்கள்.

சமீபத்தில் என் நண்பன் 2 வயது பச்சிளம் குழந்தையை தகப்பனே கற்பழித்த கொடுமையை கூறினான். மற்றுமொரு நண்பனிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில், நான் அன்று (பல வருடங்களுக்கு முன்) எழுதிய மனக் குமுறலை பதிவில் எழுதும் படி பல முறை வேண்டிக் கொண்டான். அந்நண்பன் தூண்டுதலால், இன்று அவனுக்காக இப்பதிவு…… முடிந்தால் வாசிக்கவும்.

=============================================

பெண்ணின் நிலை

அழுத்திப் பிடித்து கண்ணத்தில்
முத்தம் தருவார் அடுத்த வீட்டு அண்ணா

கழுத்து துவங்கி புட்டம் வரைத் தடவி
தன் அன்பை தெரிவிப்பார் சித்தப்பா

எப்போதும் மடியிருத்தி
அணைத்துக் கொள்வார் மாமா

அடி பம்பு தண்ணியில் குளிக்கும் சாக்கில்
இடுப்புத் துணி நழுவ விடுவார் தோழியின் தந்தை

பேச்சின் நடுவில் உதட்டின் குவியலை குறிவைப்பார்
புதிதாய் திருமணமான பக்கத்து வீட்டு அக்காளின் கணவன்

முலை தடவுவதில் முன்னுரிமை
கொடுப்பார் பக்கத்து வீட்டு தாத்தா

சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அக்குளுடன்
முலையழுத்தி இறக்கி விடுவார் ரிக்ஷாக்காரர்

இருட்டின் வெளிச்சத்தில் சன்னலோரம்
தூக்கி நிலா காண்பிப்பார் டியூசன் வாத்தியார்

இயலாத நிலையிலும்
யோனி கிழிக்க முற்படுவார் மருத்துவர்

நிலைப் படியில் பயணிப்பினும்
புட்டம் பிடிப்பர் இடி மன்னர்கள்

வேலையின் நடுவில் மார் நடுவை
அளவெடுப்பார் மானேஜர்

இது இன்றும் என்றும் தொடர் கதை
இந்த மண்ணில் பிறந்த பெண்ணின் நிலை

ஆம்! இம்மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்ய வேண்டும்!!!!


-- காட்டாறு

Thursday, July 05, 2007

வாழ்க்கை இரசிப்பதற்கே

இன்று நண்பன் அனுப்பிய மடலைப் பார்த்ததும் ரசித்து சிரித்தேன். மக்களே, இது இரசிக்க மட்டுமே. யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். சிந்திக்க வேண்டாம். சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்.

இப்போ அந்த forward-லிருந்து....

Before Marriage:
============
He : Yes. At last. It was so hard to wait.

She : Do you want me to leave?

He : NO! Don't even think about it.

She : Do you love me?

He : Of course!

She : Have you ever cheated on me?

He : NO! Why you even asking?

She : Will you kiss me?

He : Yes!

She : Will you hit me?

He : No way! I'm not such kind of person!

She : Can I trust you?



Now After Marriage.........

You can read it from bottom to the top !!!!

சேதுக்கரசியாரின் தயவால்:
இங்கே பாருங்க அம்மணி :-)

Tuesday, July 03, 2007

காதலித்துப் பார்

காதலித்துப் பார்
இயற்கை அவளாவாள்; நீ அடிமையாவாய்

காதலித்துப் பார்
கண்ணுக்குள் நிழழாடுவாள்; நெஞ்சில் நடை பயிலுவாள்

காதலித்துப் பார்
அவள் கண்ணசைவில் பிரளயம் நடக்கும்; மீண்டும் பிறப்பாய்

காதலித்துப் பார்
சருகும் உயிர் பெறும்; அசையும் எப்பொருளும் அவளாவாள்

காதலித்துப் பார்
அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வரும்; இரண்டும் அவளிடம் மட்டும் வரும்

காதலித்துப் பார்
மொத்த அழகும் அவளாவாள்; இயற்கையும் சிறுமையாகும்

காதலித்துப் பார்
வயிற்றில் மின்னலடிக்கும்; நா வரளும்

காதலித்துப் பார்
அவளாசை உன்னாசையாகும்; உன் தேவை மறந்து போகும்

காதலித்துப் பார்
சொல்லெல்லாம் கவிதையாம்; சொல்லே அவள் வாய் மொழி தாம்

காதலித்துப் பார்
பேனா கிறுகிறுக்கும்; நீயும் தான்

காதலித்துப் பார்
உலகே உயர்வானதாகும்; எல்லாரும் நல்லவராவர்

காதலித்துப் பார்
நெஞ்சின் வலியும் அழகாகும்; காயமே மருந்தாகும்

காதலித்துப் பார்
எனக்குள்ள வேதனை உனக்கு புரியும்; நான் பெற்ற இன்பம் உனக்கு தெரியும்

காதலித்துப் பார்
மோட்சமடைவாய்; இறப்பாய்; மீண்டும் பிறப்பாய்
-- காட்டாறு

Friday, June 22, 2007

வந்ததும் பேசுவேன் என்றாளே!

வெகு நேரமாகியும் என்னவளைக் காணவில்லை
இன்னும் வரவில்லையோ? வந்தும் பேசவில்லையோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

வேலை அதிகமோ? வேனிற் அதிகமோ?
தலை வலியோ? "தலை"யின் வலியோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னை மறந்தாளோ? எங்கும் விழுந்தாளோ?
என்னை நீங்கினாளோ? என்னுடன் நீங்கினாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னுயிர் என்றாளே; என்னில் பாதி என்றாளே
பாதி தவிக்கிறதே; அலைப்பாய்கிறதே; அறிவாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

நான் உன் கண்மணி என்றாளே; கண்ணின் வலி அறிவாளோ?
அறிந்தும் அமைதி காப்பாளோ? என்ன ஆனது அவளுக்கு?
வந்ததும் பேசுவேன் என்றாளே

அவள் மனம் வேதனைப் படுகிறதோ? ஏன் என் மனம் வலிக்கிறது?
நான் வீணாய் கவலைப் படுகிறேனோ?கற்பனன செய்கிறேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னைப் பைத்தியமாக்குவதில் சுகமோ?
அறியாமல் செய்கிறாளா? அறிந்து தான் செய்கிறாளா?
வந்ததும் பேசுவேன் என்றாளே

புலம்புகிறேனோ? இது தான் காதலோ?
அவள் பேசியதும் என் புலம்பல் நின்று விடுமோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

பேசியதும் கோபம் வருமோ? சந்தோஷம் வருமோ?
கண்ணில் நீர் வழியுமோ? ஆனந்தத்தில் அமைதியாவேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
-- காட்டாறு

Friday, June 15, 2007

டீக்கடைக்காரன்

காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்

சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ

தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்
அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!


– காட்டாறு

Tuesday, June 05, 2007

வலைப் பதிவு நண்பர்களுக்கு சொல்ல மறந்த கதை

பழையன கழிதலும் பத்தி வேலை செய்யுமிடத்தில் பேசப் போய்..... ஓடோடி.... ஓடோடி... ஓடோடி..... வந்திட்டேன் பதிவெழுத. என்னடா சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறாளே.... இவளுக்கு கழண்டுகிச்சான்னு சுத்தியும் ஆணியும் எடுத்துக் கொண்டு, ஆவலுடன் கையோங்கி வரும் என் அருமை நண்பர்களே... சற்றே பொறுங்கள். உங்கள் அன்பு கண்ணில் நீர் வர வைக்கிறது. (கை ஓங்கியவுடன் அழும் குழந்தைக்கு அடி கிடைக்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......).

நான் சொல்ல வந்தது என்னன்னா... வேலை பார்க்கும் இடத்தில் சொன்னாங்க.... தரவுகள்(data) பத்தியும், தரவு வகைகளைப் பத்தியும் தளத்தகைத் திட்டம் (strategic plan) தீட்ட சொன்னார்கள். பழைய ஆவணங்களைத் தூக்கி பரணுல எறிய சொல்லிட்டாங்க. ஆவணங்கள் படைக்கும் போது, அது வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், மறந்து விடுவார்கள் என்று சொன்னதும்..... எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................ வலைப் பதிவில எழுதுறதை கொஞ்ச நாள் விட்டுப்போட்டோமே..... மறுமொழி கூட எழுத நேரமில்லைன்னு இருந்து போட்டோமே............ மனுச மக்கள நெனைக்காம போய்ட்டோமே..... (என்னவொரு பாசமிருந்தா வேலை நேரத்தில கூட உங்க நெனைப்பு வந்திருக்குமின்னு பாத்துக்கோங்க!)................. கொஞ்ச நாள் பேசலைன்னா (எழுதலைன்னா), எப்படி தவித்திருப்பீங்கன்னு பொய் சொல்லாம..... நம்மள மறந்து போகாமலிருக்க (ஹி ஹி ஹி), நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல....


டி


டி


டி
.
.
.
.


ந்

து

..... அட..... இருங்கப்பா.......... மூச்சி வாங்குதப்பா..... இப்பிடி மூச்சி வாங்க அதிரடியாக ஓடி வந்து சொல்ல வந்த விஷயத்த மறந்து போனதுனால..... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடிப் போய்.... ஞாபகம் வருதான்னு இல்லாத, இருக்குற மூளையத் திருகிப் பார்த்தா.... சும்மா ஒரு மொக்கைப் பதிவுப் போடத்தான் இந்த அவசர ஓட்டமின்னு தெரிஞ்சதும்..... அனாவசியமா ஓடி உடற்பயிற்சி செய்தோமேன்னு..... என்னையே நொந்துட்டு, உங்க கிட்டையும் வசவுகள வாங்கிட்டு..... பம்மிப் போய் உட்கார்ந்திருக்கும் அப்பாவியான நான்!

Thursday, May 10, 2007

அத்தையின் மருமகன்


இரண்டு வருட இடைவெளியில் சந்திப்பு
அருமை மருமகன் எனைக் காண வருகிறான்
உள்ளம் உவகையாய் அவனின் வருகை காண
ஞாபகம் இருக்குமா இரு வயதில் களித்த அத்தையை?

உள்ளும் புறமும் தவிக்க
விமான நிலையம் தேய
இங்கும் அங்குமாய் நடை
கால்களும் பாரமாய்

ஆலாய் பறக்கும் மனம்
வந்துவிட மாட்டானா?
நொடிக்கு ஒருமுறை நோட்டம்
வாசல் கதவுகளும் தேய்ந்திருக்கும்

அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!

கொழுக் மொழுக் கன்னங்களுடன்
சிரித்த முகமாய்
துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!

ஓடி வந்து அணைத்தான்
நான் எதிர் பார்க்காத ஒன்று
திக்கு முக்காடித்தான் போனேன்
உடன் வெளிப்பட்ட பாசத்தால்!

நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்

யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்

குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்

அவன் அன்பு.....
ஈடேதும் உண்டோ?
வார்த்தைகளில் அடங்குமோ?
புரிய வைக்க முடியுமோ?

எண்ணினால் உள்ளம் பொங்கும்
கண்களில் நீர் தேங்கும்

-- காட்டாறு