இரண்டாவது முறையாக
என்றும் போல் அன்றும் ஞாயிறு புலர்ந்தது. ஆழ்கடலின் அமைதியாய் என்றும் இருக்கும் என்னுள்ளத்தில் ஒரு குறுகுறுப்பு. யாரோ என்னைத் தேடுவது போல். திடுக் திடுக்கென திரும்பிப் பார்க்கிறேன். இன்று டேவ்வோடு கழிக்கும் நாள். மட மடவென வெளியில் செல்ல ஆயுத்தமானேன். மனசோ நிலைகொள்ளாமல் தவிக்கிறது. ஒரு வேளை டய்ய(யே)ன் என்னைத் தேடுகிறாளோ? சீக்கிரம் கிளம்பினால் அவளையும் இன்று பார்த்து விடலாம். 20 நிமிட ட்ரைவ் தான். 10 நிமிடம் அவளுடனும், ஜேமியுடனும் பேசிவிட்டு, அப்புறமாக டேவ்வின் இருப்பிடம் செல்லலாம். டய்யனை முதன் முதலாய் சந்தித்த நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன. நிறவேற்றுமை காரணமாக என்னை ஏற்றுக் கொள்ள மறுத்த டய்யன். அவளை வழிக்குக் கொண்டுவர தளரா மனதுடன் போராடிய என் கிறுக்குத்தனங்கள். 2 மாத கால போராட்டத்திற்கு பின், இந்த 7 மாதங்களாக எங்களுக்குள் நடந்த பேச்சுக்கள், பறிமாறல்கள், அந்த சுருக்கத்தினூடே அமிழ்ந்து கிடந்த அனுபவக் கிளறல்கள், குழந்தைத்தனமாய் சுயம் கட்டவிழ வைக்கும் சம்பாஷணைகள், என்னை தோழியாகவும், தாயாகவும் பாவித்த அவள் நெருக்கம். ம்ம்ம்… என் மனசு முழுவது டய்யன் தான். ஒருவேளை என்னை அவளைக் காண வா என அழைக்கிறாளோ?
அலுவலக கட்டிடம் முன்னிருந்த ஊழியர் என்னை ஆச்சர்யம் கலந்த வேதனையோடு பார்க்கிறாள். ஏன்? என்ன ஆச்சி? அவளிடம் என்ன கேட்டேன், அவள் என்ன பதில் சொன்னாள் என அறிவிற்கு எட்டவில்லை. இருவரும் அமைதியாய் டய்யனின் அறைக்கு சென்றோம். வெற்று விழிகளுடன் ஜேமி வாயிலில். எல்லாமே புரிந்து போனது. புரிந்ததும், மனது திரும்பவும் அமைதியானது. கதவைத் திறந்ததும், அவளுக்கே உரித்தான, நேர்த்தியாக உடை உடுத்தி, கள்ளப் பார்வையில் சிரித்தவளாய், "எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்" என அவள் வாய் முணுமுணுக்க, படுத்தவாறே கைகளை நீட்டினாள். கைப் பற்றியதும், கண்கள் ஆயிரம் வார்த்தைகள் ஒரு சேரப் பேசின. ஆதரவாய் என் கரங்கள் அவளின் கரத்தை தடவிக் கொடுத்த வண்ணம் இருக்க, அமைதியாய் கண்மூடினாள். என் மனமோ சுயநலத்தின் மறுபிறவியாய், "டய்யன், மறந்துவிடாதே நாம் பேசிய கதைகளை. யாருக்கு அழைப்பு முதலில் வந்தாலும், அடுத்தவருக்கு "அதை"ப் பற்றி உணர்த்த வேண்டும் என உறுதி மொழியெடுத்ததை" என முணுமுணுத்தது. சட்டென மறைந்த சுயநலத்தில் பிறந்தது மீண்டும் ஆழ் அமைதி. என் கைகளை விடுவித்து, மெல்ல வாயிற்கதவருகே சென்று திரும்பிப் பார்த்தேன். "மீண்டும் உனைச் சேர்கையில், நாம் சிரித்து மகிழலாம் தோழி. போய், மீண்டும் வா."
வெளியே ஜேமியின் வெற்று விழிகள் நீர் சொறிந்த வண்ணம். என்னை இறுகத் தழுவிய அவர் தேம்பத் தொடங்கினார். பேச்சினூடே, "நீ வருவாய் என டய்யன் நிச்சயமாக நம்பினாள். எல்லோரும் நீ அவளை அடுத்த வாரம் தான் பார்க்க வருவாய் என ஆசுவாசப் படுத்த முயன்ற போதும் அவள் கேட்கவில்லை" என்றார்.
பின்குறிப்பு:
டய்யனுக்கு (Diane) வயது 85. உற்ற தோழியாய் எங்கள் 6 மாத கால உறவு அவளை ஒருமையில் அழைக்க வைத்தது. ஜேமிக்கு(James alias Jamie) 97 வயது. நாங்கள் மூவரும் பேச ஆரம்பித்தால், அந்த 2 மணி நேர கால அவகாசம் பத்தாது.
25 பேர் மறுமொழிந்துள்ளனர்:
....சட்டென மறைந்த சுயநலத்தில் பிறந்தது மீண்டும் ஆழ் அமைதி. என் கைகளை விடுவித்து, மெல்ல வாயிற்கதவருகே சென்று திரும்பிப் பார்த்தேன். "மீண்டும் உனைச் சேர்கையில், நாம் சிரித்து மகிழலாம் தோழி. போய், மீண்டும் வா.".....
காட்சிகளாய் ஓடிய வரிகள்....மிக பத்திரமாய் பாதுகாக்கப்பட வேண்டிய தருணங்கள்....
என்னது 2 மணி நேரம் பத்தாதா?
வாய் வலிக்காதா?? :-))
"மீண்டும் உனைச் சேர்கையில், நாம் சிரித்து மகிழலாம் தோழி. போய், மீண்டும் வா."
வலிகளையும் மீறிய நம்பிக்கை வரிகள்..நல்லதொரு வழியனுப்புதல்..காட்டாறு..பாராட்டுகள்.
அக்கா சரியாக புரியல...ஆனா ஏதே ஒரு இழப்பு மட்டும் நடந்திருக்குன்னு நினைக்கிறேன். ;(
//கைப் பற்றியதும், கண்கள் ஆயிரம் வார்த்தைகள் ஒரு சேரப் பேசின. ஆதரவாய் என் கரங்கள் அவளின் கரத்தை தடவிக் கொடுத்த வண்ணம் இருக்க, அமைதியாய் கண்மூடினாள்.//
ஒரு ஃப்ளாஷ் பேக்
காலன் அழைத்த நேரம்
கடுகி நெருங்கி வர
கலங்கா நெஞ்சுடனே
எந்தாய் எனை அழைத்து
என் கண்கள் நீர் துடைத்து
"பாசங்கள் பிரிவதில்லை = அவைகள்
புதிதாகப் பிறப்பதுமில்லை."
என்றாள்.
உடல் பிரிந்தாள்..
அன்று சொன்ன என் அன்னை
இன்று உங்கள் பதிவினுள்ளே
பிரகாசமாகத் திகழ்கின்றாள்.
கால, தேச, மத, நிறங்கள்
சொந்தங்களுக்குண்டு
பந்தங்களுக்கில்லை.
சுப்புரத்தினம்
தஞ்சை.
இது நிஜமா? :((
ஆறு, எப்படியோ அந்த டய்யனை சந்தோஷமா வழி அனுப்பி வைச்சிட்டீங்க. அழகான நடையில் விவரிப்புகள். அனைவரையும் அந்த அறைக்குள் நடப்பதனை பார்த்துக் கொண்டிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.
என்ன டெம்ப்ளேட் எல்லாம் பொதுப் பொலிவுடன் "நான் யார்?" அப்படின்னு வந்து நிக்குது?
நெகிழ்ச்சியான நிகழ்வு, அனுபவம்
சில சமயம் இதையத்தில் இருந்து வரும் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு குடுத்தால் இதைப்போல தருணங்களை தவர விட மாட்டோம்..
என்ன ஒரு அமைதியான வழிஅனுப்புதல். இருந்தும் நெஞ்சம் கனக்கிறதே.
அருமையான நிகழ்வு. காட்டாறு,
அமைதி கொள்ளட்டும் உங்கள் தோழி.
\\மங்கை said...
நெகிழ்ச்சியான நிகழ்வு, அனுபவம்
சில சமயம் இதயத்தில் இருந்து வரும் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு குடுத்தால் இதைப்போல தருணங்களை தவற விட மாட்டோம்..//
வழிமொழிகிறேன் காட்டாறு..
// வடுவூர் குமார் said...
என்னது 2 மணி நேரம் பத்தாதா?
வாய் வலிக்காதா?? :-))
//
அவங்களை இரு வாரத்துக்கு ஒரு முறை தான் பார்க்க முடியும். சின்ன சீட்டுல மறக்காம இருக்குறதுக்காக எழுதி வச்சிருப்பாங்க. எல்லாம் நம்ம சொல்லிக் குடுத்தது தான். ;-)
// கோபிநாத் said...
அக்கா சரியாக புரியல...ஆனா ஏதே ஒரு இழப்பு மட்டும் நடந்திருக்குன்னு நினைக்கிறேன். ;(
//
பின்னூட்டமெல்லாம் வாசிச்சிங்களா? இப்போ புரிஞ்சிச்சா. முதியோர் இல்லத்துல, என்னோட நட்பா இருந்த ஒரு பெரியவங்க இறந்துட்டாங்க.
// sury said...
கால, தேச, மத, நிறங்கள்
சொந்தங்களுக்குண்டு
பந்தங்களுக்கில்லை.
//
உங்க ஃப்ளாஷ்பேக் விவரித்த விதம் அழகா இருந்தது. சரியக சொன்னீங்க... பந்தங்கள் பற்றி!
// கண்மணி said...
இது நிஜமா? :((
//
நெசமாவே.
// மங்கை said...
நெகிழ்ச்சியான நிகழ்வு, அனுபவம்
சில சமயம் இதையத்தில் இருந்து வரும் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு குடுத்தால் இதைப்போல தருணங்களை தவர விட மாட்டோம்..
//
ஆமா மங்கை. கேரி சுக்காவ்ன்னு (Gary Zukav) ஒருத்தர் ஏகமா intuition, clairvoyance, etc பத்தி அருமையா, எளிமையா விளக்கியிருப்பாரு. நமக்குள் இருக்கும் இந்த திறமை(?)யை நாம் தான் வளர்த்துக் கொள்ளனும்.
தலவானி தலவானியா பொஸ்தகம் பார்த்தப்பவே நெனச்சேன்....
Gary Zukav எந்த முதியோர் இல்லத்துல புடிச்சீங்க....?
படித்தபின் ... சொல்லதான் வார்த்தைகள் இல்லை..
சமீபத்தில நடந்ததாங்க??
பி.கு: Template எல்லாம் கலக்கலா இருக்கு!!
// இரண்டாம் சொக்கன் said...
தலவானி தலவானியா பொஸ்தகம் பார்த்தப்பவே நெனச்சேன்....
Gary Zukav எந்த முதியோர் இல்லத்துல புடிச்சீங்க....?
//
முதியோர் இல்லத்திலே இல்ல... எங்கூரு லைப்ரரில. :-)
// தென்றல் said...
படித்தபின் ... சொல்லதான் வார்த்தைகள் இல்லை..
சமீபத்தில நடந்ததாங்க??
பி.கு: Template எல்லாம் கலக்கலா இருக்கு!!
//
ம்ம்ம்ம்.... ஜனவரி 13.
பின்குறிப்பு:
என்னோட தோழர் பாபு சொன்னாரு... its time to change the template. It is boring to see the same template. So here you go.... :-)
வயது குறிப்பிடபட்டதின் நோக்கம் என்ன.. வயது தோழமையை மட்டுபடுத்தலாம் என பொருள் கொள்ளலாமா..? குறைந்த வயதுடைய நட்புகளின் நடுவே உணர்வு ரீதியான தொடர்ப்பு இருக்காதா...
// G.Muthukumar said...
வயது குறிப்பிடபட்டதின் நோக்கம் என்ன.. வயது தோழமையை மட்டுபடுத்தலாம் என பொருள் கொள்ளலாமா..? குறைந்த வயதுடைய நட்புகளின் நடுவே உணர்வு ரீதியான தொடர்ப்பு இருக்காதா...
//
சரியான கேள்வி முத்துக்குமார். நான் முன்னர் என் அண்ணன் மனைவியின் இறப்பையும், என் மருமகனின் இறப்பையும் குறித்து வலையில் பதிந்த போது என்னுடன் சேர்ந்து என் வலை நண்பர்களும் மனம் வருந்தினர். சிலருக்கு அது தாங்கவொன்னா மனவருத்தத்தை கொடுத்தது. அவர்களுக்காவே இந்த வயது குறிப்பு. நீங்கள் முதன் முதலில் என் வலைப்பக்கம் வந்ததால் அறியும் வாய்ப்பில்லையாதலால் உங்களிடமிருந்து இந்த கேள்வி.
உங்கள் கேள்விக்கு என் மனதில் தோன்றியது...பொருள் கொள்வது அவரவர் கருத்துகளின்/எண்ணங்களின் வளர்ச்சிக்கேற்ப இருக்கலாம். ஒவ்வொரு செயலுக்கும் காரண காரியம் இருக்கும் என பொருள் கொண்டால், எதுவுமே சரியாக அமையாது என்பது என்னுடைய எண்ணம்.
//உங்கள் கேள்விக்கு என் மனதில் தோன்றியது...பொருள் கொள்வது அவரவர் கருத்துகளின்/எண்ணங்களின் வளர்ச்சிக்கேற்ப இருக்கலாம்.//
"காட்டாறு" பெயரில் மட்டுமே !
பதில் அளிப்பதிலே
தெளிந்த நீர் ஓடை.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
//அவளை வழிக்குக் கொண்டுவர தளரா மனதுடன் போராடிய என் கிறுக்குத்தனங்கள். 2 மாத கால போராட்டத்திற்கு பின், இந்த 7 மாதங்களாக எங்களுக்குள் நடந்த பேச்சுக்கள், பறிமாறல்கள், அந்த சுருக்கத்தினூடே அமிழ்ந்து கிடந்த அனுபவக் கிளறல்கள், குழந்தைத்தனமாய் சுயம் கட்டவிழ வைக்கும் சம்பாஷணைகள், என்னை தோழியாகவும், தாயாகவும் பாவித்த அவள் நெருக்கம். ம்ம்ம்… என் மனசு முழுவது டய்யன் தான். //
படித்து முடித்தவுடன் என் மனசு முழுவதும் கூட டய்யன்தான்!
அன்புடன் அருணா
//Thekkikattan|தெகா said...
ஆறு, எப்படியோ அந்த டய்யனை சந்தோஷமா வழி அனுப்பி வைச்சிட்டீங்க. அழகான நடையில் விவரிப்புகள். அனைவரையும் அந்த அறைக்குள் நடப்பதனை பார்த்துக் கொண்டிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.
என்ன டெம்ப்ளேட் எல்லாம் பொதுப் பொலிவுடன் "நான் யார்?" அப்படின்னு வந்து நிக்குது?
//
நன்றி தெகா. 'காடு'-ஐ விட்டு ஆறு என்று அழைத்தது... காட்டுக்கு அனுப்பி வைத்ததாலா? ம்ம்.. நண்பர் ஒருவரிடம் இம்மரணம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அவர் கண்டிப்பாக பதிவாக எழுது என அன்புடன்(?) கேட்டுக் கொண்டார். மனதில் தோன்றிய எண்ணங்களை சிதைக்காமல் கொடுத்ததால் நடை நன்றாக இருக்குதோ என்னவோ.
டெம்ப்ளேட் விளக்கம் ஏற்கனவே கொடுத்து விட்டேன். :-)
// aruna said...
படித்து முடித்தவுடன் என் மனசு முழுவதும் கூட டய்யன்தான்!
அன்புடன் அருணா
//
வாங்க அருணா. முதன்முதல்ல வந்திருக்கீங்க. வாங்க. டய்யன் இப்போ எல்லோருடைய மனசுலேயும் வாழ்வது மகிழ்ச்சியா தான் இருக்குது.
Post a Comment