மரணத்தின் சுவடுகள்
இரண்டாம் அறிமுகம் தாத்தா. என் துறு துறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாது எதற்கெடுத்தாலும் திட்டும் என் தாத்தா. விவரம் புரிந்த வயது. 2 நாட்களாக காத்திருந்த மரணம். மரணத்தை வரவேற்றுக் காத்திருந்தது விளங்காத இளம் மனசு. இடைவிடாது ஒலித்த தொலைப்பேசி அச்சுறுத்தியது. ஊரிலிருந்து வந்த அப்பாவின் கதறலில் அரைகுறையாக புரிந்தது.
மரணத்தின் பயம் புரிந்த வயதில் மூன்றாவது/நான்காவது/ஐந்தாவது மரணங்கள். மூவரும் மனதுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். மரணம் எப்படி அறிவிக்கப்பட்டது? திடீரென்று, ஒரு நடுநிசியில், சில்லென ஊடுருவும் பனிப்பொழுதில், தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும். தொலைப்பேசியின் ஒலியும், அதனூடே கொண்டுவரும் செய்தியும் இது தான் என மனம் நம்பத் துவங்குகிறது.
வார்த்தைப் பிரயோகத்திலே உள்ளும் புறமும் நடுங்க ஆரம்பிக்கிறது. மனதிற்கருகிலா பிறர் மரணத்தை கேட்கும் போதோ அது செய்தியாகி போய்கிறது. சுவடுகள் ஏதுமில்லா மரணமாகிப் போகிறது. சில மரணம் கேள்விகள் பிறப்பிடமாகிறது. சில மரணம் விலகி நின்று பார்க்க வைக்கிறது. சில மரணம் நம்மை சீண்டிப் பார்க்கிறது. புத்தகம் சொல்லும் ஏதும் உண்மையில்லாமல் போகிறது. வார்த்தைகள் ரசனையற்றதாக போகிறது. ஏன் மரணம் மட்டுமே பல முகம் கொண்டதாக தெரியப் படுகிறது?
மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. வாழ்க்கையின் சுவைதனை அறிந்த பின்னரும் மரணம் எதிர்கொள்ள முடியா எதிரியாகவே தெரிகிறது. நம்முடனே பிறந்து, நம்முடனேயே வளர்ந்து, கடேசியில் நம்மை முந்திக்கொள்கிறது மரணம்.
மரணமும், அது குறித்தான பயமும் ஏன்? அது அறியப்படாத இரகசியமாக இருப்பதாலா? நம்முள் இருந்து, நம்மை வெல்வதாலா? அதன் சுவையை உணர வேண்டினாலும், நம்மால் முடியாது போவதாலா? மரணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நம் மனம், மரணம், தன் மிச்சமாக, எதையாவது விட்டுச்செல்கிறது எனக் கொள்கிறது. மீளாத் துயரம், அழுகை, தன்னிரக்கம், ஏக்கங்கள், பிரிவுத் துயர், இன்ன பிற. மரணத்தை ஏற்கும் வரையில் தான் அதன் தொடர்ச்சியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதை மறுக்கிறது. அழுகையின் சுவடு ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போகிறது. மீளாத் துயர் மீளும் போது குற்றவுணர்வு ஆட்டிப் படைக்கிறது. தன்னிரக்கம் விலகும் போது தலை நிமிர்ந்து மரணத்தை பார்க்க முடிகிறது. ஏக்கங்கள் வேற்றுரு கொள்கிறது. ஆக மரணத்தின் சுவடுகளாய் சித்தரித்தவை யாவும் மரணத்தின் சுவடுகளே அல்ல என்றாகிறது.
மரணத்தை ருசிக்கும் எண்ணம் மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கிறது. அதன் மேல் ரசனையும், மாய சுழற்சியும் வந்து போகிறது. நெருக்கமானவர்களின் மரணத்தைக் கூட ஒட்டுதல் இல்லாது காண ஆயுத்தமாகிறது. மரணத்தை இரசிக்கும் வேளையில், மரணம் பிறப்புக்கு சமானமாகிறது. விகாரமாய் தெரிந்த மரணம் வியப்பான பிறப்பாகிறது. சுவடே இல்லாத பாதையாகிறது.































