Tuesday, December 11, 2007

தாயுமானவள்


நீயும் என் அன்னையே

உன்னை கண்ட இன்று
காலவேந்தன் பின்னோக்கி இழுத்துச் செல்ல
மெல்ல விரிந்து மனதில் தங்கிய காட்சி
உள்ளம் தான் எத்துணை ஆரவாரிக்கிறது

அரைக்கால் டவுசருடன் நான் திரிந்த அந்த அருமையான நாட்கள். கால் இறுதி விடுமுறை என்னை கூத்தாட வைக்க, தலைதெறிக்க வீடு சென்று, புத்தக மூட்டைதனை தூக்கியெறிந்து, கால் தரை படாது ஓடிய அக்கணம், இரு கரங்கள் எனை இழுத்தணைத்தது. உனைக் கண்டதும் விரைந்து ஓடத் துவங்க, விரட்டி விரட்டி எனைத் தொடர்ந்து, வெட்க மிகு, என் தாயின் முந்தானை தேட, கேலியுடன் தான் அவள் மிருதுவாக எனை அணைக்க, பெரியவனாக நான் தள்ளிவிட்டேன் அவளை. அவள் வரவெண்ணி களித்திருந்த போதிடினும், அவள் வந்ததும் ஓரக்கண் பார்வையாய் நான். நான் என் சகஜ நிலைக்கு வர, அவள் செய்த குறும்புகள், என்னையும் அறியாமல் சிரிக்கிறேன் இன்று.

பாட்டி தான் அவள் தன் பக்கம் இழுத்து, தலை நிறைய எண்ணெய் கொட்டிவிட, அவள் முகம் போன போக்கு. அப்பப்பா… காண கண் கோடி வேண்டும். என் சிரிப்பு அவளை வெறுப்பேற்ற, குமுறினாள் தன் தாயிடம். தாழம்பூ வைத்து பின்னலிட்ட அவள் ஜடை, என் கைவசம் சிக்கித் தவிக்க வைக்கும் என் குறும்பு.



காட்டுப் புலியென்றும், கிணற்றுக்குள் பேயென்றும் கதை சொல்லி கிடுகிடுக்க வைப்பாள். பயந்து நான் அலறவே, தட்டிக் கொடுத்து உறங்க வைப்பாள்; கால் போன போக்கிலே, காட்டெருமை கதை பேசி கை பிடித்தே நடந்திடுவாள்; பால் சோறு ஊட்டிடுவாள். யாரும் அறியா வண்ணம் ஒரு கவளம் உண்டிடுவாள்.


கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது.

மாப்பிள்ளை என்றனர். நாணி கவிழ்ந்த அவளை கேலி செய்தனர். புதியதாய் அவள் எனக்கு. திருமணம் முடிந்தது, புதியனளாய் அவள். நடையில் துள்ளல் இல்லை, வார்த்தையில் கேலி இல்லை. என்னை இழுத்து அணைப்பாளும் இல்லை. காலம் தான் மாறிப் போனது.

கேலி செய்யும் பருவம் எனதானது. கேட்டு மகிழும் பருவம் அவளானது. நாம் கேட்காமலே மாறிப்போனது எப்போது? காளையாய் நான். கல்லூரி கதை சொல்ல, புதிதாய் கேட்பாள்; எத்தனை முறை கேட்டிருப்பினும், வாய் விட்டு சிரிப்பாள் முதல் முறை கேட்பவள் போல். அவள் சிரிக்கவே பல பொய் கதைகள் உருவான காலமும் உண்டு. பொய்யென அறிந்தும், மெய்யென கனிவுடன் கேட்பாள். கதை கதையாய் நான் அளந்துவிட, கொல்லென சிரித்து, கண்ணீர் துடைப்பாள். அவளை சிரிக்க வைப்பதில் எனக்கின்பம்.

மறைத்து வைத்து காசு கொடுப்பாள். மறுத்திடின் முறைத்திடுவாள். வளரும் பிள்ளை என்பாள்; வளர்ந்த பிள்ளையென அறிந்திடினும். அவள் வீட்டு அவலம் மறைத்து, கவள உருண்டை என் வாயில் திணிப்பாள்.


என் ஆசைகளும், கனவுகளும் அவளறிவாள். அவளுள் புதைந்த ஆசைகள் என்னவோ? கனவுகள் என்ன ஆனதோ? நானும் கேட்டதில்லை; அவளும் சொன்னதில்லை. அவளுக்கென கனவுகள் இல்லாமலா இருந்திருக்கும்?

பதின்ம மாத குழந்தையின் த்தைக்கு கொண்டாடியவள்
பத்து வயதில் விரட்டி ஓடி மகிழ்ந்தவள்
பதினைந்து வயதில் சரிக்கு சரி வாதிட்டவள்
பதினெட்டு வயதில் தோழியானவள்
என்றென்றும் என் தாயும் ஆனவள்
எனதருமை அத்தையம்மா!
இன்று உன்னைக் கண்டதும், என்னை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சி; தோழியை கண்டெடுத்த துள்ளல். எனதருமை அத்தையே, நீயும் என் அன்னைதான் என்பதை உன்னால் மறக்கவோ, மறுக்கவோ முடியுமோ?

அன்புடன்,
என் செல்ல அத்தையின்
உன் செல்ல மருமகன்.

17 பேர் மறுமொழிந்துள்ளனர்:

Anonymous said...

ஆத்தா....

இப்பலலாம் ஒரே கன்ஃப்யூசனா கீது...

இன்னான்னா இப்பல்லாம் என்னோட டமில் டேமேஜிங்கா ஆய்ட்டு இருக்கா...அல்லாங்காட்டி உங்க தமில் அறிவு ஜிவ்வுனு பறக்குதான்னு...

மெய்யாலுமே சொல்றேன்...நல்லாருக்கு,

அப்பால ஒரு ரெக்வஸ்ட்....இந்த கவுத இல்ல அது எளுதுங்க,நானெல்லாம் உங்க கவுதக்கு பேஃனாக்கும்...ஹி..ஹி..

said...

அக்கா

பாராட்ட வார்த்தைகளே இல்லை..அனுபவச்சி உணர்ச்சி பூர்வமா எழுதியுருக்கீங்க!;)

வரிக்கு வரி பாராட்ட வேண்டிய பதிவு இது. அப்படியே என் அத்தைமார் கூட்டத்தில் போயிட்டு வந்தமாதிரி இருக்கு :)

said...

\\பதின்ம மாத குழந்தையின் த்தைக்கு கொண்டாடியவள்
பத்து வயதில் விரட்டி ஓடி மகிழ்ந்தவள்
பதினைந்து வயதில் சரிக்கு சரி வாதிட்டவள்
பதினெட்டு வயதில் தோழியானவள்
என்றென்றும் என் தாயும் ஆனவள்
எனதருமை அத்தையம்மா\\

ம்ம்ம்...கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்களே ;))

நன்றி ;)

said...

அருமையா இருக்கு... அழகா எழுதறீங்கப்பா...எனக்கும் சின்ன வயசுல பக்கத்து வீட்டு அக்கா என்னுடன் பழகின நினைவுகள்..

சொந்தம் இல்லை என்றாலும் ஒரு வித பந்தம்.. சொர்க்கமா இருந்த நாட்கள் அது...என் மேல பாசமா இருக்குறத நினச்சு கர்வமா நினச்சதப்பேன்

said...

அத்தை மடி மெத்தையடின்னு
ஆடி விளையாடி இருந்தீங்க போல:-)

சில உறவுகள் இப்படி உயிர் பிணைப்பா ஆயிருதுல்லே?

பிடிச்சிருக்கு.

said...

//இரண்டாம் சொக்கன் said...
ஆத்தா....

இப்பலலாம் ஒரே கன்ஃப்யூசனா கீது...

இன்னான்னா இப்பல்லாம் என்னோட டமில் டேமேஜிங்கா ஆய்ட்டு இருக்கா...அல்லாங்காட்டி உங்க தமில் அறிவு ஜிவ்வுனு பறக்குதான்னு...

மெய்யாலுமே சொல்றேன்...நல்லாருக்கு,
//
சொக்கரே... உங்க டமில் பக்கம் நாமெல்லாம் வர முடியுமா? நீங்க யாரு? ஆனாலும் பெரிய மனசு பண்ணி பாராட்டுனீங்க பாருங்க.. அங்க தான் நிக்குறீங்க. டாங்ஸுங்க.

//இரண்டாம் சொக்கன் said...
அப்பால ஒரு ரெக்வஸ்ட்....இந்த கவுத இல்ல அது எளுதுங்க,நானெல்லாம் உங்க கவுதக்கு பேஃனாக்கும்...ஹி..ஹி..
//
இந்த ரவுசு தானே வேணாங்குறது... 3 கவுத போட்டோமே... இந்த பக்கமே ஆள காணோம். வாசிக்கலையாக்கும். அது சரி. ஆனாலும், நேயர் விருப்பத்த நெறைவேத்திருவோமில்ல.

said...

//கோபிநாத் said...
அக்கா

பாராட்ட வார்த்தைகளே இல்லை..அனுபவச்சி உணர்ச்சி பூர்வமா எழுதியுருக்கீங்க!;)

வரிக்கு வரி பாராட்ட வேண்டிய பதிவு இது. அப்படியே என் அத்தைமார் கூட்டத்தில் போயிட்டு வந்தமாதிரி இருக்கு :)

//

இது எழுதுனதே உங்களுக்காக தானே. அத்தையின் மருமகன் படிச்சிட்டு...எப்போ மருமகன் பார்வையிலேயிருந்து எழுதப் போறீங்கன்னு கேட்டு கேட்டே எழுத வச்சிட்டீங்களே அப்பூ.

said...

//மங்கை said...
அருமையா இருக்கு... அழகா எழுதறீங்கப்பா...எனக்கும் சின்ன வயசுல பக்கத்து வீட்டு அக்கா என்னுடன் பழகின நினைவுகள்..

சொந்தம் இல்லை என்றாலும் ஒரு வித பந்தம்.. சொர்க்கமா இருந்த நாட்கள் அது...என் மேல பாசமா இருக்குறத நினச்சு கர்வமா நினச்சதப்பேன்
//

சுத்திப்போடுங்க கொசுவர்த்திய... எழுதுங்க அந்தகால நினைவுகளை.. தொடராகட்டுமே. :)

said...

//துளசி கோபால் said...
அத்தை மடி மெத்தையடின்னு
ஆடி விளையாடி இருந்தீங்க போல:-)

சில உறவுகள் இப்படி உயிர் பிணைப்பா ஆயிருதுல்லே?

பிடிச்சிருக்கு.
//

என்னோட அனுபவம் மட்டுமில்லைங்க டீச்சர். கோபி அண்ணாச்சி தான் எப்போ எப்போன்னு கேட்டுட்டு இருந்தாங்க... அதனால அவங்க பார்வைல இருந்து எழுதிட்டேன். அப்படி சொல்லப் போனா பதிவின் கரு அவருது தான். வடிவாக்கம் வேணா... நான்னு மார் தட்டிக்க வேண்டியது தான்.

said...

சூப்பர்.

பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

said...

அந்த கரடி படம் அசத்தலா இருக்கு :)

said...

//துளசி கோபால் said...
அத்தை மடி மெத்தையடின்னு
ஆடி விளையாடி இருந்தீங்க போல:-)

சில உறவுகள் இப்படி உயிர் பிணைப்பா ஆயிருதுல்லே?

பிடிச்சிருக்கு.
//

repeat

said...

என்னடா பாலகுமாரன் நாவலானு வந்தா ...

நல்லா இருக்குங்கோவ்!!

said...

// நாகை சிவா said...
சூப்பர்.

பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.
//

கொசுவர்த்தி சுத்திப் போடுங்க. அதை பதிவா போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்குவோமில்ல. :)

// நாகை சிவா said...
அந்த கரடி படம் அசத்தலா இருக்கு :)
//
நன்றிங்கோ...

said...

யப்பா சென்ஷி... உங்க ரிப்பீட்டுக்கு நன்றியப்பா...

// தென்றல் said...
என்னடா பாலகுமாரன் நாவலானு வந்தா ...

நல்லா இருக்குங்கோவ்!!
//

தென்றல் அண்ணாச்சி.. பாலகுமாரன் நாவல் தாயுமானவன் தானுங்களே... மாத்திட்டாங்களா? ;-)

said...

படித்ததும் என் அத்தைகள் ஞாபகம் வந்தது..காட்டாறு நல்ல பொருத்தமான பெயர்..வாழ்த்துகள்..

said...

காட்டாற்றின் கற்பனை வெள்ளத்திற்கு அணைகள் கட்ட முடியாது. மலரும் நினைவுகளாக, காட்டாறு அருவியாய்க் கொட்டுகிறது. அனுபவித்து எழுதியது.
அருமை அருமை. வாழ்த்துகள்.