Friday, May 08, 2009

வளருங்கப்பா

எங்க அப்பா எப்பவும் சொல்லுவாங்க. தவறை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருப்பவன் தான் தவறு செய்யனும். அப்படி தைரியம் இல்லைன்னா, பொய் மேல் பொய் புனைந்து பொய்யனாகி விடுவான்னு, பின்ன எதுக்கும் (பொய்க்கு தவிர) லாயக்கில்லாதவனாகி விடுவான்னு. (இந்த வரி நான் சேர்த்துகிட்டேன்). :-D தவறு செய்பவனை கண்டிக்க தவறுவதும் தவறாமே. தான் செய்த தவறை உணரும் போது, அவன்/அவள் வளர்கிறானாம். இடித்துரைத்தால் அவ்வளர்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுவீங்க. இதெல்லாம் எதுக்கு சொல்லுறேன்னு எனக்கு தெரியலப்பா. ஆனா பாலபாரதி எழுதிய பதிவை படித்ததும் கன்னா பின்னான்னு தலைக்கு ஏறுது. அட ஏனப்பா? சின்ன புள்ள மாதிரின்னு. ஏன்னு தெரியுமா? தனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தா, பிரச்சனைக்குரியவரை நேரடியாக அணுகுவது நல்லது. உங்க ரெண்டு பேருக்கும் தீர்க்க முடியவில்லையா? அப்போ பொதுவா கொண்டு வரும் தைரியமும் இருக்கனும். நீங்க அதுக்காக பதிவு எழுதறதை நிறுத்திட்டேன்னு சொல்லுறது…. என்ன சொல்லுறதுன்னு தெரியல. பிரச்சனையை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தால், மனசை அலைக்கழித்து கொண்டு தான் இருக்கும். அப்பப்போ தட்டி கேளுங்க. நிம்மதி வரும். நிம்மதியோட வாழலாம்.

இதைத்தான் (வளருங்கப்பா) நானும் பல பேருகிட்ட சொல்லுறேன். கேக்க மாட்டேன்னு அடம். என்ன சொல்ல அவங்களை. பொண்ணுங்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகமாமே? அப்படியா? அப்போ கொஞ்சமாவது உபயோகிக்கலாமே அதை. இதை சொல்ல தான் இந்த பதிவு. இங்கு தவறு என பேசுவது சாட், ப்ளாக் இவற்றை மட்டும் மனதில் கொண்டு தான். சரியா?

இரண்டு கை தட்டினா தான் ஓசை மக்களே. நான் உங்களுக்கு சொல்லனுமின்னு இல்ல. நீங்க தானே தொலைபேசி எண் கொடுக்குறீங்க. சாட் பண்ணுறீங்க. அப்புறம் என்ன? பேசுங்க. வேண்டாமின்னு சொல்லல. உங்கள் குடும்ப விஷயம் பற்றி தான் பேச வேண்டுமா? எவ்வளவோ நாட்டில் நடக்குதே. அதை பேசலாமே. சரியப்பா… வீட்டு விஷயத்தை பேசுறீங்க. அந்த விஷயம் வெளில வந்தா பரவாயில்லைன்னு தோணியதுன்னா பேசுங்க. இல்லைன்னா ஏன் பேசனும்? உங்களில் வெளி வரும் எண்ணங்கள் வார்த்தையாக மாறும் போது பொது உடைமை ஆயிபோச்சே. அவர் வரம்பு மீறுவதாய் தோணுதா? சொல்லிப் பாருங்க. அதுவும் நடக்கலையா இருக்கவே இருக்கு ப்ளாக் பண்ணுறது.

சரி.. இதெல்லாம் மீறி போயாச்சி. நல்ல நண்பர்கள் ஆயிட்டீங்க. வீட்டுக்கு வர போக அல்லது தொலை பேசியில் கதை அடிக்கும் அளவுக்கு வளர்ந்தாச்சி. இப்போ அந்த நண்பரோட செயல்களில் மாற்றம் பாக்குறீங்க. பயத்தாலோ, கலக்கத்தாலோ இல்லை அதிர்ச்சியிலோ இரண்டு முறை அமைதியா இருக்குறீங்க. எல்லை மீறுதல் தொடருது. என்ன செய்யலாம் இப்போ. அவரின் செயல் உங்களுக்கு மன அயர்ச்சி கொண்டு வருவதை சொல்லுங்க. அப்படியும் தொடர்ந்தால், உங்களுக்கு பரிச்சியமான முறையில் அவருக்கு ஷாக் கொடுங்க. அவர் தொடர்பை துண்டியுங்கள். உங்கள் மன நிம்மதி தவிர வேறொன்றும் முக்கியமில்லை நண்பர்களே. அவர் மேலும் துன்பம் கொடுத்தால் இருக்கவே இருக்கு ப்ளாக். போட்டு தாக்குங்க. நேரடியா சொல்லுறது மாதிரி பலன் கொடுப்பது வேறேதும் இல்லைங்க. மறைமுகமா பேச வேண்டிய விஷயமில்லை. நீங்க பூனைக்கு மணி கட்ட பயந்தால், உங்களை போல் ப்ளாக் பரிச்சயமில்லாத, உங்க அளவுக்கு சுதந்திரம் இல்லாத, உங்க அளவுக்கு படிக்காத, பல தோழியருக்கு இவரால் மன சுமை வந்திருந்தால்; வரவிருந்தால்.

முடிக்கும் முன் ஒன்னு சொல்ல விரும்புறேன். பல வருடங்களுக்கு முன் நான் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப் பட்ட, கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு (10-17 வயதுக்குட்பட்ட) கவுன்சிலிங் பண்ணிட்டு இருந்தேன். அங்கு நான் கேட்ட சொல், எச்சூழ்நிலைக்கும், எல்லாருக்கும் பொருந்தும். “பொண்ணுங்க அப்படி தான் டா வேணாமின்னு சொல்லுவாங்க. நீதான் பார்த்து செய்யனும் என்றும்; பொண்ணுங்க வேண்டாமின்னு சொன்னா அது அர்த்தமில்லைன்னும், வெட்கத்தால் வந்தது எனவும்” பொய் போர்வை கொண்டு ஆண்மக்கள் வளர்க்கப் படுகிறார்கள். அங்கே படிப்பறிவு இல்லாத மக்கள். ஆனா ப்ளாக் எழுத வரும் நீங்க படிச்சவங்க. இதனால தான் சொல்லுறேன். இப்படி தான் இடித்துக் காட்ட வேண்டுமென நான் சொல்ல வரல. ஆனா கொடுப்பதை திருப்பி ஸ்ட்ராங்கா கொடுங்க. வலிக்கனும். மறுபடி செய்ய பயப்படனும்.