Sunday, April 22, 2007

என் தேவதை

என் பிள்ளை சொக்க தங்கம்
என்று அம்மா அடிக்கடி சொல்வார்
என் பிள்ளை பட்டை தீட்டிய வைரம்
என்று மார் தட்டுவார் தந்தை

உச்சி முகர்ந்து செல்லக் குட்டி
என்று அணைத்திடுவார் தாத்தா
அவள் வயதொத்த தோழிகளிடம்
என் பேத்தி என பெருமிதபடுத்திடுவார் பாட்டி

தங்கையுடன் பேசினால்
மன நிறைவு என்பாள் தமக்கை
எது கேட்டாலும் வாங்கி தருவாள்
என் அக்கா என இன்முகம் காட்டுவான் தம்பி

என் வீட்டு கதவு திறந்ததும்
பாய்ந்தோடி, மேல் விழுந்து
நாவால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தும்
எங்கள் வீட்டு பொமரேனியன் குட்டி

இப்படி,
எல்லாரும் என் மீது உயிரே வைத்திருக்கும் போது
நீ மட்டும் .....
நீ மட்டும் .....

என்னை பார்ப்பது கூட
கேவலம் என எண்ணும்
உன்னைப் பற்றி மட்டுமே
கவிதை எழுத எப்படி முடிகிறது என்னால் !!

-- காட்டாறு

Thursday, April 19, 2007

புகைப்பட பழங்கள்

மேய்ஞ்சிட்டு இருந்தப்போ சர்வேயனின் போட்டோ போட்டி பத்தி பார்த்தேன். உடனே சில வருடங்களுக்கு முன்னால் தோழி ஒருத்தி அனுப்பிய ஈ மெயில் ஞாபகத்து வந்தது..... நீங்களும் பார்க்க, இரசிக்க, மகிழ.... இதோ....


































Tuesday, April 17, 2007

வந்தாரு..... வந்தாரு..... தாய்மையுடன் வந்தாரு!

வந்துட்டார்........... வந்துட்டார்........... வந்துட்டார்........... இந்த தண்டோரா போடாம வர முடியாதான்னு ஓரத்துல உக்காந்திருப்பவங்க மொனகக் கூடாது... ஆமா. காட்டாறு வர்றத சொல்லலைன்னா உங்களுக்குத் தான் திண்டாட்டம். கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திருப்பீங்க. அழகு பத்தி சங்கிலித் தொடர் வர்றத சொன்னேன். ஆளாளுக்கு தாய்மை பத்தி சொல்லுறாங்களே......... நாம ஒரு மொக்கைப் போடலாம்ன்னு நெனச்சா....... முடிஞ்சா தானே. சரி, நமக்கு தெரிஞ்சத, தெரிஞ்ச மாதிரி எழுதுவோம். அது தான் நம்மால முடிந்ததுன்னு முடிவுக்கு வர்றதுக்குள்ள, நாளும், கிழமையும் ஓடிப்போச்சி!

எல்லாரும் தாய்மை பத்தி அழகுச் சங்கிலில எழுதினதும் எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. உங்க கிட்ட சொல்லாம யாரு கிட்ட சொல்லப் போகிறேன் நான்? கண்கலங்காதீங்க பதிவாளர்களே (அது என்னவோ தெரியலைங்க பதிவாளர்ன்னு எழுதுறப்போ, ஒரு தனி கவுரதையா இருக்குது பாத்தீங்களா). வந்தேன் கதைக்கு.

என் தோழி கருவுற்றாள். முதல் குழந்தை. சந்தோஷம் திக்குமுக்காட வைத்தது. வேலைக்கு செல்லும் பெண்ணிவள். அதனால ஜாலி லாலா ஜிம்கானான்னு பாடிட்டு திரிய முடியாது. ஆனாலும் சுத்தி இருக்கிற எங்களை படுத்தி எடுத்துட்டா. அதாவது சந்தோஷத்த பகிர்ந்து கிட்டா. அம்மாவுடன் இருந்தா எப்படி இருக்கும்ன்னு நெனச்சவளுக்கு புசுக்குன்னு மனசு சோகமாச்சி. இருக்காதா பின்ன. அமெரிக்காவுலல்ல இருக்கிறா. ஊருல இருக்கிற அம்மாவ எப்படி கூப்பிடுறது. கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசைன்ற மாதிரி, தன் குழந்தை அமெரிக்கை பிரஜையாக்கனும் ஆசை; தன் தாயுடன் இருக்கவும் ஆசை. விருந்தாளியா வந்தாங்க அம்மா. நமக்குத்தான் பெரியவங்கள்ளாம் தோஸ்த் ஆகிருவாங்கன்னு வியர்டிருக்கிறேன்ல. மனம் திறந்து நிறைய கதை பேசினோம். அவங்க டீச்சரா இருந்து, மேல மேல படித்தது மட்டும் இல்லாமல், குழந்தைகளையும் தானே கவனித்து வளர்த்து ஆளாக்கியதை பெருமையா சொன்னாங்க. ஒரு சுப முகூர்த்தத்தில் அழகு பெட்டகமாய் ஒரு குட்டி தேவதை பிறந்தாள். கதை குழந்தைய பத்தினது இல்லாததால, ஆசை இருந்தாலும் ரொம்ப விவரிக்கல. சரியா?

தோழிக்கு விடுப்பு முடிந்தது. வேலை செல்ல ஆரம்பித்தாள். அப்போ இந்த தாய் வடித்த கண்ணீர் இன்னமும் என் கண்களை விட்டு நீங்கவில்லை. தன் மகளின் கஷ்டம் காண முடியவில்லை அந்த தாய்க்கு. கீழ்வரும் வரிகள் அனைத்தும் அவருக்குச் சமர்ப்பணம். இது போல் கவலைப் பட்ட அம்மாக்கள், அப்பாக்கள் (தாய்மை இருபாலாருக்கும் பொது என அழகுச்சங்கிலியில் சொன்னது ஞாபகம் இருக்கா?) உலகம் முழுவதும் உண்டு. அவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.


தாய்மையின் உண்மை

உருவானாள் கருவாய்
ஆனந்தக் கூத்தாடியது மனம்
கருவானவள் உயிரானாள்
இப்பூவுலகில் உதித்தாள்

பூவாய் சிரித்தாள்
தத்தி நடந்தாள்
மழலையில் கொஞ்சினாள்
ஆனந்தக் கூத்தாடியது மனம்!

கேள்விக் கணைகள் தொடுத்தாள்
உலகை அறிய முனைந்தாள்
உவகையாய் சிரித்தாள்
மெய்மறந்து திரிந்தது மனம்!

பூவையானாள்
பூப் பூவாய் மலர்ந்தாள்
செவ்வனே இல்வாழ்க்கை
கற்றுக்கொடுத்தது யாரோ; பூரித்தது மனம்!

கருவை சுமந்தாள்
உயிருக்கு உயிர் கொடுத்தாள்
ஒளிர்வாய் துலங்கினாள்
பெருமிதமாய் எண்ணியது மனம்!

பணி அழைத்தது
பகலில் வேலை; இரவில் குழந்தை
தூக்கம் மறந்து ஓடினாள்
பொறுத்துக் கொள்ள முடியா தவித்தது மனம்!

பெற்ற என் மனம் கலங்கியது!
பெற்றதால் அவள் மனம் குளிர்ந்தது!

-- காட்டாறு

Thursday, April 12, 2007

ராணித் தேனியை காணவில்லை! பணித் தேனீக்கள் பரிதவிப்பு! சன்மானம் அறிவிப்பு!

டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... இதனால யாவருக்கும் அறிவிப்பது என்னவேன்றால், ராணித்தேனியைக் காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் தரப்படும். டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்..... டும் டும் டும் டும் டும்.....

ராணித் தேனியை காலத்தின் மாற்றத்திற்கேற்ப மாற சொல்லி (அதாவது உழைக்கச் சொல்லி) அழகு மணங்கள் (பணித்தேனீக்கள்) ஆர்ப்பாட்டம் செய்ய, அரசி தப்பி ஓடியது மட்டுமல்லாது, எங்கோ ஒளிந்து கொண்டார். அவரைக் காணாது தடுமாறிய பணித் தேனிகள், தேன் எடுக்கும் வேலையை மறந்து, ரீரீரீரீரீரீரீரீரீரீரீரீ என்று ரீங்காரமிட்டவாறு அங்குமிங்கும் அல்லாடும் பரிதாப காட்சியைக் காண சகிக்காத மூத்த தேனீக்கள் சோகமயமாக காட்சியளிக்கின்றன. எதிரணி குழுவில்லுள்ள வண்டுகள், தேனீக்களின் இந்நிலைக் கண்டு எக்களித்து உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எக்காள கூச்சலிடுகின்றன. எப்போதும் ஒற்றுமையுடன் பணி புரிந்து வந்த தேனீக்களின் நிலை கண்டு, பூக்கள் யாவும் தன் நிலையிழந்து மகரந்தம் பறிமார மறந்தன. தேன் உண்ண வந்த வண்ணத்துப் பூச்சிகளும், அதுவரை எக்காள சிரிப்புடன் வலம் வந்த வண்டுகளும், தன்னிலை மறந்த பூக்களைப் பரிதாபமாக கெஞ்ச ஆரம்பித்தன. (பசி வந்தால் பத்தும் பறக்கும் போது, வண்டுகள் பறக்காத என்ன?). பூக்களோ ராணித்தேனியை எண்ணி வாடி வதங்கின. பூக்களின் வதங்கிய நிலை கண்டு மானிடர்கள் பித்துப் பிடித்துப் போய் செய்வதறியாது துடித்தனர்.

உலகமே செயலிழந்து நிற்பதைக் கண்ட அழகான, புத்திசாலி தேனி ஒன்று, ராணித்தேனியைக் கண்டு பிடித்து தருபவருக்கு தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்தால், உலகமே தேட ஆரம்பிக்கும்; ராணி வந்தபின், உலக நிலை மாற்றம் கூறி அவரை வேலை வாங்கிவிடலாம் என்று யோசனை ஒன்று சொன்னார் (கொத்திவிட்டு சென்றார்). அது தான் சரியெனப் பட, மூத்த தேனீக்கள் நிருபர்களைக் கூப்பிட்டு சன்மான தருவதாக சொல்ல நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு தேட ஆரம்பித்தனர் ராணி தேனியை. ராணியோ ஒளிந்துள்ள இடத்திலிருந்து வெளிவரவில்லை இது வரை. மடிந்து போகும் நிலையிலுள்ள பூக்களின் நிலை கண்டாவது ராணித்தேனி வெளி வந்து பணித்தேனீக்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு UN சம்மன் ஒன்று அனுப்பியுள்ளது.

பின்குறிப்பு:
ராணி தேனி - பின்னூட்டம் மட்டும் இடும் சேதுக்கரசியார்
பணித்தேனீக்கள், வண்டுகள், பட்டாம் பூச்சிகள், மானிடர்கள், UN - தமிழ்மண பதிவர்கள்
தேன் - பதிவு
உழைப்பு - பதிவு இடுவது
அழகான, புத்திசாலி தேனி - அழகுச் சங்கிலித் துவங்கி வைத்த இலவசக் கொத்தனார்
சன்மானம் - 2 சாக்லெட்

பின்னுமொரு பின்குறிப்பு:
நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற

உங்களுக்கு கேக்குதா..... எனக்கு கேக்குது. பொருமாதீங்க. சேதுக்கரசிய கண்டுபிடிக்க வேற வழி தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா எங்கிட்ட மட்டும் சொன்னீங்கன்னா... கிடைக்கிற சாக்லேட்ல பாதி (ஒன்னுல பாதி) உங்களுக்கு!

Wednesday, April 11, 2007

அழகுச் சங்கிலியின் அழகே அழகு

முத்துலெட்சுமி அழகைப் பற்றி அழகா சொல்லிட்டு, என்னையும் சேர்த்து விட்டாங்க இந்த விளையாட்டுல. அழகுன்னா என்ன? என்னால சரியாக விவரிக்க முடியுமான்னு தெரியல. சிலருக்கு வெளிச்சம் அழகா இருக்கும்; வேறு சிலருக்கு இருட்டு அழகா இருக்கும். நிலவைக் கண்டு வியந்துருகும் நம் மனம், சூரியனையும் விட்டு வைக்காது. "தேடலின் புரிதலில் என்னை அழகானவள் என்றது என் மனம்." ஆமாங்க எதிலும் அழகு காணும் நம் மனம் ரொம்ப அழகுங்க. நம்ம மனசு ரொம்ப சந்தோசத்துல துள்ளுற ஒவ்வொரு கணமும் அழகுன்னு தோணுது. அந்த நிமிஷத்துல நம்மை நாமே மறந்து போயிருவோம் பாருங்க..... JK இத ரொம்ப அழகா சொல்லியிருப்பார்:

"What takes place when you look at something which is actually marvellously beautiful: a statue, a poem, a lily in the pond, or a well-kept lawn? At that moment, the very majesty of a mountain makes you forget yourself. Have you ever been in that position?
If you have, you have seen that then you don’t exist, only that grandeur exists. But a few seconds later or a minute later, the whole cycle begins, the confusion, the chatter. So beauty is, where you are not. It is a tragedy if you don’t see this. Truth is, where you are not. Beauty is, love is, where you are not."

அப்படின்னா, அழகுன்னு சொன்னா.... உணர முடியும்; எழுத முடியுமா? தெரியல. முயற்சி செய்து பார்க்கலாம். என்ன சொல்றீங்க நீங்க?

1) வெட்கம்
வெட்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. அதனால பொதுவா சொல்லப் போகிறேன். வெட்கம் வரும் போது உள்ள அழகைப் பாத்தீங்கன்னா..... பார்த்துட்டே இருக்கலாம். நெசமாத்தான் சொல்லுறேன். அதனால நான் வெட்கத்தை பல பருவங்களாக பிரித்து மேயப் போகிறேன். முதல் பருவம், மழலைப் பருவம். வெட்கப் படுற குழந்தைய பார்த்து நம்ம மனம் ஆனந்த கூத்தாடும் பாத்தீங்களா? அம்மா சேல பின்னால நின்னுட்டு, ஒத்த கண்ணால பாத்துட்டு,..... அழகே அழகு. இரண்டாம் பருவம், வாலிபம். நிறைய குறும்பு; கொஞ்சம் லாஜிக். இந்த பருவத்துல வெட்கம் என்பது தம்மை புகழும் போது மட்டும் வரும். அத கோபமா வெளிப்படுத்துவாங்க பாருங்க.... ரொம்ப அழகா இருக்கும். நீங்க அந்த சமயத்தில சிரிச்சீங்கன்னா..... அவ்வளவு தான். சிரிக்காம, அவங்க கோபத்தை இரசிச்சீங்கன்னு வச்சிக்கோங்க..... வெட்கத்தில் ஓடிப் போயிருவாங்க. மூன்றாம் பருவம் மண வாழ்வின் முதல் படி. அது என்னவோ தெரியலைங்க.... இந்த பருவத்துல எதற்கெடுத்தாலும் வெட்கம் வரும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். என்ன சொன்னாலும் வெட்கம் வரும். இந்த பருவத்தில் இவர்களைச் சீண்டி அழகு (வேடிக்கை) பார்ப்பவர்கள் ஏராளம். நான்காம் பருவம், முதுமை. தாத்தாவிடம் போய் பாட்டியைப் பற்றியும், பாட்டியிடம் போய் தாத்தாவைப் பற்றியும் கேட்டுப் பாருங்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பு பற்றிக் கேட்டால், ஒருவரை ஒருவர் இரசித்துக் கொண்டே கதை சொல்லும் தருணங்களில் எங்கேயிருந்து அந்த வெட்கம் வருமோ தெரியாது; தாத்தா, கண் இடுக்கி சிரிப்பார் - வெட்கத்துடன். பாட்டி, இந்த கிழத்துக்கு வேலையில்லன்னு ஒரு லுக் விட்டுடே வெட்கத்துடன் அதட்டுவார். இதை (அவர்கள் வெட்கப்படுவதை) அனுபவித்தவர்களுக்குத் தெரியும்; அத்துனை அழகு முதுமையில் வெட்கம்.

2) பொய்க் (?) காதல்
எங்கள் குடும்பத்தில், என் வயதொத்தவர்கள் நெறையா பேர் ஆண்கள். 4 அண்ணன்கள், 3 தம்பிகள் எனக்கு. இது போதாதுன்னு அவர்களுடைய நண்பர்களுக்கும் நாம தான் அக்கா அல்லது தங்கை. இவங்களுக்கு தூது போவதற்குன்னு பிறந்தவர்கள் நானும் என் அக்காவும். அதனால என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப அருமையான நிகழ்வுகள் ஏராளம். ஒவ்வொன்னும் ஒரு அழகு தான். இதுல எனக்கு ரொம்ப பிடித்தது, தூது போவது. படத்துல பாத்திருப்பீங்க. அதே நம் வாழ்விலும் நடந்திருந்தால்...... very interesting இல்ல..... அந்த பொண்ணு திரும்ப பதில் சொல்லும் வரைக்கும், வீட்டுக்குள்ள குட்டி போட்ட பூனையாட்டம், கால் ரேகை தேய்ந்து போகிற மாதிரி, குறுக்கும் நெடுக்குமா நடை பயில்வாங்க பாருங்க..... அப்போ, அவங்க முகத்துல உள்ள கலவையான எக்ஸ்பிரஷன் ஒரு தனி அழகு. ஆயிரம் முறை அதே கேள்விக்கு வேற வேற பதில் சொல்லனும். அவங்க அஷ்ட கோணலா முகத்த வச்சிட்டு ஒரே யோசனையா வளைய வருவாங்க பாருங்க..... அருமையான அழகு. (இதுல நமக்கு தலையில குட்டும் கிடைக்கும். அது வேற கத.)

3) பாசம்
நான் ஊரிலிருக்கும் போது ஒவ்வொரு சனிக் கிழமையும், சிறுவர் முகாமிற்கும், ஒவ்வொரு ஞாயிறன்று முதியவர் முகாமிற்கும் செல்வது வழக்கம். இப்பொ... அது முடியாதல்லவா. அதனால, ஊருக்கு செல்லும் போது தவறாமல் அவர்களுடன் ஒரு நாள் செலவிடுவேன். அவர்கள் என் மேல் கொண்டுள்ள பாசம் அளப்பரிது. அவர்கள் கண்களில் உள்ள நீர் சொல்லும் அந்த பாசத்தை அழகன்றி வேறேன்பது?

4) தாய்மை
தாய்மையடைவதை நான் இங்கு குறிப்பிடவில்லை. தாய்மையுணர்வை குறிப்பிடுகிறேன். எல்லோருக்குள்ளும் தாய்மை உணர்வு இருக்கும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். எனக்கு தாய்மையுணர்வு கொஞ்சம் அதிகம் என்று நான் சிறுவயதில் இருக்கும் போதே பெரியவர்கள் சொல்வர். இதை அழகு என்று மருகியவர்களும் உண்டு. வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் என் குழந்தையாக்கிவிடுவேன். நிறைய கதை உண்டு இதன் பின்னால். உதாரணத்திற்கு ஒன்று: என் அம்மா இன்றும் என்னிடம் அவர்கள் தாயிடம் இருந்தது போல் தான் இருப்பார்கள். பாதி வேளையில் யார் தாய் யார் சேய் என்று பக்கத்திலிருக்கும் பலருக்கும் சந்தேகம் வந்துவிடும். எங்கள் அந்நியோன்னியத்தை கிண்டல் பண்ணியவர்கள் பல பேர் உண்டு. எங்க அம்மா இப்பவும் சொல்லுவாங்க. அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தால், உனக்கு நான் மகளாக வேண்டும்ன்னு.

5) நட்பு
இது அழகு என்று நான் சொல்லித்தெரிவதில்லை. ஆயினும் இதை சொல்லாவிட்டால் அழகு மதிப்பற்றதாகப் போய்விடும். கண்டு நட்பு; காணாத நட்பு என்று பல உண்டு. ஆனாலும், நட்பு நட்புதான். அழகோ அழகுதான். நானிங்கு சொல்லப் போவது என் முதல் நட்பு. எனக்கு 2-ஆம் வகுப்பில் கிடைத்த தோழி இன்றும் எனக்கு நெருக்கமானவள். என் வீடு பள்ளிக்கு எதிர். அவளோ ரிக்ஷாவில் வருபவள். என்னிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். நட்பு ஏற்பட ஒரு பென்சில், ரப்பர் போதுமே. அப்புறம் என்ன? இன்று வரை மாறா நேசம். நிறைய பேர் சொல்லலாம். ஆனால், முதல் நட்பின் அழகுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

6) இயற்கை
இந்த அழகை வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. குழந்தையும் இயற்கையும் ஒன்று. குழந்தையைக் கண்டு குதுகலிக்கும் அதே மனம் தான் இயற்கையைக் கண்டும் குதுகலிக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இருக்காது. குளமோ, குட்டையோ; இரவோ, பகலோ; இளமையோ, முதுமையோ; பட்ட மரமோ, பழுத்த மரமோ; இலையோ, சருகோ; இயற்கையோ, செயற்கையோ; அப்படியே ஒன்றி போய் விடுவேன். எல்லாமே அழகா தோணும். எல்லாமே நானாகிவிடுவேன். எல்லாருமாகவும் நானாகிவிடுவேன்.

அழகை வரிசைப் படுத்த முடியாது. அதனால எழுதி வைத்து பதிவிடாமல், பதிவுல நேரடியா எழுதிட்டேன். தவறி இருந்தால்..... அழகுன்னு விட்டுருங்க. அழகா இருந்தா இரசிச்சிக்கோங்க.

என்னை எழுத அழைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி! முன்னால நிக்கிற மூணு பேரு வாங்கப்பா
1) பின்னூட்டம் மட்டும் இடும் அருமை நண்பர் சேதுக்கரசி (??) http://kuttapusky.blogspot.com/
2) தில்லியைக் கலக்கும் தோழி துளசி கோபால் (http://thulasidhalam.blogspot.com/)
3) தில்லானா மங்கை (http://manggai.blogspot.com/)

--- முதல் இருவருக்கும் பதிலாக -----
1) வரவனையான் (http://kuttapusky.blogspot.com)
2) ஆன்லைன் ஆவி (http://avigalulagam.blogspot.com)

Thursday, April 05, 2007

என் காதலி..... நிலா

ஒடிசலா.... இந்த பவுடர் நடிகர்... யாருப்பா அவரு... SJ சூர்யாவோட நடிச்சிதே.... ஒரு பொண்ணு.... நிலா... அத பத்தி எழுதப்போறேன்னு நெனச்சி இந்த பதிவுக்குள்ள வந்தீங்கன்னா...... அப்பிடியே ஜகா வாங்கிருங்கன்னு அசிங்கமா சொல்ல மாட்டேன். இருந்து வாசிச்சிட்டே போகலாம். வந்தமைக்கு நன்றி! இப்போ கதைக்கு வர்றேன்.

இயற்கையை காதலியா நினைக்கிறது எல்லாருக்கும், முக்கியமா கவிஞர்களுக்குப் பிடிக்கும். நிலா இல்லாது போனால்... இந்த கவிஞர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமா போயிடும். நிலா பத்தி கவிதை எழுதாத கவிஞர்களைப் பார்ப்பது ரொம்ப கஷ்டம். கவிதை பற்றி அரைகுறை ஞானம் உள்ள நானும் நிலாவ விட்டு வைக்கல. காதலுக்கும் நிலா தான், காதலியாகவும் நிலா தான், குழந்தைக்கு சோறுட்டவும் நிலா தான்னு ஆகிப் போச்சி. நிலாவ ஓவரா படுத்தி எடுத்துட்டாங்கன்னு ஒரே பீலிங் ஆகி போச்சி. ஒரு நக்கல் கவுஜ ஒன்னு, நிலா கவலையா பேசுற மாதிரி கைவசம் இருக்கு. அத அப்புறமா பதிவுல போடலாம். இப்போ எல்லாரையும் போல நாமளும் நிலாவ ரசிச்ச விதத்தை மட்டும் சொல்லிட்டு போகலாமுன்னு இருக்கேன். ஜூட்....

கண் கொட்டாமல் பார்க்கிறேன்
காதல் வழிய இரசிக்கிறேன்

அண்ணார்ந்து உனை மீண்டும் பார்க்கிறேன்
ஆயிரம் கோடி எண்ணங்கள்

மூச்சி முட்டுகிறது
ப்ஹா என்கிறது பெருமூச்சி

ஆசையாய் உனைத் தழுவி நிற்கிறேன்
உன்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் மனதில்

வடித்தெடுத்து சமர்ப்பிக்க ஆசை
நான் கவிஞன் அல்லவே

என்ணங்களில் காதல் வழிகிறது
இரசித்து இரசித்து வரிந்தெடுக்க முனைகிறேன்

மின்னும் நட்சத்திரங்கள்
உன் கூந்தலை அலங்கரிக்கும் பூக்களோ

கூட்டமென செல்லும் வெண் மேகங்கள்
நீ கண் துயில அரவணைக்கும் தலையணைகளோ

வளைந்து வரவேற்கும் வானவில்
உன்னைக் காக்கும் அரணோ

உன் கண்ணத்து மச்சம் போல்
உன்னருகில் இருக்கும் நட்சத்திரம் உன்னவனோ

நீ தேய்வதும் வளர்வதும்
உன்னவனிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமோ

உன்னில் தெரியும் வடிவம்
உன்னவனை உன்னில் கொண்டதாலோ

மூன்றம் பிறை
உன் சிரிப்பின் வெளிப்பாடோ

முழு னிலவாய் பிரகாசிப்பது
உன்னவனை குழந்தையாக்கும் என்னமோ

பளிச்சென நீ வெளிப்படுவது
உன்னவனின் வருகையை எதிர்ப்பார்த்தோ

சட்டென மனம் தடுமாறுகிறது
ஒரு வித ஏக்கம்

என் காதலியாய் வந்து போகிறாய் நீ
மனதில் இரணம்

என்னருகில் இல்லா என் காதலி
என் நிலாப் பெண்!


-- காட்டாறு

Tuesday, April 03, 2007

நண்பனின் முதல் இரவு - புது அனுபவம்

ஏனோ நமக்கு முதல் முறை என்பது ஒருவித முக்கியத்துவமான ஒன்றாகிவிடுகிறது. குழந்தைப் பருவத்தில் குப்புற விழுந்தது முதல், தத்தி நடந்தது வரை, வாலிப பருவத்தில் மீசை முளைத்தது முதல் காதல் வயப்படும் வரை, முதுமைப் பருவத்தில் தலை நரைக்க துவங்கியது முதல் இறக்கும் வரை ஒரு சில முதல்கள் முக்கிய வாய்ந்ததாக நம்மால் நினைத்து நினைத்து மகிழவோ, அழவோ வைக்கிறது. மன்னிக்கவும்.... திருமண பருவத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டேன். முதல் புத்தகம், முதல் பயணம், முதல் முத்தம், முதல் பதிவு, முதல் கவிதை, முதல் காதல், இன்னும் பல முதல்கள் நம் வாழ்வில்.

நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் முதல் புது அனுபவங்களை தொகுத்து தரலாமுன்னு இருக்கேன். போதும் நிறுத்து.... கதைக்கு வா என்ற கூக்குரல் காதில் ஒலிப்பதால், அரு(று)மை(வை)யான துவக்கவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

அமெரிக்க கனவோட 24 மணி நேரம் பறந்து வந்துருவோம். ஆனா குளிர் காலமா இருந்ததுன்னா.... நாம படுற அவஸ்தை சொல்லி மாளாது. அப்படி குளிர் காலத்துல அமெரிக்கா வர்றவங்க பாவம் பண்ணினவங்கன்னு குடு குடுப்பக் காரன் சொன்னதா எனக்கு ஞாபகம். அப்படி ஒரு குளிர் காலத்தில் அதுவும் பனி விழும் காலத்தில் என் நண்பன் முதன் முதலில் வேலையின் நிமித்தம் அமெரிக்கா வந்தான். அன்று சனிக்கிழமை. பனி 4 அடிக்கு பெய்யுது. பயங்கர குளிரு வேற. விமான நிலையத்தில் போய் நின்னா இவனைத் தவிர அத்தன பேரும் வெளியில வந்துட்டாங்க. எங்கனாச்சும் சீட்டுக்கு கீழ இழுத்து மூடி தூங்கிட்டானோன்னு ஒரு வித கலக்கம் ஆட்கொள்ள, வாசலையே வெறிச்சி பாத்துட்டு இருக்கேன். வெறுங்கைய வீசிட்டு, சிடு சிடுன்னு வர்றான். என்னடான்னா.... பயண மூட்டை (luggage) தொலைஞ்சி போச்சின்றான். ஒரு வழியா அவன வெளில தள்ளிட்டு வந்து, விமான நிலையத்தில் புகார் கொடுக்க வச்சி, வீட்டுக்கு வந்தோம். காலை வீட்டில் வந்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர் விமான நிலைய அதிகாரிகள். வரும் போது ஒரு கடையில் (Meijer) அவனுக்கு இரவு உடுப்பு (என்ன.... ஒரு நீள கால் சட்டையும், மேல் பனியனும் தான்) வாங்கிக் கொண்டு வந்தோம். வரும் வழியெல்லாம் பனிய வெறித்து பார்த்தவாறே, குளிரைத் திட்டிட்டே வந்தான். இத்தனைக்கும் குளிருக்காக ஸ்வெட்டர், இத்தியாதி ஐட்டங்களெல்லாம் போட்டிருந்தான்; காரில் ஹீட்டர் போடப் பட்டிருந்தது.

வீட்டுக்கு வந்து, ஒரு வழியா சகஜ நிலைக்கு அவன் வந்ததும் கத பேச ஆரம்பிச்சோம். 10 வருஷ கதய விடியிறதுக்குள்ள பேச மாட்டோ மான்னு ஏக்கம் எப்போ மனசுக்குள்ள வந்த்துன்னு தெரியல. பேசினோம்; பேசினோம்; பேசிட்டே இருந்தோம். படுக்கப் போகலாமுன்னு முடிவு பண்ணி, வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டி (Security System) பற்றி சொன்னேன். அமெரிக்காவில், வீட்டுக்கு வீடு பாதுகாப்பு பெட்டி உண்டு. இது நமக்கெல்லாம் (அப்போ) புதுசு. வீட்டினுள் இருந்து கொண்டே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்; வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் வெவ்வேறு முறையில் செயலாற்றும். பூம் பூம் மாடு மாதிரி சொன்ன கதயெல்லாம் கேட்டுட்டு, போதும் எனக்கு புரிந்தது என்றான். நானும் அக்கறையா, என்ன கேக்காம கதவ தெறக்காதன்னு சொல்லிட்டு படுக்க போய்ட்டேன்.

தலைவருக்கு காலை 5 மணிகிட்ட தூக்கம் கலைந்து விட்டது. ஜன்னல் வழியே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தவனுக்கு, வரவேற்பரையில் போய் உட்காரலாமுன்னு தோணியிருக்குது. நேரம் போகாமல், அப்படியே ஒவ்வொரு closet கதவா திறந்து திறந்து பார்த்தவன், அறியாமல், முன் வாசலை திறக்கப் போய், பாதுகாப்பு பெட்டி தன் வேலைய செவ்வனே செய்ய, சைரன் சத்தம் கேட்ட எனது நண்பன், துண்டக் காணம் துணியக் காணமுன்னு கதவ தெறந்து வெளிய ஓடிட்டான். நான் அடிச்சி புடிச்சி கீழ இறங்கி வந்து சைரன ஒரு வழியா நிறுத்தி, நண்பனைத் தேட, அவனோ, பக்கத்து வீட்டு செடியின்(Evergreen tree) பின் ஒளிந்தவாறு வெறும் பனியனுடன், செறுப்பில்லாமல் உட்கார்ந்திருக்கிறான். என்னப் பாத்ததும் பாஞ்சி வீட்டுக்குள்ள வந்தத இப்போ நெனச்சாலும் சிரிப்பு தான் வரும். இவனோ, அழுகை முடிந்த பின்னும் விசும்பலை நிறுத்தாத குழந்தை மாதிரி, வீட்டிற்குள் வந்து 30 நிமிடத்திற்கு பின்னும் குளிரில் வெட வெடன்னு அவன் ஆடிட்டு இருந்தது இப்போ நெனச்சா பாவமா இருக்கும். அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் பிரசுரிக்கத் தகுந்தவை அல்ல.

இப்படியாக நண்பனின் முதல் அமெரிக்க இரவு, நடுங்கும் குளிரில் சுபமாக, மறக்க முடியாத நிகழ்வாக இனிதே முடிந்தது.


அனுபவம் தொடரலாம் .....................

Monday, April 02, 2007

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி இந்த தொலைக்காட்சி பெட்டி என்றால் அது மிகையாகாது.

தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது ஒரு கடமை போல் ஆகிவிட்டது. என்ன செய்ய? இது போல் அடிக்க்ஷனுக்கு ஏதேனும் மாற்று உண்டா எனில், இல்லை எனத்தான் தெரிகிறது. நானும் சுப்பர் மேன் போல் உடை அணிந்தால், அவனைப் போல் சாகசம் செய்ய முடியும் என என் 4 வயது மருமகன் சொல்கிறான். சரி அவன் தான் குழந்தை. வயது வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், செல்வி வீட்டில் ஒருத்தியாகிவிட்டாள் என்று. சரி அத விடுங்க..... எத்தனை பேர் நம் வீட்டிற்கு வருகை தந்திருப்பவருக்கு முதலிடம் கொடுக்கிறோம். அவர்களையும் சேர்ந்து நம்முடன் தொலைக்காட்சி முன் உட்கார வைத்து வெறுப்பேத்துகிறோம். போன முறை நான் இந்தியா போன போது, என் அத்தை வீட்டில் என்னை விரும்பி வரச் சொன்னார்கள். நானும் சரி என்று கூறி சாயங்காலம் 7 மணிக்கு வருகிறேன் என்றேன். உடனே அவர் மதியம் 2 மணிக்கு வந்துவிடு; 7 மணியிலிருந்து சீரியல் ஆரம்பித்து விடும்; உன்னிடம் உட்கார்ந்து பேச முடியாமல் போய்விடும் என்று ஒரு போடு போட்டார்களே பார்க்கலாம்.

நான் சிறு வயதில் ஒரு காலனி போல் உள்ள தெருவில் வசித்தேன். அப்போது தொலைக்காட்சி பெட்டி அவ்வளவாக பிரபலம் அடையாத காலம். பின் 2 வருடங்களில் மள மளவென்று அதன் ஆதிக்கம் பெறுகியது. அந்த காலகட்டத்தில் பள்ளிப் போட்டியில் கீழ்வரும் கவிதையை (கவுஜ என்றும் கூறலாம்) எழுதி பரிசு(?ச்சோப்பு டப்பாதாங்க அந்த காலத்துல) வாங்கினேன். இன்று தூசி தட்டி உங்களுக்கு தருகிறேன். ஏனென்றால் இன்றும் அதே நிலைதான். மாற்றம் ஏதுமில்லை.

===== ஏக்கம் =====
இந்து கிறிஸ்துவ பேதமின்றி
காய்கறி, புளி, அரிசி
கலந்த கூட்டாஞ்சோறு கிளறி
முழு னிலவில் இலை பறிமாறி
கூட்டுக் குடும்பமென
கூட்டணியாய் இருந்தது
10 குடும்பம் கொண்ட
எங்கள் தெரு

புள்ளி வைக்க,
வண்ணக் கோலமிட,
சிறார்கள் எடுபிடியாக,
பல வேறு விரல்களின்
கூட்டு முயற்சியில்
நடுங்கும் மார்கழியிலும்
பொங்கலன்று
சாதி மத பேதமின்றி
அனைத்து வீட்டின் முன்னும்
கோலம் - உணர்த்தும் சமூக உறவை!

24 நான்கு மணி நேரமும்
திறந்திருக்கும் கதவுகளும்,
மதியமானால் மணக்கும் காய்கறி சோறும்,
யாதும் ஊரே என நினைவுபடுத்தும்!
கையில் காசில்லாத போதும்
அன்பு மட்டும் மிஞ்சியிருந்த
பக்கத்து வீட்டு நெருக்கம்!

இன்று,
பணம் காசு வந்தது;
படப் பொட்டி வந்தது;
திறந்திருந்த கதவுகள்
நாடகம் பார்க்க மூடிக் கொண்டன
நலம் விசாரிக்கவும் நேரமின்றி!

-- காட்டாறு