Thursday, November 29, 2007

இயற்கையின் சந்தோஷ கூச்சல்

இயற்கையின் சந்தோஷ கூச்சல்


கருக் கொண்ட மேகங்கள்
கண்ணிமைக்க மறக்க
கரிய விழிப் பார்வைதனை
மின்னல் படம் பிடிக்க

செல்லச் சிணுங்கலில்
பித்தம் தலைக்கேற
இடி டம டமத்து
தண்டோரா போட

சிலிர்க்கும் மேகம்
மழையாய் ஆனந்த கூத்தாட
விரிந்து வழியும் வெண் பொதியாய்
சந்தோஷ கூச்சலிட்ட அருவி

தடுமாறா வேகத்தில்
கரை புரண்டு ஓடிடும்
பாறை தனில் மோதி
வான் எட்டிப் பிடிக்கும்

இரு கரையடைத்து
நாணலுடன் விளையாடும்
பச்சிளம் கொடிகளை
தலை கோதி செல்லும்

காடு மலை தாண்டி
வரும் பாதை சிறப்பித்து
சல சலத்து நுரை பொங்க
சேர்ந்திடுமே தன்னவனிடத்து
-- காட்டாறு

Wednesday, November 14, 2007

இயற்கை சிற்பி நீ யாரோ

இயற்கை சிற்பி நீ யாரோ

கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ

கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ

மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ

பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ

மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
-- காட்டாறு

Monday, November 12, 2007

உன்னுயிர் ஏந்தி

உன்னுயிர் ஏந்தி

மன்னவனே!
உனைத்தானே நம்பியிருந்தேன்
உனையன்றி வேறேதும் அறியேனே
தவிக்க விட்டுச் சென்றாயே
புரிகிறதா என் தவிப்பு

உன்னை என்னிடம் சேர்த்த
படைத்தவனைப் புகழ்வேனா
உன்னை தன்னிடம் சேர்த்த
எடுத்தவனைப் பழிப்பேனா
இல்லை,
என்னைதான் நோகுவேனா

உலகம் என்னைப் பழிக்குமா
சுடு சொல் என் மனம் தாங்குமா
குழந்தையுமாய் என்னைத் தாங்கினாயே
இன்று தாயும் தந்தையும் நானாக்கினாயே

என்ன செய்வேன்
இனி எப்படி வாழ்வேன்
தழுவி வாழ்ந்தவள்
தனித்து வாழ முடியுமா

கலங்கி நிற்கும் நம் செல்லங்களை
கரை சேர்க்க
உன் அன்பையும் சேர்த்துத் தர
அரணாய் நிற்க
என்னால் முடியுமா

வழிகாட்டியாய் வழி நடத்த
உன்போல் அரவணைத்து
அறிவுரைத்து,
தோழனாய் கொண்டாட
என்னால் முடியுமா

என்ன செய்வேன் நான்
என்னுயிர் தான் உன்னில் நீத்ததோ
உன் ஊணுடல் தான் மறைந்ததோ
உன்னுயிர் என் ஊணுடல் கலந்ததோ
புரியாது புரிய வைத்தாயோ

உன்னுயிர் ஏந்தி
உன் கனவு நனவாக
வழி நடத்துவேன் நம் மக்களை
சான்றோன் என கேட்கும் வரை!

சுவாசமாய் தாங்கிய என்னுயிரே
உன் நினைவில் உன்னுடன் வாழ்வேன்
துணையிருப்பாய் என்னுடனே
என் ஊணுடல் மறையும் வரை!
-- காட்டாறு

Friday, November 09, 2007

மீண்டும் மீண்டும் வா....

வெள்ளை நிற… மாளிகை போல் உள்ள சுண்ணாம்பு அடிச்ச கல் கட்டிடம். ஒரு கார் சர்ருன்னு வேகமா வந்து, அநாயசமா வளைவுல திரும்பி, சட்டுனு ப்ரேக் போட்டு, கல் வீட்டு வாசல் முன்னாடி வந்து நிக்குது. அதிலிருந்து காட்டாறு போல் விருட்டுனு இறங்கின ஆளு, இறுகிய முகத்தோட வாசலையே முறைச்சி முறைச்சிப் பார்த்துட்டு நிக்கிறாரு. மனசை தேத்திக்கிட்டு, மெதுவா வாயினருகிலே போய், சாவி கொடுத்து வீட்டைத் திறக்கிறார். திறந்து பார்த்தால் தூசும், தும்புமாய், ஒட்டடையும் வவ்வாலின் இருப்பிடமுமாய், பார்க்கவே ரொம்ப பயங்கரமாய் இருக்குது……. இறுக்கமான முகத்துடன், வரும் தும்மலை கட்டுப் படுத்திக் கொண்டு, தன்னையே நொந்தவராய், மோவாயை தடவியவாறு யோசனையில் ஆழ்கிறார்.

பின்னர் மள மளன்னு, தூசு தட்டி, மெருகேத்தி வைக்க ஆரம்பமாய், மீண்டும் ஒரு முறை வலம் வர ஆயுத்தமாகிறார். வேறு ஒன்னுமில்லிங்கோவ்… அதிகமா சன் டீவி பார்த்ததால மட்டுமில்ல… அதிலே வரும் நாடகங்களை வீட்டுப் பெரியவங்க கூட கம்பெனி கொடுக்குறேன் பேர்வழின்னு கூட உட்ககர்ந்து பார்த்ததால் வந்த விளைவு தானுங்கோவ்! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளா (மாதங்களா) தமிழ்மணம் பக்கம் வராம இருந்துட்டு, என்னோட பதிவு பக்கம் போனாலே, ஏதோ புதுசா ஒரு இடத்துக்கு வந்த மாதிரி இருக்குதுங்க. என்னத்த கிறுக்குனோம் இவ்ளோ நாளான்னு பாத்தா…. ஒன்னுமே புரியல…. மண்டைக்குள்ள இருந்து எல்லாம் தூசு தட்டு எடுக்க வேண்டியிருக்குது… கொஞ்சம் டடம் வேணும் அதுக்கு. அதுக்கு முன்னனல....சரி ஒரு வணக்கத்துடன் திரும்பவும் ஆரம்பிக்கலாமின்னு… வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிருக்கிறேன்…. இனியும் வீட்டை மூடிட்டு, ஓடிப்போகாம ஒழுங்கா இருக்கிறேனான்னு பார்க்கலாம். வணக்கமுங்க வணக்கமுங்க வணக்கமுங்க.