Wednesday, February 27, 2008

மரணத்தின் சுவடுகள்


மரணத்தின் முதல் அறிமுகம். பாட்டியம்மா… ஏதும் அறியா சிறு வயது. என் வயதொத்த சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட ஏற்றார் போல் பெரியவர்கள் துணையில்லா அக்கணம் மகிழ்ச்சியையே தந்தது. பரிட்சயமில்லா உறவுகள். முதலில் பயம். ஏன் இந்த கூப்பாடு என்று. அம்மாவின் கண்ணீர் அமைதியா இருக்க சொல்லியது.

இரண்டாம் அறிமுகம் தாத்தா. என் துறு துறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாது எதற்கெடுத்தாலும் திட்டும் என் தாத்தா. விவரம் புரிந்த வயது. 2 நாட்களாக காத்திருந்த மரணம். மரணத்தை வரவேற்றுக் காத்திருந்தது விளங்காத இளம் மனசு. இடைவிடாது ஒலித்த தொலைப்பேசி அச்சுறுத்தியது. ஊரிலிருந்து வந்த அப்பாவின் கதறலில் அரைகுறையாக புரிந்தது.

மரணத்தின் பயம் புரிந்த வயதில் மூன்றாவது/நான்காவது/ஐந்தாவது மரணங்கள். மூவரும் மனதுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். மரணம் எப்படி அறிவிக்கப்பட்டது? திடீரென்று, ஒரு நடுநிசியில், சில்லென ஊடுருவும் பனிப்பொழுதில், தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும். தொலைப்பேசியின் ஒலியும், அதனூடே கொண்டுவரும் செய்தியும் இது தான் என மனம் நம்பத் துவங்குகிறது.

வார்த்தைப் பிரயோகத்திலே உள்ளும் புறமும் நடுங்க ஆரம்பிக்கிறது. மனதிற்கருகிலா பிறர் மரணத்தை கேட்கும் போதோ அது செய்தியாகி போய்கிறது. சுவடுகள் ஏதுமில்லா மரணமாகிப் போகிறது. சில மரணம் கேள்விகள் பிறப்பிடமாகிறது. சில மரணம் விலகி நின்று பார்க்க வைக்கிறது. சில மரணம் நம்மை சீண்டிப் பார்க்கிறது. புத்தகம் சொல்லும் ஏதும் உண்மையில்லாமல் போகிறது. வார்த்தைகள் ரசனையற்றதாக போகிறது. ஏன் மரணம் மட்டுமே பல முகம் கொண்டதாக தெரியப் படுகிறது?

மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. வாழ்க்கையின் சுவைதனை அறிந்த பின்னரும் மரணம் எதிர்கொள்ள முடியா எதிரியாகவே தெரிகிறது. நம்முடனே பிறந்து, நம்முடனேயே வளர்ந்து, கடேசியில் நம்மை முந்திக்கொள்கிறது மரணம்.

மரணமும், அது குறித்தான பயமும் ஏன்? அது அறியப்படாத இரகசியமாக இருப்பதாலா? நம்முள் இருந்து, நம்மை வெல்வதாலா? அதன் சுவையை உணர வேண்டினாலும், நம்மால் முடியாது போவதாலா? மரணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நம் மனம், மரணம், தன் மிச்சமாக, எதையாவது விட்டுச்செல்கிறது எனக் கொள்கிறது. மீளாத் துயரம், அழுகை, தன்னிரக்கம், ஏக்கங்கள், பிரிவுத் துயர், இன்ன பிற. மரணத்தை ஏற்கும் வரையில் தான் அதன் தொடர்ச்சியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதை மறுக்கிறது. அழுகையின் சுவடு ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போகிறது. மீளாத் துயர் மீளும் போது குற்றவுணர்வு ஆட்டிப் படைக்கிறது. தன்னிரக்கம் விலகும் போது தலை நிமிர்ந்து மரணத்தை பார்க்க முடிகிறது. ஏக்கங்கள் வேற்றுரு கொள்கிறது. ஆக மரணத்தின் சுவடுகளாய் சித்தரித்தவை யாவும் மரணத்தின் சுவடுகளே அல்ல என்றாகிறது.

மரணத்தை ருசிக்கும் எண்ணம் மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கிறது. அதன் மேல் ரசனையும், மாய சுழற்சியும் வந்து போகிறது. நெருக்கமானவர்களின் மரணத்தைக் கூட ஒட்டுதல் இல்லாது காண ஆயுத்தமாகிறது. மரணத்தை இரசிக்கும் வேளையில், மரணம் பிறப்புக்கு சமானமாகிறது. விகாரமாய் தெரிந்த மரணம் வியப்பான பிறப்பாகிறது. சுவடே இல்லாத பாதையாகிறது.


பின்குறிப்பு:
இக்கட்டுரை என் ஆருயிர் தோழிக்கும், அவள் போல மரணமடைந்த எல்லாருக்கும், இனி மரணிக்கப் போகும் எனக்கும் சமர்ப்பணம்.

Monday, February 18, 2008

கயிற்றுக் கட்டில்


நள்ளிரவு
கயிற்று கட்டில்
வானம் பார்த்து நான்
என்னவள் என்னருகில்

அவள் நிலா காண
அல்லி மலர்ந்து நறுமணம் வீச
என் மனம் கிறுகிறுக்க
நாடி நரம்பு முறுக்கேற

ஊணுடல் உரச
பற்றி கொண்டது தீ
ஊணுடல் மறைய
ஈருயிர் ஒன்றானது

நிலா பெண் நாணி முகம் மூட
முகிலினம் வெட்கத்துடன் சிணுங்க
நட்சத்திர நங்கைகள் கண் சிமிட்ட
வானம் இருளை வாரி இறைத்தது

இக்கணம் கண்ட சூரியனார்
கரிய வானம் தீண்ட
அடி வானம்
செவ்வானம் ஆனது

இது கண்டு என்
கண்மணி கண்விழிக்க
நெகிழ்ந்த தன் நிலை கண்டு
நாணி தலை கவிழ

வேகமாக கை நிலை திருத்த
என் கைகள் தடுக்க
அரங்கேறியது
மிச்சமிருந்த ஆசைகள்

- காட்டாறு

Tuesday, February 12, 2008

களைதல்


களைதல்

சுயம் அறிய சுயம் இழக்க
சுயம் தாங்கி சுயமாய்
சுயம் இழந்து சுயம் பெற
அலைபாயும் மனதுடன் ஒரு பயணம்

பிளக்கும் வெயிலில்
வரண்ட நாவும்
வெடித்த உதடுமாய்
திரு அண்ணலின் வலம்

தேய்ந்த கால்மிதியில்
மரத்த உள்ளத்தில்
கிழிந்த சதையில்
உயிர்ப்புடன் வழியும் குருதி

காயும் பருப்பு சோறும்
களியும் கோள உருண்டையும்
திரு ஓடு ஏந்தி தினம்
பிச்சை சாப்பாடு

ஊடுருவும் மெல்லிய இசையில்
பித்து பிடித்து வெளி ஆட
ஆடி அடங்கிப் போனது
உளமென்னும் குரங்கு

ஓலைப் பாயின் கிழிசலில்
பிண்டமொன்று உடன் உறங்க
வெட்டியான் ஓலத்தில்
ஒடுங்கிப் போனது நாடி

மேலோங்கிய நெருப்பில்
விரைத்து எழும் பிணம்
வெட்டியின் அடியில்
உள் வாங்கும்

உறுத்துக் கண்ட மனம்
வலியில் கழண்ட மேனி
சுயமாய் சுயம் களைந்தது
எல்லாம் புரிந்து தான் போனது

கிழிந்து விழுந்த முக மூடி
பித்து நீங்கிய சித்தம்
சிவனில் கலந்த சக்தி
தொலைத்ததால் புரிந்ததோ தேடலின் பொருள்


விரிந்த விழியில் விரிந்து போனது உலகம்!

Tuesday, February 05, 2008

தலைகீழா தொங்க விட்டுட்டாங்க டோய்


பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின் மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில் சொல்லத் தெரியாது. எங்க வீட்டு 12 வயது சொல்லியது எனக்கு பேய் கதை கேட்டால் பயமின்னு. 4 வயது சொல்லியது நான் பந்தை உடைத்தால் அப்பா அடிப்பாரேன்னு பயம். 25 வயது சொல்லியது அவள் என்னை மறுத்துவிடுவாளோன்னு பயம். 40 சொல்லியது பக்கத்து வீட்டு தங்கமணியை ரசிக்கிறது எங்கூட்டு தங்கமணிக்கு தெரிஞ்சிருமோன்னு பயம். 64 சொல்லியது என்னோட கடேசி மகனின் திருமணத்தை பார்க்காமலே செத்துப் போயிருவேனோன்னு பயம். 89 சொல்லியது நான் செத்துப் போனா உனக்கு சொல்லியனுப்பாம போயிருவாங்களோன்னு பயம். இப்படியே எதுக்கெடுத்தாலும் பயம். அட எதுக்கப்பா இப்படியெல்லாம் பயப்படனுமின்னு எனக்கு தோணும். சரி… அது நாம். :-) இப்போ எதுக்கு இப்படி நீட்டி முழக்கிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களா… ஊரிலிருந்து வந்த என் தோழிக்கு நம்ம தெனாலியை விட ரொம்ப ரொம்ப பயம். அவுங்க முன்னாடி நின்னுட்டே… ப்ப்பன்னு சொன்னோமின்னாலும் திடுக்கிடுவாங்க…. இவங்க வந்து ஒரு அபாயகரமான (?) அனுபவத்தை/நினைவுகளைத் தூண்டி விட்டுப் போனாங்க. எனக்கும் அதை பதிவா தர ஆசை வரவே… உங்க கழுத்தை அறுக்க கிளம்பிட்டேன்.

8 ஆண்டுகளுக்கு முன்……. டண் டண் டண் டண் டைங்க்…. 7 தோழ தோழியர்கள் சேர்ந்து பன்ஜி ஜம்பிங் (bunjee jumping) போகலாமின்னு கிளம்பினோம். 1 மாதத்துக்கு முன்ன புக் செய்து….. அதோ இதோன்னு எதிர்பார்த்த நாளும் வந்திருச்சி. வீர தீரமா கிளம்பியாச்சி. ஆனா மனசு திக் திக்குனு அடிக்குது. ஓவர் ரவுசு பண்ணுறவங்க கூட அமைதியா வர்றாங்க. நாங்க இருந்த இடத்திலிருந்து 2 மணி நேரப் பயணம். அந்த இரண்டு மணி நேரமும், எப்போதும் ஊர்சுற்றும் போது இருக்கும் துடிதுடிப்போ, கொள கொளா வளவளா பேச்சோ இல்லாமல் காரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து மனசு துடிச்சிட்டு இருக்குது. எப்படா ஊர் வந்து சேருமின்னு இருக்குது. கை காலெல்லாம் ஜில்லுன்னு இருக்குற மாதிரி தோணுது. இத்தனைக்கும் நாங்க போனது கோடை காலத்திலே.

ஒரு வழியா ஊர் வந்து சேர்ந்தோம். அங்கே கூடி இருந்த மக்கள் எல்லாருமே கொஞ்சம் அமைதியா இருக்குற மாதிரி தெரிஞ்சது. என்னோட மன ப்ரம்மையா கூட இருக்கலாம். ஏற்கனவே வலைகளில் தேடிப் பிடித்து பன் ஜி ஜம்பிங் படித்திருந்தாலும், இப்போ நேர்ல பார்க்கும் போது அப்படியே இதயமே வெளில வந்துவிடுமோன்னு ஓவர் ஃபிலிங்க்ஸ். இதிலே 2 பேரு காசு போனாலும் பரவாயில்லைன்னு வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டாங்க. அவங்களை சமாதன படுத்துற மனநிலைல யாரு அங்கே இருந்தாங்க? அதான் எல்லாருக்குமே மனசு எகிறி குதிச்சிட்டு தானே இருக்குது. எங்கள் முறை வந்தது. வீராதி வீரன் எங்கள் குழுவிலே சின்னவன் நான் முதல்ல போறேன்னு ஜம்பமா கிளம்பினான். பிறகு தான் தெரிஞ்சது பயத்திலே அப்படி உணர்ச்சி வசப் பட்டுட்டானாம். இடுப்பிலே பட்டையா ஒரு கயித்தை கட்டினாங்க. அப்புறம் அந்த கயிற்றின் ஒரு முனை தொடையை சுற்றி கெண்டைக்காலில் முடிந்திருந்தது. மற்றொரு முனை நீள கயிற்றில் மாட்டிவிடுவதற்காக சற்று லூசாக இருக்குது. நம் முறை வந்ததும், ஒரு அக்கா (அழகான பெண்மணின்னு சொல்லியிருக்கனுமோ) நம் இடுப்பில், கெண்டைக்காலில் கட்டிய முடிச்சிகள் சரியாக இருக்குதான்னு பாக்குறாங்க. அப்புறம் க்ரேன் வந்து பக்கத்தில் நிக்குது. அதுக்குள்ள தள்ளி விடுறாங்க. க்ரேனில் இரண்டு ஹண்ட்சம்ஸ் இருக்குறாங்க. அரைக்கால் உடுப்பில் கையில்லாத சட்டையில், பச்சை குத்திய புஜங்களை காண்பித்துக் கொண்டு சிரிப்புடன் உள்ளே வரவேற்றார்கள். க்ரேன் கீழிருந்து 300 அடி மேலே செல்லும் வரை நம்மிடம் பேச்சு கொடுத்துக் கொண்டும், விளக்கங்கள் (நாம் கேட்காமலே) சொல்லிக் கொண்டும் வருகின்றனர். இன்னக்கி வரை என்ன பேசினாங்கன்னு முழுசா எனக்கு தெரியாது. முதல் முறையா உங்களுக்கு அப்படின்னு அவங்க கேட்டதும், பூம்பூம் மாடு மாதிரி கண்கள் உருட்டியது மட்டும் ஞாபகம் இருக்குது. சின்ன சின்ன தகவல்கள் ஞாபகம் இருக்குது. மத்தமடி எல்லாமே காற்றோடு காற்றாய்…

முதலாமவன் குதித்தாயிற்று. அதற்குள் எனக்கு முன்னால் நின்ற நண்பனும், நானும் ரெடியா இருக்கோம். எனக்கப்புறம் இன்னும் இருவர் எங்கள் நண்பர்கள். எப்படி தப்பிப்போமின்னு இது வரை கணக்கு போட்டுட்டு இருந்த மனம், இப்போது எப்படா முடியுமின்னு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. இரண்டாவதாக குதித்தவன் சரியாக(?) விழாததால், வானத்தில் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கிறான். கயிறு வேகமாக சுற்றுகிறது. எனக்கு முன்னால் போனவனுக்கா இந்த நிலமை வரணும். அதைப் பார்த்ததும் என்னோட கால் கையெல்லாம் கழண்டு தனித் தனியா விழுற மாதிரி கொள கொளன்னு இருக்குது. தலை ஒரு பக்கமும், கீழே ஒரு பக்கமும் பிளந்து நிக்கிற மாதிரி இருக்குது. நாபிலேயிருந்து என்னவோ உருண்டு அப்படியே வாய் வழியா வெளில வருவது மாதிரி இருக்குது. பின்மண்டைல யாரோ சம்மட்டியால அடிக்கிற மாதிரி இருக்குது. முன்மண்டைல யாரோ குடையிற மாதிரி இருக்குது. கண்ணெல்லாம் பிதுங்கி வெளில வந்துருமோன்னு இருக்குது. முன்னால் இருந்தவன் எப்போ இறங்கினான், நான் எப்போ க்ரேனில் ஏறினேன்னு தெரியல. ஏதோ தள்ளிக் கொண்டு போய் விட்ட மாதிரி இருக்குது. ட்ராகன் பச்சை குத்தியவன், என் கைகளை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டு, தைரியம் சொல்ல ஆரம்பித்தான். நானும் ஏதேதோ உளறிக் கொண்டே தான் இருந்தேன். 300 அடி மேலே மெல்ல ஊர்ந்து வந்த க்ரேன் போலவே என் மனசும் மெல்ல மெல்ல பயம் தெளிந்து புது அனுபவத்திற்கு தயாராகியது. பயத்தை நாம் வெல்லும் வரை தானே பயத்திற்கு மரியாதை. வென்றதும் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடுமல்லவா. அது போல 300 அடி உயரத்திலிருந்து கீழே விழுகையில் சிறு கயிறு மட்டும் தாங்கிக் கொள்ளும் நம்மை என்ற தைரியத்துடன் குதிக்க நான் ரெடி. அப்போ நீங்க?

இளைஞர்கள் ஆல் த பெஸ்ட் சொல்லி முதுகில் சின்ன புஷ். க்ரேனில் இருக்கும் போது சின்ன சின்ன தகவல்கள் சொல்லியிருந்தாங்க. அவங்க லேசா தள்ளியதும், நான் தலை குப்புற விழ ஆரம்பித்தேன். விழும் போது கண்களை அகலத் திறந்து சுற்றியுள்ளவற்றைப் பார்த்தாலும், ஒன்னுமே பார்க்கவில்லை. :-) படக்குன்னு சுண்டி விட்ட மாதிரி ஒரு லெவல் வந்ததும் கயிறு நின்னு வலமும் புறமும் ஆட ஆரம்பிச்சது. அதே நேரத்திலே பயமும் அறவே போயிருச்சி. நான் தலைகீழாக தொங்க, இப்போது கயிறு வலமும் இடமுமாக ஆடுகிறேன். பெண்டுலம் போல இருக்குது. நான் கைகள் இரண்டையும் விரித்தவாறு மெல்ல பறப்பது போல் இருந்தது. என்னில் உள்ளுறுப்பு, வெளியிறுப்பு என்ற நிலை மாறி விட்டது. கயிறு ஒரு நிலைப்பட்டதும், காற்றிலே இரண்டறக் கலந்த மாதிரியும், நானும் இயற்கையும் வேறல்ல மாதிரியும், ஒருவித லகு தன்மை தொற்றிக் கொண்டது. எதுவுமே பாரமா இல்ல. மனசு லேசா இருக்குது. உடல் லேசா இருக்குது. காற்றாய் நான் மாறிவிட்டேன். 37 செகண்டு தான் இந்நிலை இருக்குமின்னு சொன்னாங்க. ஆனா எனக்கு ஒரு யுகமே கழிந்த மாதிரி இருந்தது. நான் அன்று அனுபவித்த அக்கணங்கள்…. அன்று என்னுடன் இருந்த ஏகாந்த நிலை….. ம்ம்ம்…. இன்று அழியா நினைவுகள் ஆகிவிட்டன.

கயிறு அசைவது நின்றதும், தலைகீழாக தரைக்கு வந்ததும், வாழ்த்தி அனுப்பிய பெண்மணி என்னிடம் வாஞ்சையுடன் கதை கேட்டதும், மேல் கட்டியிருந்த கயிறு அவிழ்க்கும் வரை மனதில் கொண்ட அமைதியை பிடித்து வைத்திருந்ததும், தன் நிலை வர 20 நிமிடங்கள் ஆகியதும், எனக்கு அப்புறம் செல்ல வேண்டிய 2 நண்பர்களும் ஓடி ஒளிந்து கொண்டதும் விவரிக்க ஆரம்பித்தால் பதிவு பெருசா ஆயிரும். அதனால இப்போ வீடியோ பாருங்க.

http://youtube.com/watch?v=lVBcCvsQ8bM&feature=related
http://youtube.com/watch?v=Y1soPMxNCLE
http://youtube.com/watch?v=nj8mumkOY78&feature=related

பின்குறிப்பு:
விளையாட நெறையா செலவு செய்ததால, வீடியோவுக்கு அந்த அளவு பணம் கொடுக்க வசதியில்லாமல் போயிருச்சி. அதனால இரவலா யாரோ ஒருவர் செய்த பயணத்தை யூ ட்யூபில் கடன் வாங்கி உங்களுக்கு தருகிறேன் மக்களே. ஏமாத்திட்டேன்னு நெனக்காதிங்க.

Friday, February 01, 2008

தோழியவள் சிரிப்பு

தோழியவள் சிரிப்பு


களங்கமில்லா சிரிப்பு
கலங்கடிக்கும் சிரிப்பு
தோழியவள் சிரிப்பு
எனக்குள் சிலிர்ப்பு

சிரிப்பின் உள்ளிருக்கும் துடிப்பு
துடிப்பு ஏற்படுத்தும் கிறுகிறுப்பு
அவள் உதிர்க்கும் சிரிப்பு
பத்திரமாய் காதினருகே

குழந்தையின் கொஞ்சல்
குமரியின் சிணுங்கல்
இயற்கையின் ரசிப்பு
தோழி, உன் சிரிப்பு

கள்ளமில்லா சிரிப்பு
பட படக்கும் பட்டாம்பூச்சியாய்
வெட்கமே மையமாய்
கூத்தாடும் நெஞ்சம் ஆனந்தமாய்

ஒதுங்கி நின்றக் கூரையில்
சில்லெனக் காற்றில்
சில துளி மேனி தொட
சிலிர்க்கும் மனம் போல

சாரலை அள்ளி அடக்க
தவிக்கும் உள்ளம்
விட்டு ஓடவே
தடுமாறும் எண்ணம்

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்பாய்
தோழியவள் சிரிப்பில்
எனை நீ காண்பாய்

இதழ் விரிய சிரித்திடுவாள்
என் நங்கை
அவள் அனைவரின் உள்ளங்கவர்
நல் மங்கை

-- காட்டாறு