Tuesday, January 29, 2008

அன்பின் மாதம் ஆரம்பம்

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியை காதலர் தினமின்னு சொன்னாலும் சொன்னாங்க எந்த கடைக்குப் போனாலும் சிவப்பு கலரில் விதவிதமான பொம்மைகளும், இதயமும் தான். கடந்த வருடம் என்னோட அமெரிக்க நண்பர்களிடம் இது குறித்து விவாதித்த போது அவங்க சொன்னது என்னான்னா... இந்த தினத்தில் நம் அன்பை (காதலை மட்டுமல்லாது) நம் பெற்றோருக்கும், தோழ தோழிகளுக்கும். சகோதர சகோதிரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளலாம். காதலர் மட்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு. அப்படியா? அன்பை பரிமாற தனியாக ஒரு தினம் வேண்டுமா? சொல்லுங்க மக்களே. இந்த கேள்விக்கும், இந்த பதிவிற்கும், இந்த தலைப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. எனினும், ஒருவரை ஒருவர் அன்பு செய்து இந்த அன்பின் மாதத்திலும் வாழ்வோம்.

இப்போ கதைக்கு வருவோம். பறவைகளை கவனிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுது போக்கு. காலைல எழுந்ததும் கீச் கீச் கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும் பாருங்க. அனுபவிச்சவங்களுக்கு நான் சொல்லுறது புரியும். (நானெல்லாம் இந்த கீச் கீச் கேட்டுட்டே அடுத்த ரவுண்டு தூங்கிருவேன். உண்மையை சொல்லிட்டேனப்பா). பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதமின்னு பாட்டு கேட்டிருக்கிறோம். அது எத்தனை உண்மைன்னு அவங்களை உன்னிப்பா கவனிச்சா புரியும். அவைகள் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம். கலர் கலரா, வித விதமான சைஸ், ஷேப்களில், கூக் கூக் சத்தங்களிலும் வித விதமாய். அப்பப்பா... தூரமா இருந்து பார்க்கும் போது அவைகளும் நம்மை கவனிக்காத மாதிரி இருக்கும். அவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஒருவித காப்புணர்ச்சியுடன் இருப்பது தெரியும். பக்கத்தில் போனா என்ன ஆகுமின்னு நான் சொல்ல வேண்டியதில்லை.

ராபின்ன்னு ஒரு பறவை நம்மூரு ஊர்க்குருவி மாதிரி ஆனா கொஞ்சம் பெருசா இருக்கும். சிறு தானிய வகைகள் கொடுத்தால் தினம் நம் வீட்டின் முன் ஆஜர் ஆகி விடும். அதே பறவை தான் தினம் வருமான்னு எனக்கு தெரியாது. ஆனா அவற்றை பார்க்கும் போது உற்சாகம் வருவது உண்மை.

ஸ்டார்லிங்-ன்னு ஒரு பறவை. பெரும் கூட்டமா தான் இருக்கும். சர் சர்ன்னு எங்கேயோ திரும்பி 2 முறை பறந்துவிட்டு அப்புறமா வேறு திசையில் பறந்து போயே போயிரும். எதுக்காக அப்படி செய்துன்னு எனக்கு புரியல. காத்திருந்து பார்ப்பவர்களை ஏமாற்றுகிறதோ?

கார்டினல் பத்தி பேசலைன்னா இந்த பதிவு முழுமை பெறாது. அவ்ளோ அழகு. அருமையான குரல். இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.

பறவைகள் பத்தி பேசினா பேசிக் கொண்டே போகலாம். அதனால இதோ உங்கள் பார்வைக்காக சிறு விடியோ.

Saturday, January 26, 2008

எங்க ஊர் கார் திருவிழா

எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் ஜனவரி 19 ஆரம்பித்து 27 வரை கார் திருவிழா நடைபெறும். இந்த 9 நாட்களும் ஜே ஜேன்னு திருவிழாக் கோலம் தான். பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழாவிற்கு, கார் மோகம் கொண்டவர்கள் மட்டுமல்லாது வேடிக்கை பார்க்க நினைக்கும் எல்லாருமே வருவாங்க. வயது வித்தியாசமில்லாது அனைவரும் கண்டுகளிப்பதைப் பார்க்க அருமையாக இருக்கும். 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழா, இரண்டாம் உலகப்போரின் தற்காலிகமாக 1941 முதல் 1953 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 1953-இருந்து இன்று வரை தங்குதடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

கோபோ ஹால் எனப்படும் 2.4 மில்லியன் சதுரடி கொண்ட இடத்தில் வருடாவருடம் நடக்கும் இந்நிகழ்ச்சியினால் 500 மில்லியன் டாலர் வருமானம் வருவதாயும், பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாயும், குழந்தைகள் நல்வாழ்விற்கு கடந்த ஆண்டு 6 மில்லியன் டாலர் கொடுத்ததாயும் இந்நிகழ்ச்சியை நடத்தும் NAIAS (North American Internationa Auto Show) நிறுவனத்தர் கூறுகின்றறர்கள். இவ்வாண்டு 86 கார் கம்பெனிகளும், கார் பாகம் தயாரிக்கும் கம்பெனிகளும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கார் கம்பெனிகாரர்களும் புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்வாங்க. இதில் அடுத்த வருட வெளியீடுகளும் (production cars), 10 வருடம் கழித்து இப்படியும் இருக்கலாம் என யூக வெளியீடுகளும்(Concept cars) அடங்கும். யூக வெளியீடுகளை விவரிக்க பெண்மணிகள் இருக்காங்க. (எங்கெயிருந்து தான் பிடிச்சிட்டு வருவாங்களோ? ரொம்ப சிம்பிள் இவங்களெல்லாம்...). இவங்க பேசும் பேச்சைக் கேட்பதற்கே வரும் கூட்டமும் இங்குண்டு. ;-) ஒவ்வொரு கம்பெனிக்காரர்களும் விளம்பரத்திற்காக செலவிடும் பணத்தை சொன்னால் கண்டிப்பா மயக்கம் தான்!

வருடா வருடம் பார்ப்பினும் சலிக்காத ஒரு நிகழ்வு எனக் கூறலாம். பிரமிக்க வைக்கும் விளம்பரங்கள், போட்டிகளின் உச்சத்தில் உருவான கார்கள், அவற்றின் பெருமைபாடும் சிட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கால்வலி பொருட்படுத்தாது சுற்றி சுற்றி வந்து புகைப்படம் பிடிக்கும் மக்கள் கும்பல்.... அப்பப்பா சொல்லி மாளாது. இதையெல்லாம் பார்த்தப்போ மனதில் தோணினது நெப்போலியன் சொன்ன வரிகள் தான் Imagination rules the world. No doubt about it! அங்கே எடுத்த எனக்குப் பிடித்த கார்களின் புகைப்படங்களை பார்த்து மகிழுங்கள் மக்களே!
பின்குறிப்பு:
யாருக்காவது படங்கள் தேவைப்பட்டால், மறுக்காமல் மறுமொழில சொல்லுங்க. உங்களுக்கு இல்லாததா? பிற்தயாரிப்பு இல்லாத ஒரிஜினல் படம். உடனே அனுப்பிடலாம்.

Wednesday, January 16, 2008

இரண்டாவது முறையாக

என்றும் போல் அன்றும் ஞாயிறு புலர்ந்தது. ஆழ்கடலின் அமைதியாய் என்றும் இருக்கும் என்னுள்ளத்தில் ஒரு குறுகுறுப்பு. யாரோ என்னைத் தேடுவது போல். திடுக் திடுக்கென திரும்பிப் பார்க்கிறேன். இன்று டேவ்வோடு கழிக்கும் நாள். மட மடவென வெளியில் செல்ல ஆயுத்தமானேன். மனசோ நிலைகொள்ளாமல் தவிக்கிறது. ஒரு வேளை டய்ய(யே)ன் என்னைத் தேடுகிறாளோ? சீக்கிரம் கிளம்பினால் அவளையும் இன்று பார்த்து விடலாம். 20 நிமிட ட்ரைவ் தான். 10 நிமிடம் அவளுடனும், ஜேமியுடனும் பேசிவிட்டு, அப்புறமாக டேவ்வின் இருப்பிடம் செல்லலாம். டய்யனை முதன் முதலாய் சந்தித்த நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன. நிறவேற்றுமை காரணமாக என்னை ஏற்றுக் கொள்ள மறுத்த டய்யன். அவளை வழிக்குக் கொண்டுவர தளரா மனதுடன் போராடிய என் கிறுக்குத்தனங்கள். 2 மாத கால போராட்டத்திற்கு பின், இந்த 7 மாதங்களாக எங்களுக்குள் நடந்த பேச்சுக்கள், பறிமாறல்கள், அந்த சுருக்கத்தினூடே அமிழ்ந்து கிடந்த அனுபவக் கிளறல்கள், குழந்தைத்தனமாய் சுயம் கட்டவிழ வைக்கும் சம்பாஷணைகள், என்னை தோழியாகவும், தாயாகவும் பாவித்த அவள் நெருக்கம். ம்ம்ம்… என் மனசு முழுவது டய்யன் தான். ஒருவேளை என்னை அவளைக் காண வா என அழைக்கிறாளோ?

அலுவலக கட்டிடம் முன்னிருந்த ஊழியர் என்னை ஆச்சர்யம் கலந்த வேதனையோடு பார்க்கிறாள். ஏன்? என்ன ஆச்சி? அவளிடம் என்ன கேட்டேன், அவள் என்ன பதில் சொன்னாள் என அறிவிற்கு எட்டவில்லை. இருவரும் அமைதியாய் டய்யனின் அறைக்கு சென்றோம். வெற்று விழிகளுடன் ஜேமி வாயிலில். எல்லாமே புரிந்து போனது. புரிந்ததும், மனது திரும்பவும் அமைதியானது. கதவைத் திறந்ததும், அவளுக்கே உரித்தான, நேர்த்தியாக உடை உடுத்தி, கள்ளப் பார்வையில் சிரித்தவளாய், "எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்" என அவள் வாய் முணுமுணுக்க, படுத்தவாறே கைகளை நீட்டினாள். கைப் பற்றியதும், கண்கள் ஆயிரம் வார்த்தைகள் ஒரு சேரப் பேசின. ஆதரவாய் என் கரங்கள் அவளின் கரத்தை தடவிக் கொடுத்த வண்ணம் இருக்க, அமைதியாய் கண்மூடினாள். என் மனமோ சுயநலத்தின் மறுபிறவியாய், "டய்யன், மறந்துவிடாதே நாம் பேசிய கதைகளை. யாருக்கு அழைப்பு முதலில் வந்தாலும், அடுத்தவருக்கு "அதை"ப் பற்றி உணர்த்த வேண்டும் என உறுதி மொழியெடுத்ததை" என முணுமுணுத்தது. சட்டென மறைந்த சுயநலத்தில் பிறந்தது மீண்டும் ஆழ் அமைதி. என் கைகளை விடுவித்து, மெல்ல வாயிற்கதவருகே சென்று திரும்பிப் பார்த்தேன். "மீண்டும் உனைச் சேர்கையில், நாம் சிரித்து மகிழலாம் தோழி. போய், மீண்டும் வா."

வெளியே ஜேமியின் வெற்று விழிகள் நீர் சொறிந்த வண்ணம். என்னை இறுகத் தழுவிய அவர் தேம்பத் தொடங்கினார். பேச்சினூடே, "நீ வருவாய் என டய்யன் நிச்சயமாக நம்பினாள். எல்லோரும் நீ அவளை அடுத்த வாரம் தான் பார்க்க வருவாய் என ஆசுவாசப் படுத்த முயன்ற போதும் அவள் கேட்கவில்லை" என்றார்.

பின்குறிப்பு:
டய்யனுக்கு (Diane) வயது 85. உற்ற தோழியாய் எங்கள் 6 மாத கால உறவு அவளை ஒருமையில் அழைக்க வைத்தது. ஜேமிக்கு(James alias Jamie) 97 வயது. நாங்கள் மூவரும் பேச ஆரம்பித்தால், அந்த 2 மணி நேர கால அவகாசம் பத்தாது.

Monday, January 14, 2008

கண்மணித் தொடர்... பெஸ்ட் இஸ் ரெஸ்ட்

கண்மணி 'பதிந்ததில் பிடித்தது' சொல்ல கூப்பிட்டு இருக்காங்க அவங்களோட இந்த பதிவுல (http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html). அவங்களுக்கு முதல்ல நன்றி சொல்லி ஆரம்பிப்போம்.

எனக்கு பதிவு எழுத 10 அல்லது 20 நிமிடங்கள் தான். அதற்கு மேல நேரம் செலவழித்தது கிடையாது. அப்போதைக்கு மனசுல என்ன தோணுதோ, அவை மட்டுமே எழுத்துக்களாய். கவிதைகள் பெரும்பாலும் எப்பவோ எழுதியவைகள் தான். (இதுல கண்மணியை கலக்கிய கவிதையும் அடங்கும்). கவிதைகளும் 10 அல்லது 15 நிமிடத்தில் எழுதியவைகள் தான். எண்ணங்கள் செல்லும் வேகத்திற்கு டைப் அடிக்க முடியிறதும் காரணமாய் இருக்கலாம். அதனால எதுவுமே உருப்படி கிடையாது. ஒன்றைத் தவிர. (அதானே ஒன்னாவது இருக்கனுமேன்னு நெஞ்சை நிமிர்த்திக்காதீங்க மக்கா....). அது தான் தாயுமானவள்/அத்தையம்மா/.... (http://kaattaaru.blogspot.com/2007/12/blog-post_11.html) இது மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு கேக்குறவங்க கோபியை கேட்கவும். அவரோட அன்புத்தொல்லை தாங்க முடியாம... 10 நாள் நச்சி தாங்காம, 10 நாள் ஓடி ஒளிஞ்சி, 10 நிமிஷத்துல எழுதி, 10 கரெக்ஷன் வாங்கி, 10 முறை திரும்ப திரும்ப வாசித்து... அப்பப்பா.. எத்தனை பத்து....தலைல குட்டு வாங்காத குறை தான். ;-)

இதிலே யாரைக்கூப்பிட.... எல்லாரையுமே கண்மணியக்கா 10 பேரை கூப்பிட்டு, அந்த 10 பேர், இன்னும் 10 பேரை கூப்பிட்டிருந்தா? இருந்தாலும் நாங்க ரூல்ஸ் மாற மாட்டோமில்ல.. அதனால... இதோ

1) யானைகளுக்கு சொந்தமான பொன்ஸ் (www.pookri.com)
2) கட்டுமான பிரிவுக்கு தலைவர் குமார் (http://madavillagam.blogspot.com)
3) சந்தன முல்லையாக வாசமளிப்பவர் (http://sandanamullai.blogspot.com)
4) தென்றாலாய் வருடுபவர், நாணயஸ்தன் (http://thendral2007.blogspot.com)
5) நம்மை பங்காளியாக்கி, மாயாவியாய் திரிபவர், பங்கு வணிகத்தை அலசி ஆராய்பவர் (http://aayirathiloruvan.blogspot.com) [சொக்கரே, இந்த முறை அழுகுணி ஆட்டம் ஆடப்பிடாது சொல்லிட்டேன். அதான் இரண்டாம் முறையும் விடாது கருப்பாய் தொடர்ந்திருக்கிறேன்]

பின்குறிப்பு:
ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கண்மணியக்கா பதிவுல ((http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html) படிச்சிக்கோங்கப்பா.

Sunday, January 13, 2008

பொங்கல் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!


பின்குறிப்பு:
பொங்கல் வாழ்த்துக்கு என்னடா பால் காய்க்கிறதை போட்டிருக்காளே அப்படின்னு எண்ண வேண்டாம் மக்களே. இருக்குறதை வச்சி வாழ்த்திட்டேன்.

Thursday, January 10, 2008

காதல் மீன்களும் தலாய் லாமாவும்

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல. என்னதான் தலைப்பு வைக்கிறதுன்னு இல்லாம போச்சப்பா.... ஜனவரி புகைப்பட போட்டில கலந்துக்கலாமின்னு சுட்டுத் தள்ளுனதுல மிஞ்சினது இதுதாம்பா... ஒவ்வொரு படமும் எடுக்குறது முக்கியமில்ல... அதன் பிற்தயாரிப்பு ரொம்ப முக்கியமின்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. அதுக்கு அழகான உதாரணமா நம்ம ஐஸ்ஸையும் சொன்னாங்க. அப்படி இருந்தாலும் இந்த சிறுமூளைக்கு இன்னும் பிற்தயாரிப்பிலே ஆர்வம் வரல. அதனால எடுத்ததை அப்படியே உங்கள்ட்ட கொடுத்துட்டேன். :-) சோம்பேறிப் படுபாவின்னு திட்டாதிங்க. காதிலே விழுது. முதல் படம் தவிர மத்ததெல்லாம் நேத்து எடுத்தது தான். முதல் இரு படங்களும் போட்டிக்கு. மத்தெல்லாம் உங்களுக்கு. எனக்கும் தான். ;-)

எனக்கு ரொம்ப பிடிச்ச படம். Paper Weight. உள்ளே டால்ஃபின் மீனினக் குடும்பம். அழகா இதயத்தின் வழியே குதிக்கிறாப் போல் இருக்கும். அரை இருட்டு அறையில், பேப்பர் வெயிட்டின் கீழே ஊதா வெளிச்சத்தை பாய்ச்சி எடுத்தது. மார்ச் மாதத்திலே ஒரு சுட்டிக் குழந்தையுடன் விளையாடும் போது எடுத்தது இந்த படம். உள்ளே 2 டால்பின்கள். ஒரு கோணத்தில் (angle) 2 மீன்கள் நான்காய் தெரியும். அதை கரெக்டா பிடிக்குறதுக்குள்ளே... அப்பப்பா... நாம கரெக்டா எல்லாம் இருக்குதுன்னு கிளிக்கப் போகும் போது.... ம்ம்ம்.... அந்த சுட்டி, லைட்டை படக்குன்னு ஆஃப் செய்துரும். அப்போ ஜாலியா தான் இருந்துச்சி. இப்போ இன்னும் ஜோரா இருக்குது. மலரும் நினைவுகள். :-)


இந்த படமும் எனக்கு பிடிச்சது. இதில் தலாய் லாமா புன்முறுவலோடு உலக உருண்டையைப் பார்க்கிற மாதிரி இருக்கும். One of the cherishable books by Dalai Lama (The Universe in a Single Atom: The Convergence of Science and Spirituality). புத்தக தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் வந்த மாதிரி எனக்கொரு ப்ரம்மை. உங்களுக்கு? ஆனா ப்ளான் எதுவும் பண்ணி எடுக்கல.

கீழ்வரும் படங்களும் எனக்குப் பிடித்தவையே. ச்சும்மா ச்சும்மா.... யான் பெற்ற இன்பம்.... ;-)
Monday, January 07, 2008

ஓட்டுதல் எனக்குப் பிடிக்கும்... உங்களுக்கு?

ஓட்டுறது ஒரு கலைங்க ... நம்ம குசும்பன் பண்ணுற வேலைய சொல்லலைங்க... அவங்க மாதிரி நமக்கு நகைச்சுவையா ஓட்டத் தெரியாதுப்பா. நான் சொல்லுறது தரையில் வாகனம் ஓட்டுறது. பாசமலர் அக்கா (? என்னது... பாசமலர்ல தங்கை தானே வருவாங்க) பாசமா மொக்கைப் போட கூப்பிட்டிருந்தார் (http://pettagam.blogspot.com/2008/01/tag.html). நம்ம அதை தவிர வேறேதும் எழுதுறதில்லைன்னு புச்சா வந்த அவுங்களுக்கு தெரியாது போல. ஆனாலும் நம்மளை மதிச்சவங்களை மதிக்காம விடலாமா? அது நல்லாயிருக்குமா? அதான் ச்சும்மா ச்சும்மா சுயபுராணம் ஒன்னு எடுத்துவிடப் போறேன்.


சின்ன வயசிலிருந்தே எனக்கு வாகனம் ஓட்டுறதுல அம்மாம் சந்தோஷம். முதல்ல ஆரம்பிச்சது 2 கால்(!) சைக்கிள் தான். அதுவும் பெரியவுக ஓட்டுற சைக்கிள். குரங்கு பெடல் போட்டு, நடக்கு நடக்குன்னு...... ம்ம்ம்..... அந்த காலம். அதுவும் பசங்களோட போட்டிப் போட்டுட்டு.... ஒருத்தர ஒருத்தர் முந்துறோமின்னு, இடிச்சி, முட்டிய பெயர்த்த நாட்கள்.... சுகமாத்தேன் இருக்கு. அதெல்லாம் ஒரு காலம்.

அப்புறம் மோட்டார் வண்டிகளின் வரிசை. முதல்ல வர்றது அம்பாசிடர் கார். 8 வயது சிறுமியாய் இருக்கும் போது, அப்பாவின் மடியில் அமர்ந்து ஸ்டியரிங் பிடிக்க, அவருக்கு தெரியல... தப்பான புள்ளைக்கு சொல்லிக் கொடுக்கோமின்னு.... அப்போ பிடிச்சிது கார் பயித்தியம். 10 வயசு வரை ஸ்டியரிங் மட்டும் தான். :-( அப்புறம் 10 வயசுல ஏதோ தைரியத்துல தனியா (திருட்டுத்தனமாத் தான்), முதல் பிள்ளையார் சுழி. தன்னோட மகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலே தைரியமா ஓட்டியது பார்த்து அப்பாருக்கு ஏகப் பெருமை. பெருமையா (அவர் காரை காப்பாத்திக்கவும் தான்) கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். திருட்டுத்தனம் தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லிட்டார்.

13 வயசு இருக்குறப்போ லூனா. சர்... சருன்னு ஊரை வலம் வந்தது இன்னுமும் ஞாபகம் இருக்குது. வெள்ளை கலரு வண்டி.. செம்மண்ணா வீடு வந்து சேரும். ஆனா இது மேல ஆசை உடனே போயிருச்சி. த்ரில் இல்லாத மாதிரி ஒரு உணர்வு. அதுக்கு காரணம் அப்பாவோட புல்லட்ன்ன்னு நெனைக்கிறேன். டட் டட்டுன்னு ப்பெருசா சத்தம் போட்டு நெஞ்சை திடுக்கிட வைக்கிற அது மேல ஒரு கண்ணு. இல்ல...ரெண்டு கண்ணுமேன்னு சொல்லலாம். மெல்ல அவர்கிட்ட கிசுகிசுக்க... அம்மா காதில் அது விழ... செமத்தியா அப்பா வாங்கிக் கட்டிக்கிட்டாங்க அம்மா கிட்ட. புள்ளைக்கு ஓவரா செல்லம் கொடுக்குறாங்கன்னு பழி வேற. அதனால ரெண்டு பேரும் சேர்ந்து திருட்டுத்தனம் பண்ண வேண்டியதாப் போச்சி. ஹி ஹி ஹி. ஞாயிறு தோறும் காலையில எல்லாருமா அப்பாவோட பீச்சுக்கு போவோம். அன்னக்கி நான் மட்டும். மத்தவங்களை கட்டிங்ஸ் போட்டாச்சி. :-) அப்புறம் என்ன... புல்லட் ராணி ஆகிட்டேன். இன்னும் புல்லட் மோகம் போகலைன்னா பார்த்துக்கோங்க.

அப்புறம் காலேஜ் வாழ்க்கை. அக்காவுடன் லூனா. கடியா இருக்கும். ஏன்னா அவளுக்கு வேகம் பயம். எனக்கோ மெதுவாப் போனா பயம். முதல் வருடம் எப்படியோ சமாளிச்சிட்டேன். அந்த லீவுக்கு தாத்தா ஊருக்குப் போக, அங்கே ஸ்கூட்டர் முதல்ல ஓட்ட... அப்புறம் மெல்ல அப்பாகிட்ட ஸ்கூட்டர் வாங்கி கேட்க, எங்கள் ஊரில் முதல் முதலில் தினமும் ஸ்கூட்டர் ஓட்டும் பெண்மணி ஆயிட்டோமில்ல. இதுல கீழ விழுந்து வாரின கதையெல்லாம் நாங்க சொல்ல மாட்டோமாக்கும்.

ஒரு வழியா மேல்படிப்புக்கு ஹாஸ்டல்ல போட்டதும் தான் அம்மாவுக்கு நிம்மதி வந்திருக்குமின்னு நெனைக்கிறேன். அங்கேயும் சும்மா இருப்போமா? தோழ பெருமக்களோடு கம்பைண்ட் ஸ்டடி. பசங்க அவங்க வீர தீர செயல்களையெல்லாம் சொல்ல, பொண்ணுங்க ங்கேன்னு கேட்டுட்டு இருக்க, நாம செய்த வீர சாகசங்களை சொன்னா... நம்புனா தானே. தோழியின் அம்மா அப்பா வெளியூர் போயிருக்கப்போ... அவங்க வீட்டு ஆட்டோவை ஓட்டி நிரூபிக்க சொல்ல.... அதையும் விட்டு வைக்கல. ஆட்டோவை எருமை மாடு மேல ஏத்துன கதையெல்லாம் சொல்வோமாக்கும். ;-)

ஒரு வழியா ஆசையெல்லாம் போயிருச்சின்னு மட்டும் நெனைக்க வேண்டாம். எங்க ஊர்ல லாரி நெறையா உண்டு. தம்பியின் உதவியோடு... ஒரு லோடு அடிச்சோமில்ல. அதுக்கப்புறம் தான் மனசு நிம்மதியாச்சி. எல்லா வண்டியும் ஓட்டியாச்சின்னு மனசுக்குள்ள குதியாட்டம் போட்ட அந்த நிம்மதி அமெரிக்கா வந்ததும் போயே போச்சி. ஏன்னு கேக்குறீங்களா... இங்கே ட்ரக்குன்னு ஒரு வண்டி இருக்குதுங்க. இங்கே போய் படம் பார்த்துக்கோங்க (http://www.hankstruckpictures.com/len_rogers4.htm) எப்பப்பா.... அத்துணை நீளம். அதை பெருமூச்சோட பார்க்குறதோட சரி. ஓட்ட ஆசை இருக்குது. ஆனா அதுக்குன்னு தனியா லைசென்சு எடுக்கனுமாம். (என்ன இருந்தாலும் நம்மூரு போல வருமா?) ஏன் ஓட்டனுமின்னு காரண காரியமெல்லாம் சொல்லனுமாம். அதனால ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்குமின்னு அப்பப்போ பெருமூச்சியோட பார்த்துக்க வேண்டியது தான்.

எனக்கே அறுவையா இருக்குதே. மக்களே.... உங்கள் புதுவருடம் இப்படியா ஆரம்பிக்கனும். ம்ம்ம்... எல்லாம் உங்கள் நேரம். என்சாயீஈஈஈஈ.....

பின்குறிப்பு:
மொக்கை போட 4 பேரை கூப்பிடனுமாமே. வாங்க ராசாத்திகளா.... வாங்க....
1) காதலுடன் காதலன் சென்ஷி (http://senshe-kathalan.blogspot.com)
2) முயற்சியின் தலைவி முத்தக்கா (http://sirumuyarchi.blogspot.com)
3) அலசல் சிகாமணி காட்டான் தெகா (http://thekkikattan.blogspot.com)
4) மதுர சொக்கரு (http://aayirathiloruvan.blogspot.com)

Thursday, January 03, 2008

உயிரோடு உயிராய்

மற்றுமொரு வருடம். அதே நாம்; அதே மனநிலை. கொண்டாட்டம் ஒரு நாள்; திண்டாட்டம் பலநாள். சோம்பிக் கிடக்கும் நாட்கள்; கண்முன் விரியும் நிச்சயமற்ற நிலைகள். என்னடா.. என்னாச்சி இவளுக்கு. புது வருட கொண்டாட்டத்தில் தலையில் அடி பட்டுருச்சான்னு குழம்ப வேண்டாம் மக்களே. எப்பவும் போல தான் இருக்கேன். ஒரு அருமையான புத்தகம் (The Problem of the Soul by Owen Flanagan) அன்பளிப்பாக கிடைத்தது. முழுமூச்சா படிச்சி முடிச்சாச்சி. புத்தக விமர்சகம் பண்ண எனக்கு தெரியாது. ஆனால், மனதில் தோன்றிய எண்ணங்களை எனதருமை தோழ மக்களுக்கும் சொல்லி குழப்ப எனக்கு தெரியும். ;-)

படித்ததும் பற்பல சிந்தனைகள் கண்முன் விரிந்து, முன்னய காலத்துக்கு அழைத்துச் சென்றன. உடனே, பழைய பெட்டியை உடைத்தெடுத்து (?)… அச்… அச்.. அச்… (ஒன்னுமில்லைங்க தூசி)… அப்பா… கண்டுபிடிச்சாச்சி் அந்த பாட்டை. ;-) அன்று மனம் பிரதிபலைத்ததை கிறுக்கிய என் கைகள், இன்று ஏனோ எழுதத் தெரியாமல் தடுமாறுகிறது. சரி சரி…. இத்தோட நிறுத்திக்கிறேன்…. புரிஞ்சா புடிச்சிக்கோங்க ராசாத்திகளா…. புரியலைன்னா… எங்கிட்ட கேக்காதீங்கப்பா….. கால எல்லை தாண்டிவிட்டது.

பின்குறிப்பு (இந்த கிறுக்கலுக்கு):
Gist of the book is how to reconcile the two visions of mind.

உயிரோடு உயிராய்

ஆயிரம் கோடி நண்பருண்டு
ஆயினும் என்னைத் தேர்ந்தெடுத்தாய்
என்னுள் உன்னுடன் உறவாடினேன்
எனக்கு எல்லாமும் ஆனாய் நீ

நீயும் நானும் ஒன்றென்றாய்
ஒன்றாய் மாற்றுவது உன் திறன் என்றாய்
உன்னுடன் என்றென்றும் இருப்பேன் என்றாய்
இன்று, தனிமையில் தவிக்கவிட்டு எங்கு சென்றாய்?

என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
உன்னை நான் என்னவளாக்கினேன்
யார் யாரைத் தேடுகிறோம்
தேடல் நின்றது என்றெண்ணினேன்

நான் வேண்டும் என்பதாலா ஒளிந்து கொண்டாய்?
இடைவிடாது தேடுகிறேன்
என் தேடல் என்று நிற்கும்
என்னை விட்டுப் போகாதே

களிமண்ணாய் இருந்த என்னை
உயிர்மண்ணாய் உருவாக்கினாய்
உயிர் தந்து என்னுள் உயிரெடுத்தாய்
ஓருடலுக்குள் ஈருயிர் உள்ளதென்றாய்

என்னிதயம் உன் கை விளையாட்டு பொம்மையல்லவா?
விளையாடாமல் தள்ளிவிட்டதேன்?
விருப்பும் வெறுப்பும் உன்னுடையதாலா?
நீயும் நானும் ஒன்றல்லவா?

நீ என்னை உருவாக்கும் சிற்பியல்லவா?
உன் உளியால் காயப்பட்டேன்
காயம் என் காயம் மறக்கச் செய்ததை மறவேன்
வேண்டும் அந்த இன்பம் இன்று

நீ சொல்வது போல் வாழ்ந்தேன்
நீ சொல்வது போல் வீழ்ந்தேன்
ஒன்றுமில்லாதவனானேன்
ஒன்றாய் உறைந்தேன்

நான் வெற்றுக் காகிதம்
நீ வரையப்படாதது ஏதும் இங்கில்லை
ஆதலின், புதியதாய் ஒன்றும் என்னிடமில்லை
வரையத் தவறியது என் குற்றமில்லை

நீயின்றி நானில்லை
என்னிடம் உள்ளவையாவும் நீ தந்தது
உன்னால் வந்தது; எடுத்துவிடாதே
உயிர் கொடு; இல்லை உயிரோடு கொன்றுவிடு

-- காட்டாறு