Monday, July 28, 2008

சரியா போச்சிப் போ



வேக வேகமா ரிசர்வ் செய்ய வேண்டிய வேலைகளை ஆரம்பித்தாகிவிட்டது. கழுதை எட்டி உதைத்து விட்டது. குதிரையோ எங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஏமாற்றத்தை உதறிவிட்டு ஹுலப்பாய்க்கு தொலைபேசினால், 18 மாதத்திற்க்கு முன்னரே ரிசர்வ் செய்திருக்க வேண்டும். அப்பப்போ தொலை பேசுங்கள். எவராவது கான்செல் செய்தால், அந்த அறையை உங்களுக்கு தரலாம் என கடுப்படிக்கிறார்கள். சரி இந்த இரு நாட்களை சரி செய்ய என்ன செய்யலாமின்னு யோசித்து வான நடை (Sky Walk in Grand Canyon) பயிலலாமின்னு முடிவு செய்தாச்சி. நண்பர் அடுத்து என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாதுன்னு பட்டியல் போடலாமின்னு சொல்லுறார். நான் போர் கொடி தூக்குனது வலைக்கும், கைப் பேசிக்கும் மட்டும் தான். இந்த ரெண்டும் வேண்டாமின்னு சொன்னேன். ஒரு முறை முறைத்தவர் பெரிய மனசு பண்ணி தொலைஞ்சி போன்னு ரெண்டுக்கும் நோ நோ சொல்லியாச்சி. காட்டில் (?) தான் தங்கனுமின்னு சொல்லியாச்சி. அது சூப்பர். அப்போ மறந்துறாம அந்த டாய்லட் டிஷ்யூ எடுத்து வச்சிரும்மான்னு கட்டளை வேற. சின்ன மாறுதல் எங்களுடைய ப்ளானில். எல்லாம் முடித்தாகிவிட்டது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு உட்கார முடியல.

சின்ன குக்கர், பயண சைஸ் எலெக்ட்ரிக் ப்ர்னர், சின்ன சின்ன பாத்திரங்கள் இரண்டு எனவும், மத்தபடி ஒருமுறை உபயோகித்து தூக்கி எறிவார் போல் தட்டு, கரண்டி எல்லாம் எடுத்துக் கொண்டாச்சி. கொஞ்சம் அரிசி, ரவை, பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, மிளகு, கடலைப் பருப்பு, நிலக்கடலை எடுத்தாச்சி. அங்கே போனதும், தண்ணீர், சமையல் எண்ணெய், பால், மோர் வாங்கிக் கொள்ள கடை பார்த்தாயிற்று.

நெடும்நடைப் பயணம் அல்லவா? அதுக்கு ஏத்த மாதிரி காலணி, தார்குச்சி (Trekking poles), தொப்பி எல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து வெளியே வச்சாச்சி. தினமும் நடை பழகனுமின்னு திட்டமும் தீட்டியாச்சி.

இதுக்கிடையில் நண்பர் இந்தியாவிலேருந்து தொலைபேசுறார். வேலை விஷயமாக 3 மாதம் அமெரிக்கா வருவதாய் சொல்ல, நானும் அதி சந்தோஷமாய் எங்களின் திட்டத்தை சொல்ல, அவர் நானும் வருகிறேன் என்றார். ஒரே குஷியாப் போச்சி. சில மாற்றங்கள் ப்ளானில். ஏனெனில், நண்பருக்கு உயரம் பயம். எனக்கு ஓவர் சோகமா போச்சி. அய்யோ பல திட்டங்கள் மாறிவிடுமோன்னு. அவரோ.. கவலைப்படாதே அடித்து விளையாடலாமின்னு தைரியமா குரலில் நடுக்கத்தோட சொல்லுறார். இப்போ மறுபடியும் அடுத்த ரவுண்டு ரிசர்வேஷன். ரீவிசிட் அடிச்சாச்சி.

தினம் மாலை 1 மணி நேரம் காணும் இடங்களை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கியாச்சி. வேலை வட்டத்தில் ஆவலாக கதை கேட்டவர்கள் ஏராளம். தாரளாமாய் சந்தோஷத்தை காண்பிக்க, பொறாமைப் பட்டவர்கள் சிலர். நம்மை பயம் காண்பிக்கவும் தயங்கவில்லை அவர்கள். 100 F வெயிலாச்சே. எப்படி சமாளிப்பாய்? மறந்துறாம ஜாக்கெட் எடுத்துக்கோ. மாலையானால் குளிரும் அப்படின்னும் சொல்லுறாங்க. பீக் சீசன் அதனால நீ நினைக்கிற அளவுக்கு அனுபவிக்க முடியுமா? இந்த சமயத்தில் போய் போறியே. அப்படின்னு ஏகப்பட்ட டிஸ்கரேஜ்மெண்ட். அதெல்லாம் நாம் கண்டுக்க முடியுமா? ப்பூன்னு ஊதித் தள்ளினாலும் 100F வெயில் கொஞ்சம் மனசை அசைத்து பார்த்ததென்னவோ உண்மை.

ஆபிஸில் வேலை வேலைன்னு திரும்பவும் திரும்ப முடியாம வேலை வர, தினமும் நடக்க வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறையாக குறைந்தது. நாம கண்டுக்காம இருந்தாலும் நாட்கள் நகருவது நிற்குமா? கிளம்பும் நாளும் வந்தது. டண்டனக்கா டனக்கனக்கா.

ஓ… முக்கியமானது சொல்ல மறந்தாச்சே. நண்பர்கள் இருவரும் அவர்கள் பெயரை எழுதவேண்டாமின்னு கேட்டுக் கொண்டதால், நண்பர் 1 என அமெரிக்க நண்பருக்கும், நண்பர் 2 என இந்தியாவிலிருந்து வந்த நண்பருக்கும் பேர் வைத்துக் கொள்வோம். இவர்களோடு முக்கியமான புள்ளியும் சேர்ந்தார். அவர் தான் எங்களை வழி நடத்தி செல்பவர். அவர் பெயர் .....


Tuesday, July 22, 2008

பள்ளத்தாக்கு போட்டுத் தாக்கு


எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….. அதை ஒரு வரில சொல்லனுமின்னா நானெல்லாம் இப்பிரமாண்டத்திற்கு முன் யாருன்னு கேக்க வைக்கும் இடம். தன்னையும் என்னையும் இணைக்க போராடாமல் வெல்லும் இடம். என்னாங்க சொல்ல வாரீங்கன்னு கேக்குறீங்களா? இருங்க இருங்க வந்துட்டேன்.

அருமையான மார்ச் மாத சில்லென்ற குளிரை அனுபவிக்க விடாது வேலைப் பளு குனிந்த தலை நிமிர விடாமல் அழுத்த, வேலை வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கேன். ஏப்ரல் மாதத்தில் மனசும் உடம்பும் போதுமடா சாமின்னு சோர்வடைய, மே மாத ரிசல்ட் சூப்பர். அப்பாட….. ஒரு வழியா நமக்கும் விடிவுகாலமின்னு மனசு தைய தக்கா ஆரம்பிக்குது. ஜூன் மாதத்திலே 5 நாளு லீவு எடுத்துக்கலாமின்னு அதிகாரி சிரிப்புடன் சொல்ல, அன்றைய இரவே எங்கே போகலாமின்னு முடிவு செய்ய முடிவு செய்தாச்சி. குழப்பமா இருக்கா…. இருக்கனுமில்ல….அப்படி என்ன தான் செய்ய போறேனோ…. மனசு துள்ளுது. நடை துள்ளுது. பரந்த நிலத்திலே வான்னோக்கி நின்னு ஓ-ன்னு கத்த ஆசை வருது. அட…. எங்கே போறோம்? புரிஞ்சிப் போச்சி. உலக (இயற்கை) அதிசயத்தில் ஒன்றான க்ராண்ட் கான்யன் என்ற பள்ளத்தாக்கில் உருண்டு புரள போகலாமின்னு முடிவு செய்ததும் உற்சாகம் கரை புரண்டு ஓடத்துவங்கியது.

மலையேறி 6 வருடமாச்சே. வயசாச்சே. உடம்பு ஒத்துழைக்குமா? நம்மால முடியுமா? அப்பப்ப கேள்விகள் வந்து போகுது. பின்ன…. ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் வீட்டுப் பெரியவர்கள் வந்துவிடவே நம் ஆவலை தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. இந்த வருடம் அவங்களுக்கு அமெரிக்கா போரடித்துப் போகவே, நம் ஆவல் மெல்ல எட்டிப் பார்த்தது. ஏற்கனவே போன இடம் தான். ஆனால் செய்ய முடியாத, மிச்சம் வைத்திருந்த ட்ரெயில்ஸ் இந்த முறை முடித்தால் என்ன என தோணவே, அதற்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாச்சி.

முடிவு செய்தா மட்டும் போதுமா? விடுமுறை கிடைத்த நாளே, கூகிள் ஆண்டவர் உதவியால எங்கே போகலாமின்னு ஒரு நோட்ஸ் எடுத்து, எந்த தேதியில எங்கே என்ன பண்ணலாம், எங்கே எத்தனை நாள் தங்கலாம் என்பதெல்லாம் மளமளன்னு கிறுக்கி வச்சாச்சி. கழுதைல ஏறி, கீழிறங்கவா? குதிரையில் ஏறி கீழிறங்கவா? இல்லை கால் நடையா கீழிறங்கி, பறவை மீதேறி மேல் வரவா? அப்பப்பா… என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்குது. முன்னர் போனப்போ, கழுத மேல ஏற ஆசையா போய் கேட்டப்போ, அதுக்கெல்லாம் 18 மாசத்துக்கு முன்னாடி ரிசர்வ் பண்ணனுமின்னு சொன்னது ஞாபத்துக்கு வந்தது. ம்ம்… ரிசர்வேஷன் கிடைக்குமான்னு கவலை புதுசா வந்து தோள் மீது ஏறிக் கொண்டது இப்போது. என்னவானாலும் சரி தான். ஊர் சுத்துறதுன்னு முடிவு பண்ணியாச்சி. இனி அதில் மாற்றமில்லைன்னு மனசுல பதிய வச்சிட்டு, சனி, ஞாயிறு முழுசா(?) உட்கார்ந்து ஒவ்வொரு இடமா புக் செய்யும் வேலை ஆரம்பமாகியது. அப்பப்பா… ஏக கலக்கல் போங்க.

பட்டியல் போட்ட இடங்கள்
1) கிராண்ட் கான்யன் (பார்க்க)
2) சயான் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
3) ப்ரைஸ் கான்யன் (பள்ளத்தாக்கு இறங்க)
4) அண்ட்டிலோப் கான்யன் (புகைப்படம் எடுக்க)
5) சரல் பாதையில், காட்டு வழி பாதையில், பாதையில்லா பாதையில், 4 கால் வண்டியில் (அதாங்க.. காரில்) 60 மைலுக்கு பள்ளத்தாக்கு (கான்யன் சுற்றி) வலம்.
6) பறக்கும் பறவையில் (அதாங்க ஹெலிகாப்டர்) 40 நிமிடம் கான்யன் வலம்
7) தண்ணீர் மிதவையில் காட்டுமாட்டுப் பயணம் (அதாங்க ஒயிட் வாட்டர் ராஃப்ட்டிங்)
8) ஹுலபாய் கிராமத்துக்கு 10 மையில் கரடு முரடு பாதையில் பள்ளத்தாக்கில் நடை
9) கழுதை ஏற்றம்
10) குதிரை ஏற்றம் இறக்கத்தில் (!)
11) ………..


அம்மாடியோவ்… இன்னும் பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே போகுது. இத்தனையும் எப்படி 10 நாளில் செய்ய முடியுமின்னு குழப்பம் இருக்கத்தான் செய்தது. என்ன? 5 நாள் எப்படி 10 ஆச்சின்னு பாக்குறீங்களா? சொல்றேன் சொல்றேன். என்னவெல்லாம் பார்த்தோம், எங்கேயெல்லாம் போனோமின்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சிரும். பொறுத்துக்கோங்க மக்களே!

Friday, July 18, 2008

பிள்ளையார் சுழி


எல்லோருக்கும் வணக்கம். கொஞ்ச நாள் இந்த பக்கம் தலை வைக்கலையே…. சரி என்ன தான் நடக்குதுன்னு எட்டிப் பார்க்கலாமின்னா தமிழ்மண டெம்ளேட் மாறிப் போச். சரியான வலைக்குள் தான் வந்திருக்கேனான்னு எனக்கே சந்தேகம் வந்துருச்சி. மாறி ரொம்ப நாளாச்சோ? வராததற்கு பெருசா காரணம் ஒன்றுமில்லையப்பா…. நேரமில்லைன்னு நழுவலாம் தான்…. அது முற்றிலும் உண்மையில்லையே.

எல்லாம் சரிதான்…. இப்போ என்ன இந்தப்பக்கமின்னு யாரோ முணுமுணுக்குறது கேக்குதுப்பா….. இதோ வந்திட்டேன். எல்லாரும் என்னாச்சி ஏதாச்சி நல்லாயிருக்கீகளான்னு கேக்குறாங்க. முத்தக்கா ஒரு படி மேலே போயி… உங்களையெல்லாம் யாரு எழுத வர சொன்னா. வந்தது வந்தீக… ஒழுங்கா எழுதலாமில்ல… என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னு செல்லக் கோபம் காமிச்சாங்க. சரி.. என்னா எழுதுறதுன்னு மண்டைய பிச்சிக்காம…. துளசி டீச்சர் பயண கட்டுரையெல்லாம் எழுதி நமக்கும் சொல்லிக் கொடுத்தாங்களே.. அதையே நாம பின்பற்றலாமின்னு மண்டைக்குள்ள ங்கொய்யுன்னு கொடையுது. அதையே செய்யலாமின்னு இதோ வந்திட்டேன்.

எங்கே பயணம்? எத்தனை நாள்? என்ன கொடுமையிது சரவணான்னு சொல்ல வைக்கும் லூட்டி. என்ன இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்குன்னு சொல்ல வைக்கும் கொழுப்பெடுத்த வேலைகள். அதிரடி 10 நாள் செம ஜாலி. இதெல்லாம் கொஞ்சமா சொல்லலாமின்னு தோணுது. கண்டிப்பா துளசி டீச்சர் போலவோ, யாத்ரீகன் போலவோ அழகா கோர்வையா, படம் போட்டு சொல்லத் தெரியாதப்பா. ஏதோ எனக்கு தெரிஞ்ச அரைகுறை ஸ்டைல்ல சொல்லப் போறேன். உங்களுக்கு போர் அடிச்சா சொல்லிருங்க. நிறுத்திறலாம். சரியா? ஆங்… எங்கே போனோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்… அடுத்த பதிவில் சொல்லட்டா?