அத்தையின் மருமகன்
இரண்டு வருட இடைவெளியில் சந்திப்பு
அருமை மருமகன் எனைக் காண வருகிறான்
உள்ளம் உவகையாய் அவனின் வருகை காண
ஞாபகம் இருக்குமா இரு வயதில் களித்த அத்தையை?
உள்ளும் புறமும் தவிக்க
விமான நிலையம் தேய
இங்கும் அங்குமாய் நடை
கால்களும் பாரமாய்
ஆலாய் பறக்கும் மனம்
வந்துவிட மாட்டானா?
நொடிக்கு ஒருமுறை நோட்டம்
வாசல் கதவுகளும் தேய்ந்திருக்கும்
அடக்கி வைத்த சந்தோஷம்
பீறிடும் அபாயம்
நெஞ்சாங் கூட்டில்
அழகான வலி!
கொழுக் மொழுக் கன்னங்களுடன்
சிரித்த முகமாய்
துள்ளல் நடையுமாய்
தந்தையின் கைப் பற்றி!
ஓடி வந்து அணைத்தான்
நான் எதிர் பார்க்காத ஒன்று
திக்கு முக்காடித்தான் போனேன்
உடன் வெளிப்பட்ட பாசத்தால்!
நொடிக்கொருமுறை அத்தை என்பான்
தாயிடம் பேசிடினும்
தந்தையிடம் பேசிடினும்
அத்தை முகம் கண்டு பேசிடுவான்
யாருக்கும் புரியா
அளப்பறியா அவனின் பாசம்
அன்னியோன்னியம் கண்டு
வியந்தவர் பலர்; மருகியவர் சிலர்
குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கைகளைப் பிடித்தே உறங்கிடுவான்
கண் விழித்ததும் தேடிடுவான்
அவன் அன்பு.....
ஈடேதும் உண்டோ?
வார்த்தைகளில் அடங்குமோ?
புரிய வைக்க முடியுமோ?
எண்ணினால் உள்ளம் பொங்கும்
கண்களில் நீர் தேங்கும்
-- காட்டாறு