Thursday, January 03, 2008

உயிரோடு உயிராய்

மற்றுமொரு வருடம். அதே நாம்; அதே மனநிலை. கொண்டாட்டம் ஒரு நாள்; திண்டாட்டம் பலநாள். சோம்பிக் கிடக்கும் நாட்கள்; கண்முன் விரியும் நிச்சயமற்ற நிலைகள். என்னடா.. என்னாச்சி இவளுக்கு. புது வருட கொண்டாட்டத்தில் தலையில் அடி பட்டுருச்சான்னு குழம்ப வேண்டாம் மக்களே. எப்பவும் போல தான் இருக்கேன். ஒரு அருமையான புத்தகம் (The Problem of the Soul by Owen Flanagan) அன்பளிப்பாக கிடைத்தது. முழுமூச்சா படிச்சி முடிச்சாச்சி. புத்தக விமர்சகம் பண்ண எனக்கு தெரியாது. ஆனால், மனதில் தோன்றிய எண்ணங்களை எனதருமை தோழ மக்களுக்கும் சொல்லி குழப்ப எனக்கு தெரியும். ;-)

படித்ததும் பற்பல சிந்தனைகள் கண்முன் விரிந்து, முன்னய காலத்துக்கு அழைத்துச் சென்றன. உடனே, பழைய பெட்டியை உடைத்தெடுத்து (?)… அச்… அச்.. அச்… (ஒன்னுமில்லைங்க தூசி)… அப்பா… கண்டுபிடிச்சாச்சி் அந்த பாட்டை. ;-) அன்று மனம் பிரதிபலைத்ததை கிறுக்கிய என் கைகள், இன்று ஏனோ எழுதத் தெரியாமல் தடுமாறுகிறது. சரி சரி…. இத்தோட நிறுத்திக்கிறேன்…. புரிஞ்சா புடிச்சிக்கோங்க ராசாத்திகளா…. புரியலைன்னா… எங்கிட்ட கேக்காதீங்கப்பா….. கால எல்லை தாண்டிவிட்டது.

பின்குறிப்பு (இந்த கிறுக்கலுக்கு):
Gist of the book is how to reconcile the two visions of mind.

உயிரோடு உயிராய்

ஆயிரம் கோடி நண்பருண்டு
ஆயினும் என்னைத் தேர்ந்தெடுத்தாய்
என்னுள் உன்னுடன் உறவாடினேன்
எனக்கு எல்லாமும் ஆனாய் நீ

நீயும் நானும் ஒன்றென்றாய்
ஒன்றாய் மாற்றுவது உன் திறன் என்றாய்
உன்னுடன் என்றென்றும் இருப்பேன் என்றாய்
இன்று, தனிமையில் தவிக்கவிட்டு எங்கு சென்றாய்?

என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
உன்னை நான் என்னவளாக்கினேன்
யார் யாரைத் தேடுகிறோம்
தேடல் நின்றது என்றெண்ணினேன்

நான் வேண்டும் என்பதாலா ஒளிந்து கொண்டாய்?
இடைவிடாது தேடுகிறேன்
என் தேடல் என்று நிற்கும்
என்னை விட்டுப் போகாதே

களிமண்ணாய் இருந்த என்னை
உயிர்மண்ணாய் உருவாக்கினாய்
உயிர் தந்து என்னுள் உயிரெடுத்தாய்
ஓருடலுக்குள் ஈருயிர் உள்ளதென்றாய்

என்னிதயம் உன் கை விளையாட்டு பொம்மையல்லவா?
விளையாடாமல் தள்ளிவிட்டதேன்?
விருப்பும் வெறுப்பும் உன்னுடையதாலா?
நீயும் நானும் ஒன்றல்லவா?

நீ என்னை உருவாக்கும் சிற்பியல்லவா?
உன் உளியால் காயப்பட்டேன்
காயம் என் காயம் மறக்கச் செய்ததை மறவேன்
வேண்டும் அந்த இன்பம் இன்று

நீ சொல்வது போல் வாழ்ந்தேன்
நீ சொல்வது போல் வீழ்ந்தேன்
ஒன்றுமில்லாதவனானேன்
ஒன்றாய் உறைந்தேன்

நான் வெற்றுக் காகிதம்
நீ வரையப்படாதது ஏதும் இங்கில்லை
ஆதலின், புதியதாய் ஒன்றும் என்னிடமில்லை
வரையத் தவறியது என் குற்றமில்லை

நீயின்றி நானில்லை
என்னிடம் உள்ளவையாவும் நீ தந்தது
உன்னால் வந்தது; எடுத்துவிடாதே
உயிர் கொடு; இல்லை உயிரோடு கொன்றுவிடு

-- காட்டாறு

26 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

புது வருடத்தின் முதல் கவிதை நன்றாக இருக்கு...;))

ஆனா ரொம்பபபபபபபபபபபப பெருசு..:))

said...

so, நீங்க படிச்ச புத்தகத்திற்கு இதுதான் விமர்சனமா?

அதில படிச்சதின் தாக்கத்தை அப்படியே எப்பவோ நடந்த (உங்க) நிகழ்வுகளின நிசர்சனத்தை வைச்சுக் கொடுத்திட்டீஙக அந்த்தப் புத்தகத்திற்கான விமர்சனமா...

அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு தோணினதை விட உங்களுக்கு எப்பவோ அந்த கான்செப்ட் விளங்கிருச்சுப் போலவே...

said...

கவிதை நல்லா இருக்கு!

புத்தக விமர்சனம் சொல்லவில்லை. புத்தக அறிமுகமாவது கொடுக்கலாமே?

said...

நீங்க சொல்ற புத்தகம் படிச்சதில்லை, எனினும் தெகா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

//விருப்பும் வெறுப்பும் உன்னுடையதாலா?//

//காயம் என் காயம் மறக்கச் செய்ததை மறவேன்///

நல்லா இருக்குப்பா

said...

// கோபிநாத் said...
புது வருடத்தின் முதல் கவிதை நன்றாக இருக்கு...;))

ஆனா ரொம்பபபபபபபபபபபப பெருசு..:))
//

ஹா ஹா ஹா

said...

// Thekkikattan|தெகா said...
so, நீங்க படிச்ச புத்தகத்திற்கு இதுதான் விமர்சனமா?
//

என்னங்க தெகா.. இப்படி சொல்லிட்டீங்க? அதான் அழகா சொல்லிட்டேனே. //புத்தக விமர்சகம் பண்ண எனக்கு தெரியாது. //

//அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு தோணினதை விட உங்களுக்கு எப்பவோ அந்த கான்செப்ட் விளங்கிருச்சுப் போலவே...
//
அடடே.. இப்படி ஒன்னு இருக்குதா? ;-)

said...

// குட்டிபிசாசு said...
கவிதை நல்லா இருக்கு!

புத்தக விமர்சனம் சொல்லவில்லை. புத்தக அறிமுகமாவது கொடுக்கலாமே?
//

இது நல்லாயிருக்கே... கொடுக்கலாமே.

said...

// கீதா சாம்பசிவம் said...
நீங்க சொல்ற புத்தகம் படிச்சதில்லை, எனினும் தெகா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

நன்றி மங்கை!

said...

//மற்றுமொரு வருடம். அதே நாம்; அதே மனநிலை. கொண்டாட்டம் ஒரு நாள்; திண்டாட்டம் பலநாள். சோம்பிக் கிடக்கும் நாட்கள்; கண்முன் விரியும் நிச்சயமற்ற நிலைகள். என்னடா.. என்னாச்சி இவளுக்கு. புது வருட கொண்டாட்டத்தில் தலையில் அடி பட்டுருச்சான்னு குழம்ப வேண்டாம் மக்களே. எப்பவும் போல தான் இருக்கேன்.//

அதான் எங்களுக்கு தெரியுமே! :))))

said...

//மனதில் தோன்றிய எண்ணங்களை எனதருமை தோழ மக்களுக்கும் சொல்லி குழப்ப எனக்கு தெரியும். ;-)//

இது எல்லோருக்குமே தெரியுமே :))

said...

//நான் வெற்றுக் காகிதம்
நீ வரையப்படாதது ஏதும் இங்கில்லை
ஆதலின், புதியதாய் ஒன்றும் என்னிடமில்லை
வரையத் தவறியது என் குற்றமில்ல//

அக்கா...
கவிதை அற்புதம், அருமைன்னு ஒத்த வார்த்தையில் சொல்றது வெறும் சம்பிரதாயம்.
அதனால நான் அத சொல்ல விரும்பலை. அதை விட வேற ஏதும் நல்ல வார்த்த கிடைச்சா போடுறேன்

said...

இங்கிலிபீஸ் புக்கெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல கவிதை எளுதறீங்க....

வருச ஆரம்பத்துலலேயே இம்புட்டு ஃபீலிங்க்ஸா.....

வேணாம்...மெல்ட்டாயிருவேன்(இதை வடிவேலு சொல்வதை போல படிகக்வும்...ஹி..ஹி...)

உங்க கவிதைய படிக்கும் போது 7g ரெய்ன்போ காலனி...ல வர்ற... கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை...பாட்டு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது....

புத்தாண்டு வாழ்த்துக்கள் தாயே....

said...

அருமையான கவிதை...புத்தாண்டு வாழ்த்துகள்

said...

//நான் வேண்டும் என்பதாலா ஒளிந்து கொண்டாய்?
இடைவிடாது தேடுகிறேன்
என் தேடல் என்று நிற்கும்
என்னை விட்டுப் போகாதே//


அத்வைத தத்துவத்தின் எல்லையைத் தொட்டுவிட்டீர்கள்.
மாயை அகன்ற நிலையிலே, பிரமனை உணர்ந்துகொள்ள துடிக்கும் நெஞ்சத்தின் உணர்வுகளை, நீரனைய விழிகளின்
ஏக்கத்தில் பிரதிபலித்து, ஆன்மாவின் உள்ளக்கிடக்கியை
உளமாறச் சொல்லியிருக்கிறீர்கள்.

//அன்று மனம் பிரதிபலைத்ததை கிறுக்கிய என் கைகள், இன்று ஏனோ எழுதத் தெரியாமல் தடுமாறுகிறது. சரி சரி…. இத்தோட நிறுத்திக்கிறேன்…. புரிஞ்சா புடிச்சிக்கோங்க ராசாத்திகளா…. புரியலைன்னா… எங்கிட்ட கேக்காதீங்கப்பா….. கால எல்லை தாண்டிவிட்டது//

நிற்க.
காலம் என்று ஒன்று இருந்தால் அல்லவோ
கால எல்லை தாண்டுதற்கு ?
காலனாக நான் ஆகேன் எனக்
கலங்கிய பார்த்திபனை நோக்கி
கண்ணன் சொல்கிறான்:
“காலத்தின் தாக்கம் எல்லாம்
உனக்குண்டு, எனக்கில்லை.”
//
என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
உன்னை நான் என்னவளாக்கினேன்
யார் யாரைத் தேடுகிறோம்
தேடல் நின்றது என்றெண்ணினேன்//

ஆண்டாள் அன்று தேடிப் பின்
அரங்கனிடம் "சரன்டர்" ஆன
அற்புதத்தை
அழகாக, தமிழ்க் கவிதையாக
வடித்ததுக்கோர் பரிசும் உண்டோ ?

வாழ்த்துகிறேன்.வாழி நீ
ஆசிகள் பல

சுப்பு ரத்தினம்
தஞ்சை.

said...

ஒரு சிலர் என்னிடம் தனிமடலிலோ, சாட்டிலோ கவிதை எதைப் பற்றி எனக் கேட்டனர். இப்போ தான் விளக்கமா எழுதாமின்னு நெனச்சேன். அதுக்குள்ள சூரி அவர்களின் மறுமொழி கண்டதும்... என் விளக்கம் தேவையில்லைன்னு தெரிஞ்சது. நன்றி சூரி அவர்களே.

கீர்த்தி said...

--நான் வெற்றுக் காகிதம்
நீ வரையப்படாதது ஏதும் இங்கில்லை
ஆதலின், புதியதாய் ஒன்றும் என்னிடமில்லை
வரையத் தவறியது என் குற்றமில்லை

நீயின்றி நானில்லை
என்னிடம் உள்ளவையாவும் நீ தந்தது
உன்னால் வந்தது; எடுத்துவிடாதே
உயிர் கொடு; இல்லை உயிரோடு கொன்றுவிடு--

என்ன ஒரு அழுத்தமான வரிகள்,ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் 100 அர்த்தம் தோன்றுகிறது,
ஏங்க காட்டாறு கை துறுதுறுங்குது, உங்க கவிதையை பார்த்ததும்,சுட்டுறடுமா
-அன்புடன்,
கீர்த்தி

said...

காட்டாறு,

http://pettagam.blogspot.com/2008/01/tag.html

இதில் கொஞ்சம் பாருங்கள்

said...

பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்!
நன்றி!

said...

கீர்த்தி...

இப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட கவித எளுதுறதுல நம்ம காட்டாறை அடிச்சிக்க முடியாது....

நீங்க தாராளமா சுட்றுங்க...ஹி..ஹி..அவங்க நம்ம செட்டுதான்(என்ன பெரிய செட்டு,சேவிங் செட்டுன்னு கவுண்டமணி மாதிரி கேள்வியெல்லாம் கேக்கப்டாது....ஹி..ஹி...)

said...

சென்ஷி, உங்க அதான் எங்களுக்கு தெரியுமே மறுமொழி எனக்கு தங்கவேலு டயலாக்கை ஞாபகப்படுத்துது. ஹா ஹா ஹா

said...

// கீர்த்தி said...
என்ன ஒரு அழுத்தமான வரிகள்,ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் 100 அர்த்தம் தோன்றுகிறது,
ஏங்க காட்டாறு கை துறுதுறுங்குது, உங்க கவிதையை பார்த்ததும்,சுட்டுறடுமா
-அன்புடன்,
கீர்த்தி
//

கீர்த்தி, எண்ணங்களாய் இருக்கும் வரை தான் அது எனக்கு சொந்தமானது. வார்த்தைகளாய் வந்துருச்சில்ல... அப்போ பொதுவானது தான். நீங்க எங்கிட்ட கேட்கனுமின்னு இல்லை. என்சாய்!

said...

// இரண்டாம் சொக்கன் said...
கீர்த்தி...

இப்படி காதல் ரசம் சொட்ட சொட்ட கவித எளுதுறதுல நம்ம காட்டாறை அடிச்சிக்க முடியாது....

நீங்க தாராளமா சுட்றுங்க...ஹி..ஹி..அவங்க நம்ம செட்டுதான்(என்ன பெரிய செட்டு,சேவிங் செட்டுன்னு கவுண்டமணி மாதிரி கேள்வியெல்லாம் கேக்கப்டாது....ஹி..ஹி...)
//

சொக்கரே... எனக்கு பதிலா நீங்களே சொல்லிட்டீங்க... நன்னி சொல்லிக்கிறேன். ;-)இதுக்கு பேரு தான் யுனிவர்சல் எனர்ஜியோ?

said...

கவிதை அருமை!

வருட ஆரம்பத்திலேயே இப்படி மனசை பிளிறீங்களே...?

said...

காட்டாறு,

http://pettagam.blogspot.com/2008/01/tag.html

இதில் கொஞ்சம் பாருங்கள்...உங்களை tag இல் இணைத்துள்ளேன்...