பனிக் குவியலா உப்பளமா?
நண்பனுக்கு பனிக் காலம் பற்றிக் கேட்பதே பெரும் பொழுது போக்கு. எப்போ எங்கூருல பனி பெய்தாலும் புகைப்படங்கள் எடுத்து அவரை கடுப்படிப்பது என் பொழுது போக்கு. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நானும் பனியில் நனைவேன்னு அடிக்கடி என்னை நற நறப்பார். அவர் சொன்ன மாதிரி அவருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைந்தது. வியாபார விஷயமாக முதன் முதல் வெளிநாட்டுப் பயணம். அமெரிக்காவிற்கு. அவர் வரும் காலம் கொட்டும் பனிக்காலம். வந்தவர் இறங்கிய இடம் நியூயார்க். நாங்கள் இருக்கும் இடமோ பொல்லாத பனிக்குவியும் இடம். அவர் வந்த அன்று அங்கே மழை. இங்கே பனி. அவருக்கு பெரிய ஏமாற்றம். பனியில் நனையாது ஊர் திரும்பிவிடுவோமோ?ன்னு கலக்கம். அடுத்த இரண்டு நாட்கள் அவருக்கு வேலை வேலை. மூன்றாவது நாள் அதிகாலை 3 மணிக்கு ஃபோன். 'எலேய்.. சூப்பரா இருக்கு. பனி பெய்யுது.' அப்படின்னு. (சும்மா பனித் தூறலுக்கே இப்படி…..) நானிருக்கும் இடத்திலோ பனி கொட்டிக்கிடக்குது. அவரின் குதூகலமான மன நிலையை கலைக்க விரும்பாமல் 30 நிமிட கதையை(!) அர்த்த ராத்திரியில்(?) கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவர் எங்கள் ஊருக்கு வரும் நாள் வந்தது. அன்று பனிப் புயல் அறிவிப்பு. 8 இன்ஞ்க்கு குவியப் போகுதுன்னு பேச்சு. ஏற்கனவே குவிந்து உறைந்து கிடக்கும் பனி போதாதா? இதிலே நண்பர் வரும் நேரம் வரை ஒன்றும் இல்லை என வானிலை அறிவிப்பாளர் காலையில் அறிவித்து விட்டார். அப்பாடா… நல்ல வேளை. அல்லது விமானத்தை இரத்து செய்துவிடுவார்களே. எதிர்பார்த்த நேரத்திற்கு விமானம் வந்துவிட்டது. ஓடுகளத்தில் இருக்கும் போதே டாண்ணு ஒரு ஃபோன் வருது. என்னடான்னு கூட ஆரம்பிக்கல. அதுக்குள்ள.. மூச்சு தெறிச்சி விழுற மாதிரி.. 'எலேய்.. ஏன் சொல்லல.. உங்க ஊர்ல உப்பளம் கொட்டி வச்சிருக்குறன்னு…. அப்படியே நம்ம ஊரை கண்ணு முன்னால கொண்டு வந்துருச்சிப் போ' ன்னு.. ஒரே சந்தோசத் திக்கு முக்காடல். 'விமானத்துல இருந்தவாறே போட்டோ எடுத்து தள்ளிட்டன்ல…. யப்பப்பா… மூச்சு முட்டுதப்பா… விமான ஓடுகளத்துல கூட ஆங்காங்கே குவிச்சி வச்சிருக்காங்க பாரு'ன்னு… கட கடன்னு கொட்டித் தீர்த்துட்டார். 'சரியப்பா.. இறங்கி வர்ற வழியப்பாரு'ன்னு ஒரு வழியா பேசி முடிச்சாச்சி.
நான் நண்பனை வரவேற்க மூட்டைமுடிச்சுகள் எடுக்குமிடத்தில் காத்திருந்தேன். ஓடி வந்து தழுவியவாறு 'ஏம்புள்ள சொல்லல. அப்படியே நம்மூரு உப்பளம் தான்'னு திரும்பவும் ஆரம்பமாச்சி அவரின் ஆனந்த புலம்பல். சரிதான்… இன்னக்கி இது முடியாது போலவேன்னு நெனச்சிட்டு….. 'சரியப்பா.. நடையக் கட்டு'ன்னு தள்ளிட்டுப் போக வேண்டியதா போச்சு. மூட்டைய எடுத்துட்டு வெளில வந்தா செம குளிரு. இவ்ளோ நேரம் விமான நிலையத்துள்ளே இருந்ததால் குளிர் பத்தி நெனச்சிப் பார்த்திருக்க மாட்டார் போல. 'அடிப்பாவி… இவ்ளோ குளிருமா.. இப்படியா? இந்த ஊர்ல நீ கண்டிப்பா இருக்க தான் செய்யனுமா'ன்னு… ஆரம்பமாகியது அடுத்தடுத்து கேள்விகள்.
ஒரு வழியா கார்ல ஏறியாச்சு. அடுத்த கேள்வியும் வந்தது. 1 சாக்லேட் கொடுத்த குழந்தையிடம் 5 சாக்லேட் கொடுத்தால். இன்னும் தருவாங்களான்னு பார்க்குமே. அது போல தான் இவரும். 'என்ன புள்ள….. இன்னக்கி பனி பெய்யுமின்னு சொன்ன. இன்னும் காணோமி'ன்னு கேள்வி. 'அடப் பாவி. இப்போ தானே வந்திருக்க'ன்னு சொன்னா.. ஒரு நமுட்டு சிரிப்பு. 5 மைல் வந்திருப்போம். பனி கொட்டு கொட்டுன்னு கொட்ட ஆரம்பிக்குது. 40 நிமிஷத்துல போக வேண்டிய வீட்டுக்கு 2 மணி நேரத்துல வந்து சேர்ந்தோம். அவருக்கு பனி மழையை பார்த்ததும் ஏக சந்தோஷம். புகைப் படம் எடுத்து தள்ளிட்டாரு, என்னென்னவோ பேசிட்டே. குழந்தையின் சந்தோஷத்தோட, கார் போற ஸ்பீடுக்கு இறங்கி நடந்துறலாமின்னு காமெண்ட் வேற.
மறுநாள் கொட்டும் பனியை வீட்டினுள் இருந்தவாறே டீ, பஜ்ஜியுடன் இரசித்தோம். அன்று பனி பெய்வது நிற்கவே, கையில்லா சட்டையுடன், உற்சாகமாய் காமிராவை என் கையில் கொடுத்தவர், க்ளிக்கித் தள்ளு பார்ப்போம் எனக் கூறி அவ்வளவு குளிரிலும், ஆட்டம் போட வெளியே (வீட்டின் பின்புறம்) கிளம்பிவிட்டார். நானோ நல்ல பிள்ளையாக 4 லேயரில் உடை உடுத்தி, குல்லா போட்டு (தலைக்கு தாம்ப்பா), உல்லன் சாக்ஸும், ஸ்னோ பூட் போட்டு, ஜாக்கெட் சகிதமாய் வெளியே வந்தால், வீட்டின் பின்னால் அழகான வெள்ளைத்தாளென இருந்த பனி இப்போது கசங்கிய சகதியாய் காட்சியளித்தது அவரின் குதியாட்டத்தால். அவரின் கொண்டாட்டம் எங்களையும் தொற்றிக் கொள்ள, எல்லோரும் சேர்ந்து ஆட்டம் தான். :-)
ஒரு வழியா அவர் இருந்த 5 நாட்களும் புதுப்புது இடங்களா போய் பனி மலையை (குவித்து வைத்த பனியைத் தான்) விதவிதமா கிளிக்கித் தள்ளிட்டார். நண்பருக்கு கனவு நனவான சந்தோஷம். நமக்கோ சொல் பேச்சுக் கேட்டாத ஒரு குழந்தையை பத்தி மேய்ச்ச களைப்பான சந்தோஷம். நண்பரின் குதூகலம் எங்களையும் தொற்றிக் கொண்டது என்பதை கூறவும் வேண்டுமா?
பின்குறிப்பு:
யாத்ரீகன் கூல் பதிவில்(http://yaathirigan.blogspot.com/2008/03/coooool.html), அவருடைய புகைப் படம் ஒன்றைக் காணப் போய், இந்த பதிவு உருவானது. நன்றி யாத்ரீகன்.