Monday, March 10, 2008

சிலுசிலுப்பு குச்சி

சிலுசிலுப்பு குச்சி

கொண்டை சேவல் கூவுமுன்
குடுமி முடி தான் முடிந்து
பலாப்பட்டி தலை சுமந்து
பள்ளி சேர்த்த மக்களை
காணச் சென்றார்
கோவணாண்டி தாத்தா

ஒரு பையில் முறுக்கும், கொழுக்கட்டையுமாய்
மறு பையில் சீடை, அதிரசமுமாய்
புதுத் துணி எடுத்து
பட்டணத்து விடுதிக்கு
ஆசையுடன் வழி நடந்தார்
காட்டு வழிப் பாதையிலே

ஒத்தையடிப் பாதையிலே
ஊர் ஒன்று தாண்டிடவே
கிண்கிணி மணியோசை
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தார்
கண்ட காட்சிக்கு
அதிசயித்து இலயித்திருந்தார்

பச்ச புள்ளக ஓடிவர
கூவி அழைத்து காசு வாங்கி
ஜாலம் செய்து
வித்தை காட்டி
குழந்தைகளை மகிழ்வித்தான்
ஐஸ் வண்டிக்காரன்

வியப்பு மேலிடவே
புதுப் பட்சணமாய்
தோன்றிடவே
ஏதென அறிய
தயக்கமாய் பக்கம் சென்றார்
பட்டிக்காட்டு தாத்தா

ஓரக் கண் பார்வையுடன்
பொட்டி அதனை அவன் திறக்க
சிலுசிலுப்பாய் வெண்புகை
பதறி ஓரடி
பின்வாங்கினார்
எங்க தங்க தாத்தா

விடுதி சென்ற மக்களுக்கு
புதுப் பட்சணம் காண்பிக்க
காசு கொடுத்து இரெண்டு வாங்கி
முண்டாசில் முடிந்து
வீறுநடை நடந்தார்
மிதப்புடனே

பெருமிதமாய் விடுதி சென்று
சிலுசிலு நீர் காதோடு வழிய
ஓடி வந்த மக்களை அள்ளியபடி
அணைத்து முத்தமிட்டு
முண்டாசு அவிழ்த்தார்
மக்கள் முன்

ரெண்டு, குச்சி மட்டும் அதிலிருக்க
சிலுசிலுப்பும் அடங்கியிருக்க
திருதிருவென புரியாது
விழி தாழ்த்தி
அயர்ந்தாரே
அப்பாவி தாத்தா!

பின்குறிப்பு:
இது உண்மை சம்பவம். அம்மாவும், மாமாவும் பக்கத்து ஊரில் படிக்க அனுப்பி வைத்த தாத்தா, ஒரு முறை அவர்களை காண வரும் போது நடந்த கதை இது. அம்மா கதை சொல்ல, அதன் வடிவம் தான் இங்கே. இது போல சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கும். பகிர்ந்து கொள்ளலாமே; பதிவாகவோ. பின்னூட்டமாகவோ.)

33 பேர் மறுமொழிந்துள்ளனர்:

வல்லிசிம்ஹன் said...

காட்டாறு, பாவம் இல்ல தாத்தா!!

சதங்கா (Sathanga) said...

ஆஹா, அற்புதம். பழைமை என்றும் விகல்பமில்லாதது, எதிர்பார்பில்லாதது, வெகுளித்தனமானது.

கோபிநாத் said...

அட்டகாசம்..கவிதையை படித்து முடிக்கும் போது அச்சச்சோ பாவம் தாத்தான்னு தோணுது.

கோபிநாத் said...

\\இது உண்மை சம்பவம். அம்மாவும், மாமாவும் பக்கத்து ஊரில் படிக்க அனுப்பி வைத்த தாத்தா, ஒரு முறை அவர்களை காண வரும் போது நடந்த கதை இது. அம்மா கதை சொல்ல, அதன் வடிவம் தான் இங்கே. இது போல சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கும். பகிர்ந்து கொள்ளலாமே; பதிவாகவோ. பின்னூட்டமாகவோ.)\\

கண்டிப்பாக...தாத்தாவின் பத்தி கொசுவத்தி சீக்கிரம் வரும் ;))

கோபிநாத் said...

\\இது உண்மை சம்பவம். அம்மாவும், மாமாவும் பக்கத்து ஊரில் படிக்க அனுப்பி வைத்த தாத்தா, ஒரு முறை அவர்களை காண வரும் போது நடந்த கதை இது. அம்மா கதை சொல்ல, அதன் வடிவம் தான் இங்கே. இது போல சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கும். பகிர்ந்து கொள்ளலாமே; பதிவாகவோ. பின்னூட்டமாகவோ.)\\

கண்டிப்பாக...தாத்தாவின் பத்தி கொசுவத்தி சீக்கிரம் வரும் ;))

இரண்டாம் சொக்கன்...! said...

வெள்ளந்தியான அன்புதான் இத்தனை வருசத்துக்கு பின்னாலயும் கனமா நிக்குதுல்ல...ம்ம்ம்ம்

நமக்கு தாத்தா கொசுவத்திக்கு குடுப்பினையில்ல...எங்க அம்மாச்சி..நான் தாத்தாவை உரிச்சிட்டு பொறந்திருக்கேன்...அப்படியே அவர பாக்கற மாதிரியிருக்குன்னு...மாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்லுவாங்க...ம்ம்ம்ம்

பாச மலர் / Paasa Malar said...

பாவம் தாத்தா..வெகுளித்தனம்...நல்ல கொசுவர்த்தி..அடிக்கடி நிறைய சுற்றுங்கள் இது போல..நாங்கல் படித்து ரசிக்க..

Thekkikattan|தெகா said...

தாத்தாவைப் படிச்சதும் எனக்கு என்னோட தாத்தாகிட்ட அடிச்ச லூட்டியெல்லாம் ஞாபகத்துக்கு வருது...

சரி குச்சி ஐசு தாத்தா படத்தை க்ராஃபிக்ஸ் பண்ணின ஆர்டிஸ்ட் யாரு..? :)

சென்ஷி said...

சூப்பர்.... உண்மையிலேயே எல்லோரும் தாத்தாவ நினைச்சு வருத்தப்படறத விட அவரோட மனசை நினைச்சு சந்தோஷப்படுங்க :))

சென்ஷி

நிஜமா நல்லவன் said...

தாத்தாவுக்கு ரொம்ப வெள்ளை மனசு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட பாவம் தாத்தா.. விசயம் தெரிஞ்சதும் அசட்டு சிரிப்பும் சிரிச்சிருப்பாரே.. ஆனா எது கிடச்சாலும் தான் திங்காம கொண்டுபோய் கொடுக்கனும்ன்னு நினைச்சு இருக்காரு பாருங்க..
கோயிலில் சுண்டல் குடுத்தா பேத்தி க்கு குடுக்க சேலை தலைப்பில் முடிஞ்சு வர எங்கம்மா மாதிரி..

நானானி said...

காட்டாறு! தாத்தாவுக்கு குச்சிஐஸ் போல இளகின மனசு!!!கிராமத்து அப்பாவித்தனத்தைவிட புதுப்பண்டம் பிள்ளைகளுக்கு கொண்டு போக வேண்டுமென்ற ஆர்வம்,ஆசை. அருமை அருமை! இருந்தாலும் தாத்தா பாவம்!

sury siva said...

oru gudu gudu thatha intha paattai
mudinchavarai paadiyirukkaru.

neenga ketka venumna udane
http://menakasury.blogspot.com
ponga.

ithu naan padinathu pudukkaratho illayo ennoda pera kkulandhaikalukku pudikkum
subbu thatha
thanjai.

sury siva said...

I was so enthused by the folk song that I tried to sing it. The song is just wonderful.
i do not know whether i could come anywhere near a singer's credentials.
You may listen to me if you so feel by visiting
http://menakasury.blogspot.com
subbu rathinam
thanjai.

காட்டாறு said...

// வல்லிசிம்ஹன் said...
காட்டாறு, பாவம் இல்ல தாத்தா!!
//

தாத்தாவை கடுப்படுக்க இந்த நிகழ்வைத் தான் சொல்லி கிண்டல் பண்ணுவாங்களாம். :-)

காட்டாறு said...

// சதங்கா (Sathanga) said...
ஆஹா, அற்புதம். பழைமை என்றும் விகல்பமில்லாதது, எதிர்பார்பில்லாதது, வெகுளித்தனமானது.
//

ஆமா சதங்கா. வெகுளித்தன்மை இன்னும் கிராமத்து மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. நாகரிகம் வளர வளர எதிர்பார்ப்புகள் மிகுந்து, யாரை எப்போ கவிழ்க்கலாமின்னு மனப் போக்கு வந்துவிடுகிறது.

காட்டாறு said...

// கோபிநாத் said...
அட்டகாசம்..கவிதையை படித்து முடிக்கும் போது அச்சச்சோ பாவம் தாத்தான்னு தோணுது.
//

ஹா ஹா ஹா.... இது போல வெகுளி மனசு கதை நெறையா அம்மா சொல்லுவாங்க. அவங்க தாத்தா செய்ததை. :)

//கண்டிப்பாக...தாத்தாவின் பத்தி கொசுவத்தி சீக்கிரம் வரும் ;))
//
சுத்துங்க சுத்துங்க. சீக்கிரமா சுத்தனும். :)

காட்டாறு said...

// இரண்டாம் சொக்கன்...! said...
வெள்ளந்தியான அன்புதான் இத்தனை வருசத்துக்கு பின்னாலயும் கனமா நிக்குதுல்ல...ம்ம்ம்ம்
//

ஆமா சொக்கரே. சின்ன வயசுல இந்த கதைய கேட்டப்போ வேற மாதிரியான உணர்வும், இப்போ திரும்ப கேட்குறப்போ வேற உணர்வுகளும் மேலிட்டதும் ஆச்சர்யமாக இருந்தது.

//நமக்கு தாத்தா கொசுவத்திக்கு குடுப்பினையில்ல...எங்க அம்மாச்சி..நான் தாத்தாவை உரிச்சிட்டு பொறந்திருக்கேன்...அப்படியே அவர பாக்கற மாதிரியிருக்குன்னு...மாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்லுவாங்க...ம்ம்ம்ம்
//
தாத்தா கொசுவத்தி இல்லைன்னா என்ன. அம்மாச்சி பத்தி எழுதுங்க. அதுவும் தாத்தாவை உங்களிடம் கண்டிருந்தார்கள் என்றால், கதைகள் நெறையா இருக்கனுமே. எடுத்துவிடுங்க கதைகளை. :-)

கண்மணி/kanmani said...

காட்டாறு தாத்தாக்களின் அருமை நம் இளம் பிராயத்தில் புரியாது.வாலிபத்தில் அவர்களின் இழப்பில் உணர்வோம்.
எங்க வீட்டு ரங்கமணி யோட சேர்த்து அண்ணன் தம்பிகளுக்கு குள்ளாண்டு,குள்ளக்குட்டி,சின்னக்குட்டி னு பட்டப் பேராம்[அவங்க தாத்தா வச்சது]ஸ்கூலுக்கு கையில் நீண்ட குடையுடன் வந்து இந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடும்போது இவங்களுக்கெல்லாம் வெட்கமாக இருக்குமாம்.தாத்தாவை திட்டி ஏன் வந்தீங்கம்பாங்களாம்.
பின்னர் அதே தாத்தா இறந்த போது கல்லூரிப் பருவத்தில் இருந்த போதும் உருண்டு புரண்டு ஊரையேக் கூட்டி அழுததாகச் சொல்வாங்க.
ஹூம்.....ரொம்ப கொசுவத்தி சுத்த வச்சிட்ட தாயீ

காட்டாறு said...

// பாச மலர் said...
பாவம் தாத்தா..வெகுளித்தனம்...நல்ல கொசுவர்த்தி..அடிக்கடி நிறைய சுற்றுங்கள் இது போல..நாங்கல் படித்து ரசிக்க..
//
அடிக்கடி சுத்துற அளவுக்கு விஷயம் இல்லப்பா. அம்மாவோ, தோழியோ ஞாபகப் படுத்தினா தான் உண்டு. நமக்கும் ஞாபக சக்திக்கும் காத தூரமுங்கோவ்.

காட்டாறு said...

// Thekkikattan|தெகா said...
சரி குச்சி ஐசு தாத்தா படத்தை க்ராஃபிக்ஸ் பண்ணின ஆர்டிஸ்ட் யாரு..? :)
//

கூகிளாண்டவர் கண்டுபிடிச்சி கொடுத்த முத்து இது. ;-)

காட்டாறு said...

// சென்ஷி said...
சூப்பர்.... உண்மையிலேயே எல்லோரும் தாத்தாவ நினைச்சு வருத்தப்படறத விட அவரோட மனசை நினைச்சு சந்தோஷப்படுங்க :))
//

பெரியவரு சொல்லிப்புட்டாரு. கேட்டுக்கோங்கப்பா. :-)

காட்டாறு said...

// நிஜமா நல்லவன் said...
தாத்தாவுக்கு ரொம்ப வெள்ளை மனசு.
//
வாங்க நல்லவன். நிஜமாவே நீங்க நல்லவங்க தான். நம்புறேன். அதுக்காக எப்போ பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தா பொய்யாகாதோ? ;-) ச்ச்சும்மா, சும்மா வம்பளந்தேனப்பா.

காட்டாறு said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
அட பாவம் தாத்தா.. விசயம் தெரிஞ்சதும் அசட்டு சிரிப்பும் சிரிச்சிருப்பாரே.. ஆனா எது கிடச்சாலும் தான் திங்காம கொண்டுபோய் கொடுக்கனும்ன்னு நினைச்சு இருக்காரு பாருங்க..
கோயிலில் சுண்டல் குடுத்தா பேத்தி க்கு குடுக்க சேலை தலைப்பில் முடிஞ்சு வர எங்கம்மா மாதிரி..

//

முத்தக்கா, பேரு பெத்த பேராச்சு. எதுனாச்சும் விஷேசமா? நியுமராலஜி ஏதுவும் பார்த்தீங்களா?

நாமளும் பாட்டியாரப்போ இப்படி செய்வோமா என்னவோ.... என்னவோ... பேரன் பேத்திகளெல்லாம் கொடுத்து வச்சவங்கப்பா.

காட்டாறு said...

// நானானி said...
காட்டாறு! தாத்தாவுக்கு குச்சிஐஸ் போல இளகின மனசு!!!கிராமத்து அப்பாவித்தனத்தைவிட புதுப்பண்டம் பிள்ளைகளுக்கு கொண்டு போக வேண்டுமென்ற ஆர்வம்,ஆசை. அருமை அருமை! இருந்தாலும் தாத்தா பாவம்!

//

வாங்க நானானி. தாத்தா உங்களை என் பதிவிற்கு கொண்டு வந்துட்டார் போலவே. முதல் முறையா வந்திருக்கீங்க. ஒரு குச்சி ஐஸ் கூட இல்லையே உங்களுக்கு கொடுக்க. :-(

காட்டாறு said...

// sury said...
oru gudu gudu thatha intha paattai
mudinchavarai paadiyirukkaru.

neenga ketka venumna udane
http://menakasury.blogspot.com
ponga.

//

சூரி அய்யா, வார்த்தைகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டுட்டீங்களே. பாடியதால் பாட்டிற்கு அழகா. பாட்டு அருமையாக இருந்ததால் பாடல் அருமையாக இருந்ததா. வெகு ஜோரா இருந்துச்சிங்க அய்யா. நன்றின்னு சொல்லி வேற்றுமைபடுத்த முடியல.

யாத்ரீகன் said...

பாட்டு வடிவத்துல அழகா சொல்லியிருக்குறீங்க :-) ..

சென்ஷி said...

//காட்டாறு said...
// சென்ஷி said...
சூப்பர்.... உண்மையிலேயே எல்லோரும் தாத்தாவ நினைச்சு வருத்தப்படறத விட அவரோட மனசை நினைச்சு சந்தோஷப்படுங்க :))
//

பெரியவரு சொல்லிப்புட்டாரு. கேட்டுக்கோங்கப்பா. :-)//

அப்ப நீங்க இன்னும் கேக்காமத்தான் இருக்கீங்களா... :)))

மங்கை said...

நாம் எங்க பாட்டி கூட தான் ரொம்ப நெருக்கம்...பாட்டி தாத்தா கிட்ட கிடைக்குற செல்லத்துக்கும், அன்புக்கும் ஈடு இனையில்லை...ஹ்ம்ம்ம்
நல்லா இருக்கு குச்சி ஐஸ்

தென்றல்sankar said...

உண்மையில் தாத்தா பாவம்தான்

cheena (சீனா) said...

காட்டாறு

அருமையான எளிமையான இயல்பான பாடல்

அக்காலத் தாத்தாத்களை மறக்க முடியுமா - இக்காலக் குழந்தைகளுக்கு இச்சுகம் கிட்டுகிறதா ? படித்தேன் ரசித்தேன் - மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள்

கோவை விஜய் said...

போன தலைமுறையினர் கொடுத்துவத்தவர்கள் .

இன்றய தலைமுறையினருக்கு தாத்தா பாட்டி

பற்றியெல்லம் கதையில் தான்

கூட்டுக் குடுப்பம் கலைஞ்சு போச்சு அண்ணாச்சி
கூப்பிடு தூரம் இப்போ காததூரம் ஆச்ச்சுங்கோ

உறவுகளெல்லம் உதிந்த மலராய் காற்றில் போச்சு
உண்மை இப்போ புரிய, வலி உண்டாச்சு

நேசமித்ரன் said...

மிகச் சரளமான நடை எளிய சொற்பிரயோகங்கள்

தாத்தா பாவம் தான்