பூமி பின்னோக்கி சுற்ற வேண்டும்
பள்ளிவிட்டு வீடு கூட்டிச் சென்ற அன்னத்தாயிடம் பண்ணிய குறும்புகள்
10 பைசா சேர்ந்ததும் ஜவ்வு மிட்டாய் வாங்க பர பரத்த மனது
வண்ண வண்ண ஜவ்வு மிட்டாயில் விதவிதமாய் கை கடிகாரம் செய்ய சொல்லி மகிழ்ந்தது
காக்கா கடி கடித்து உண்ட எச்சில் மாங்காய்
அம்மா ஊட்டிய நிலா சோறு
அத்தை பால் சோறு ஊட்ட, மாமா கதை சொல்ல வாயில் பால் சோற்றுடன் உறங்கி போனது
காலாற தந்தையுடன் கடற்கரையில் பல கதை பேசி நடந்தது
அக்காவுடன் சண்டை போட்டு, அம்மாவிடம் அடி வாங்கி, அடி வாங்கியதால் சண்டை போட்டது
தம்பியுடன் ஆங்கிலத்தில் உரையாடியது; ஆங்கிலம் தெரியாத காலத்தில்
கோயில் கடையில் அழகாக அடுக்கி வைத்த யானை பொம்மையை வாங்க அடம்பிடித்து அடி வாங்கியது
விதவித வண்ணங்களில் ரிப்பன் வாங்கி ஜடை போட்டு பெருமையுடன் திரிந்தது
திண்ணையில் பக்கத்து வீட்டு அத்தை சொல்லிய பேய் கதை
புது அரைப்பாவாடை அணிந்து திமிருடன் பார்த்த பார்வை
வானொலிப் பெட்டியின் பின்னால் சென்று பாடியவரை தேடிய அறியா மனம்
முதன் முதலில் பாரதி கவிதை படித்து நிமிர்ந்த நடை பயின்றது
கிராமத்து பாட்டி வீட்டில் திருடி சாப்பிட்ட கோழி முட்டை
தாத்தா அன்புடன் செய்து தந்த கருப்புக்கட்டி
கோழி விரட்டி மாமன் கூட்டில் அடைக்க, அதை விவரம் தெரியாது திறந்து பார்த்த கள்ளமில்லா மனது
பனங்காட்டில் பதனீர் குடிக்க காலில் செருப்பில்லாமல் ஓடி முள் கிழித்ததால் செய்த ஆர்ப்பாட்டம்
நுங்கு சீவிய காயில் சிறுவர்கள் காரோட்டியதை ஏக்கத்துடனும், வெட்கத்துடனும் பார்த்தது
மாட்டின் வால் பற்றி அதன் பின்னால் தறிகெட்டு ஓடியது
ஆட்டை தம்பிமார் பிடிக்க அவ்வாறே அதன் மடுவிலிருந்து பால் பருகியது
வாய்க்காலில் பாவாடை கட்டி குளிக்க தெரியாது நின்ற பட்டணத்துப் பிள்ளை
அம்மா அனாசியமாக வாய்க்காலில் நீந்துவதை ஆச்சிரியத்துடன் ரசித்தது
கொக்கு பார்த்து வெள்ளை போட சொல்லியது
கோழி கூட்டில் அம்மாவின் அடிக்கு பயந்து ஒளிந்தது
தட்டான் பிடிக்க வீட்டின் பின்புற காட்டில் பயித்தியமாய் அலைந்தது
புழுக்களை தூண்டிலில் மாட்டி தம்பிமார் தர ஆத்தாங்கரையில் பழி கிடந்தது
அடுத்த வீட்டு அழைப்பு மணி அடித்து, அவர் வரும் முன் ஓடி ஒளிந்த கள்ளத்தனம்
பாட புத்தகத்தில் கதை புத்தகம் வைத்து வாசித்து அம்மாவை ஏமாற்றியது
மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து எண்ணிய நட்சத்திரங்கள்
நிலவில் ஒழிந்திருக்கும் அன்னை மரியின் மடியில் நான் என கற்பனை
மேக கூட்டத்துடன் போட்டி போடும் கனவு கற்பனைகள்
காகித்தில் கப்பல் செய்து, மழை நீரில் விளையாடியது
இத்தனையும் திரும்பவும் வேண்டும்கிடைக்குமா?
பூமி பின்னோக்கி சுற்றுமா?
2 பேர் மறுமொழிந்துள்ளனர்:
மலரும் நினைவுகளா?
அழகாய் சொல்லிருக்கிறீர்கள்!!
அஞ்சாறு வருடத்திற்கு முன்பு, நண்பர் குழாமோடு ஊரை ரெண்டு படுத்திக் கொண்டிருக்கும் போது, மள மளவென கொட்டிய வரிகள். குழந்தை பருவ குறும்புகள் பத்தி பேச நண்பர்கள் இருக்க மாட்டாங்க. அவங்க நம் வீட்டு பக்கத்து வீட்டிலிருந்திருந்தாலொழிய. இல்லையா? பலவருடம் கழித்து சந்தித்த நண்பர்களோடு அவர்களுடன் கழித்த நாட்களை பகிர்ந்து கொள்கிறோம். குழந்தைப் பருவத்தை குடும்பத்தினரிடமே பகிர்கிறோம் எனப் பேசப் போக... முளைத்தது தான் இந்த எண்ண ஓட்டங்கள். எழுதி முடிச்சதும் என்னோட மனசுல இவ்வளவும் எங்கே புதைஞ்சிருந்ததுன்னு நெனச்ச போது... ஒருவிதமான குழந்தைத்தனமான பெருமிதம் ஒட்டிக் கொள்ளதான் செய்தது.
பின்னொரு நாளில் அம்மாவிடம் வாசிக்க சொல்லி கொடுக்க, அம்மா முகத்தைப் பார்க்க வேண்டுமே. காண கண் கோடி வேண்டும். :-)
Post a Comment