Friday, March 16, 2007

சிறு கவிதை

சிறு கரு விழிகள்
அடர்ந்த தலை முடி
குச்சி குச்சி கைகள்
நெடுநெடுவென வயதிற்கேற்ற வளர்த்தி

குட்டி அரை நிஜார்
சிவப்பு பனியன், பனியன் மேல் ஸ்டைலாய் சட்டை
எப்போதும் பைக்குள் கை - ஒயிலாய்
கேட்டால், உனக்கொன்றும் தெரியாது என்பது போல் ஒரு பார்வை

வயது முதிர்ந்தவளையும் குழந்தையாய் தாங்குவான்
அவன் வயதொத்தவளாய் எண்ணுவான்
எகதாளமாய் என்னை அழைப்பதில் அவனுக்கின்பம்
அவனை சீண்டுவதில் எனக்கின்பம்

கோபம் வந்தால் பற்கடித்து திட்டுவான்
சிரித்தால் பொய் கோபம் காட்டுவான்
முத்தங்கள் பல கொடுத்திடுவான் - திருப்பிக்
கொடுக்காது போனால் முறைத்திடுவான்

சுற்றியுள்ளோர் பொறாமை கொள்ளும் அன்னியொன்னியம் எங்களுக்குள்
குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கள்ளமில்லாது உறங்கிடுவான் மார்பில் கை வைத்து

சிறு கை கொண்டு அணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்பான்
புரியாத கதையும் நிறைவாய் கேட்பான்
புரியாமல் போயினும் என்னிடம் வா என்பான்
தெரிந்தோ தெரியாமலோ மனதிற் பால் வார்ப்பான்

அவன் அன்பு.....
அதற்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
வார்த்தைகளில் அடங்காது; யாருக்கும் புரியாது
சொன்னால் உள்ளம் பொங்கும்; கண்களில் நீர் தேங்கும்

என்னை ஆட்டிப் படைக்கும் குட்டி பிசாசு
என்னை குழந்தையாக்கும் குழந்தை
எனக்கு உரிமையில்லா என் 4 வயது கவிதை
என் குட்டி மருமான் ஜேசன்

--காட்டாறு

5 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

அழகாய் எழுதியுள்ளீர்கள்.
4 வயது சிறுகவிதை பற்றி எழுத ஆயிரம் வரிகள் கூட பத்தாதோ?

said...

வெகு அருமை.

said...

உண்மை கோவை மணி. அவர்கள் அசைவு ஒவ்வொன்றும் கவிதை தானே?

said...

நன்றி முத்துலெட்சுமி. உங்கள் சிறுமுயற்சி blog-இல் மறுமொழி கொடுக்க இயலவில்லையே. அருமையான மணாலிப் பயணம்

said...

\\வயது முதிர்ந்தவளையும் குழந்தையாய் தாங்குவான்
அவன் வயதொத்தவளாய் எண்ணுவான்
எகதாளமாய் என்னை அழைப்பதில் அவனுக்கின்பம்
அவனை சீண்டுவதில் எனக்கின்பம்\\

அப்படியே என்னை என் அத்தைக்கிட்ட கூட்டிகிட்டு போயிட்டிங்க ;)))

மிக்க சந்தோஷம் ;))