Saturday, March 24, 2007

சாமியான என் அம்மா

என் அம்மா, காலையில
தூங்கிய என்னை அழ அழ எழுப்பி
முத்தம் கொடுத்து, கொஞ்சி,
குளிக்க வைத்து, சாமி கும்மிட வைத்து,
தல வாரி, சீருடை அணிவித்து
இட்லி ஊட்டி, பள்ளிக்கு அனுப்பினார்

பள்ளியிலிருந்து பாதியிலே
கூட்டி செல்ல வந்தார் என் மாமா
என் தலைமை ஆசிரியர் கலங்கிய கண்களுடன்
என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்
பின், என்னை இறுக அணைத்து அனுப்பி வைத்தார்
என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிற மாதிரி இருக்குது

வர்ற வழியெல்லாம் வழக்கம் போல்
வள வளன்னு பேசிட்டே வந்தேன்
அம்மா "சாமி கிட்ட போயிட்டாடா"
என்றார் மாமா என்னை கட்டிப் பிடித்து
"சாமி கிட்டேயா? அப்படின்னா?"
ஒன்னும் சொல்லல அவர்; சும்மா அழறார்

வீட்டு முன்னால நெறையா பேர் இருக்காங்க
அழறாங்களோ?
சின்ன சலசலப்பு; நான் வந்ததனாலேயா?
கூடியிருந்தவங்க எல்லாரும் வழிவிடறாங்க
என்ன நடக்குதுன்னு தெரியல
எதுக்காக இத்தனை பேருன்னு புரியல

வீட்டுக்குள்ள அம்மா படுத்திருக்காங்க
அப்பா ஓன்னு அழறார்
"அழாதீங்க அப்பா
எனக்கு பயமாயிருக்குது"
அம்மா கட்டிலருகில் என் பாட்டி
என்ன பாத்ததும் கதறி அழுகிறார்

"யாராவது என்னிடம் பேசக் கூடாதா
என்ன நடக்குதுன்னு புரியலயே
ஏன் அழனும்
"நான் அம்மாவையே பார்க்கிறேன்
அம்மா அழகா இருக்காங்க
"எதுக்கு படுத்திருக்காங்க?"

நான் அப்பா பக்கம் போனேன்
அப்பா இறுக அணைக்கிறார் என்னை
அவரின் அணைப்பு எனக்கு பயமாக இருக்குது
அவர் அழுதுட்டே இருக்குறார்
எனக்கும் அழுகையா வருது
பயமாவும் இருக்குது

பாட்டிட்ட போனேன்
"சாமிட்ட போயிட்டாடா
தவிக்க விட்டு போயிட்டாடா
இனி வர மாட்டாடா
உன்ன கொஞ்ச மாட்டாடா"
புரிஞ்சது எனக்கு எதுக்கு அழனும்னு!

-- காட்டாறு

16 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

கலங்கடித்துவிட்டது!

said...

கலங்கிவிடேன்! :-((

said...

கலங்கடிச்சிட்டீங்களே கண்ணம்மா.ஏதோ பொழுது போக்கத்தான் எல்லோரும் வலைக்கு வர்ராங்கன்னு நெனைச்சிருந்தேன்.மன பாரத்தை இறக்கவும் என்பது இப்பத்தான் புரியுது.நாங்க எல்லாம் நிச்சயமா ஆறுதலா இருப்போம் தோழி

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

தங்களின் கவிதை வரிகளைப் படித்ததும் மனது பாரமாகின்றது, உணர்சிகரமான கவிதை வரிகள்,
தொடர்ந்து எழுதுங்கள்,


அன்புடன்...
சரவணன்.

said...

\\புரிஞ்சது எனக்கு
எதுக்கு அழனும்னு!/

ம்..
பிரிவைப் பற்றி குழந்தைக்கு அன்று புரிந்தது விட
தொடரும் நாட்களில் நிறைய புரியும்.
புரிய புரிய துயரம் அதிகமாகும்.
அன்றைய நாளைக்காட்டிலும்
அடுத்தநாள் ஏக்கத்தை அதிகரிக்கும்.அன்பை திசைதிருப்பினால்
காட்டாறாக நீங்கள் மகிழ்ந்திருக்கலாம்.
மற்ற உங்கள் பதிவு பார்த்து அப்படித்தான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

said...

இது, அப்போது, என் 7 வயது மருமகன், என் அண்ணன் குழந்தை என்னிடம் கூறியது. தலைல இடி இறங்கிய மாதிரி இருந்தது. என் எண்ணக்குமுறல்களை எழுதி வைப்பது என் வழக்கம். அது தான் இந்த கவிதை. மறுமொழிகளைப் பார்த்ததும் கண் கலங்கிட்டேன். இத்தனை ஆறுதலான தோழர்கள் தோழிகள் என்னுடன் இருக்கும் போது......

சோகக்கணத்திலிருந்து விடுவிக்க லொள்ளு பேச தோணுது..... கண்மணி யக்கா, முத்துலெட்சுமி யக்கா ஏமாந்து பூட்டிகளே.....

பின்குறிப்பு: இப்போது அவனுக்கு 9 வயதாகிறது. அவனின் தாயும், தோழியும் நானே. என்னுடன் சேர்ந்து அவனுக்கு உலகமே தோழி/தோழர் ஆனதை சொன்னேன். அவனுக்கு புரிந்ததோ இல்லயோ, புரிந்தது போல் தலையாட்டினான்.

said...

ஏற்கனவே இதை படித்தேன். நல்லா இருந்துச்சி மறுபடியும் படிக்கலாம்னு வந்தேன்.

நல்லாவே இருக்குங்க.

said...

அருமை, கண்கள் கலங்கிவிட்டது ;-(

said...

//கலங்கடிச்சிட்டீங்களே //
//கலங்கடித்துவிட்டது//
//கலங்கிவிடேன்//
//கண்கள் கலங்கிவிட்டது//

கலங்க கூடாது அப்பு... நீங்க கலங்குனா.... யார் படிப்பாக நம்ம வியர்டு பகுதிய.... நம்ம வியர்டு நாடகம் அரேங்கேறிச்சி...... பயந்து ஓடாம தினம் தினம் காட்டாற்றுல குளியல் போட்டுட்டு போங்க.

said...

இதே போல ஒரு பதிவு ரொம்ப நாளைக்கு முன்னாடி வாசிச்சதா நினைவு வர தேடினேன். சிக்கிடுச்சி இரண்டும் வெவ்வேறு தளம்னாலும் நடை ஒன்றுதான். ஒருவரின் பார்வையில் சோகத்தை சொல்வது.

http://jssekar.blogspot.com/2006/07/blog-post.html

ரொம்பவே நெகிழ வைத்த வரிகள்
இரண்டு கவிதையுமே

said...

உங்க வியர்டு பதிவை படித்துவிட்டு சிரித்தபடியே இங்கு வந்தால் போட்டு "அழுத்திட்டீங்க".

said...

//இரண்டும் வெவ்வேறு தளம்னாலும் நடை ஒன்றுதான். ஒருவரின் பார்வையில் சோகத்தை சொல்வது.

http://jssekar.blogspot.com/2006/07/blog-post.html
//
தம்பி..... தங்கக் கம்பிதான் போங்க... இப்படி ஒரு நல்ல பதிவை வாசிக்கத்தூண்டியதுக்கு. இது என்ன உங்களுடய வியர்டு குணமா? நடை நளினத்த தேடி புடிச்சி இட்டாந்தீகளே... வியர்ட் பத்தி சிந்திச்சதுல எதப் பாத்தாலும் வியர்ட்டா தெரியுதோ... தப்பா எடுத்துக்கப்டாது நீங்க. ஞானசேகர் கலக்கிருக்காரு. நம்மகிட்ட இதுபோல கவிதைகள் நிறைய கைவசம் இருந்தாலும், மகளிர் சக்தி மேலயும், அண்ணாச்சி, யக்கோவ், அப்பு, ஆயி மேல சத்திய பிரமாணம் எடுத்ததால எடுத்து வுட மனசு வராது (கொஞ்ச நாளைக்கு....)

said...

கண்ணில் நீர் இருப்பவரும்
உடலில் உயிர் இருப்பவரும்
நிச்சயம் கலங்கித்தான் போவர்
உங்களின் இந்த கவிதை படிச்சு.
மன பாரம் குறைந்தை உணர்ந்தேன்
மறுபடி ஒருமுறை படித்தேன்

said...

காட்டாறு,

நமக்கு(உங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன்) என்ன எக்ஸ்ரே கண்களா... படிக்க, படிக்க நீங்க ஒரு குழந்தையின் மனோ நிலையிலிருந்து நிசர்சனத் திரையை விளக்கியிருக்கீர்கள் என்பது புரிந்தது.

அப்புறம், நம்ம ஞானசேகர் இருக்காரில்லை, அவரு ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சத்தமில்லாம வருவார் போடுவார் ஒரு போடு போயிட்டே இருப்பார்... அங்கு இருக்கும் அனைத்தையும் படிக்கத் தவறாதீர்கள்... நம்ம எப்பொழுதோ புக் மார்க் பண்ணியாச்சில்ல அவரை...