Monday, April 02, 2007

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி

படித்தவர்களையும், பாமரர்களையும் முட்டாளாக்கும் முட்டாள் பெட்டி இந்த தொலைக்காட்சி பெட்டி என்றால் அது மிகையாகாது.

தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது ஒரு கடமை போல் ஆகிவிட்டது. என்ன செய்ய? இது போல் அடிக்க்ஷனுக்கு ஏதேனும் மாற்று உண்டா எனில், இல்லை எனத்தான் தெரிகிறது. நானும் சுப்பர் மேன் போல் உடை அணிந்தால், அவனைப் போல் சாகசம் செய்ய முடியும் என என் 4 வயது மருமகன் சொல்கிறான். சரி அவன் தான் குழந்தை. வயது வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், செல்வி வீட்டில் ஒருத்தியாகிவிட்டாள் என்று. சரி அத விடுங்க..... எத்தனை பேர் நம் வீட்டிற்கு வருகை தந்திருப்பவருக்கு முதலிடம் கொடுக்கிறோம். அவர்களையும் சேர்ந்து நம்முடன் தொலைக்காட்சி முன் உட்கார வைத்து வெறுப்பேத்துகிறோம். போன முறை நான் இந்தியா போன போது, என் அத்தை வீட்டில் என்னை விரும்பி வரச் சொன்னார்கள். நானும் சரி என்று கூறி சாயங்காலம் 7 மணிக்கு வருகிறேன் என்றேன். உடனே அவர் மதியம் 2 மணிக்கு வந்துவிடு; 7 மணியிலிருந்து சீரியல் ஆரம்பித்து விடும்; உன்னிடம் உட்கார்ந்து பேச முடியாமல் போய்விடும் என்று ஒரு போடு போட்டார்களே பார்க்கலாம்.

நான் சிறு வயதில் ஒரு காலனி போல் உள்ள தெருவில் வசித்தேன். அப்போது தொலைக்காட்சி பெட்டி அவ்வளவாக பிரபலம் அடையாத காலம். பின் 2 வருடங்களில் மள மளவென்று அதன் ஆதிக்கம் பெறுகியது. அந்த காலகட்டத்தில் பள்ளிப் போட்டியில் கீழ்வரும் கவிதையை (கவுஜ என்றும் கூறலாம்) எழுதி பரிசு(?ச்சோப்பு டப்பாதாங்க அந்த காலத்துல) வாங்கினேன். இன்று தூசி தட்டி உங்களுக்கு தருகிறேன். ஏனென்றால் இன்றும் அதே நிலைதான். மாற்றம் ஏதுமில்லை.

===== ஏக்கம் =====
இந்து கிறிஸ்துவ பேதமின்றி
காய்கறி, புளி, அரிசி
கலந்த கூட்டாஞ்சோறு கிளறி
முழு னிலவில் இலை பறிமாறி
கூட்டுக் குடும்பமென
கூட்டணியாய் இருந்தது
10 குடும்பம் கொண்ட
எங்கள் தெரு

புள்ளி வைக்க,
வண்ணக் கோலமிட,
சிறார்கள் எடுபிடியாக,
பல வேறு விரல்களின்
கூட்டு முயற்சியில்
நடுங்கும் மார்கழியிலும்
பொங்கலன்று
சாதி மத பேதமின்றி
அனைத்து வீட்டின் முன்னும்
கோலம் - உணர்த்தும் சமூக உறவை!

24 நான்கு மணி நேரமும்
திறந்திருக்கும் கதவுகளும்,
மதியமானால் மணக்கும் காய்கறி சோறும்,
யாதும் ஊரே என நினைவுபடுத்தும்!
கையில் காசில்லாத போதும்
அன்பு மட்டும் மிஞ்சியிருந்த
பக்கத்து வீட்டு நெருக்கம்!

இன்று,
பணம் காசு வந்தது;
படப் பொட்டி வந்தது;
திறந்திருந்த கதவுகள்
நாடகம் பார்க்க மூடிக் கொண்டன
நலம் விசாரிக்கவும் நேரமின்றி!

-- காட்டாறு

21 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

//திறந்திருந்த கதவுகள்
நாடகம் பார்க்க மூடிக் கொண்டன
நலம் விசாரிக்கவும் நேரமின்றி!
//

இந்த வரியை படிச்சதும் முன்ன எங்கேயோ படிச்ச இன்னொன்னு ஞாபகத்துக்கு வருதுங்க..

தொழில்நுட்பம் அமெரிக்காவை அண்டைவீடாக்கியது
அண்டைவீட்டை அமெரிக்கா ஆக்கியது..

said...

//தொழில்நுட்பம் அமெரிக்காவை அண்டைவீடாக்கியது
அண்டைவீட்டை அமெரிக்கா ஆக்கியது.. //
மணிகண்டன், இந்த வரிகள் அருமையிலும் அருமை. 100% உண்மை இருக்கிறது. அதுவும் கண்களை கலங்கடிக்கும் உண்மை.

said...

உண்மை உண்மை உண்மை.

உண்மையைத் தவிர வே(ரி)றில்லை.


தொலைக்காட்சி(யே) இப்பெல்லாம் பார்க்கறதில்லை.
'சூரியனை' வேணாமுன்னு சொன்னவளை எல்லாரும்
விநோதமாப் பார்க்கறாங்க(-:

said...

துளசிக்கோவ், எனக்கும் தொலைக்காட்சின்னா அதுவும் சீரியல்ன்னா ரொம்ப அலர்ஜி. இந்த உண்மைய ஒரு முற சொல்லப் போய் மாட்டிக்கிட்டது போதும். யார் கிட்டேயும் சொல்லாதீங்க.....

said...

நான் இப்ப இருக்கும் வீட்டின் முதலாளி அம்மாவுக்கு சீரியல் தான் உயிர்.மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்து 10.30 மணிவரை ஓடும்.
அவுங்க கேட்கிற சத்தம் நம்மையும் சூடேறும் .வெறும் கேட்கிற நமக்கே இவ்வளவு டென்ஷ்ன் ஆகிறது என்றால்.. பார்பவற்கு?
பயமாக இருக்கு.

said...

இதுல இருக்குற ரிலேஷன்ஷிப் கொடுமையத்தான் என்னால தாங்க முடியல குமார். அட... இந்த சீரியல் பாக்குறவுக அத கொற சொல்லிட்டே பாக்குறாகுளே தவிர, boycott பண்ணுறது இல்ல. எங்க போய் முட்டிக்கிறது சொல்லுங்க.

said...

மொத்தமா ஒதுக்க முடியலங்க...ஆங்கிலம் இந்தி தெலுங்கு மலையாளம்ன்னு வர்றது 100 சேனல் அதுல ஒவ்வொன்னுலயும் 100 சீரியல் , அதுல 2 பார்க்கறது தான். பிடிக்காதது வரும் போது டைரக்டர திட்டுவோம். அங்க இங்க நின்னு வேலைப்பார்த்துக்கிட்டே , கதை படிக்கறமாதிரி இதுவும்.அடிக்ட் ஆகாத வரை சீரியல் பாக்கறது தப்பு இல்லன்னு தோணும்.

said...

இதே பொருளில் கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னாடி இங்கே நான் எழுதிய ஒரு வெண்பா

காலை படிப்பும் கனிவுதரும் பாட்டும்பின்
மாலை விளையாட்டும் போயே - அலைகளும்
கோலங்கள் பார்த்தபின் ஆனந்தம் என்றிங்கு
காலமே மாறிடிச்சுப் போ.

Anonymous said...

எல்லா ஊரிலேயும் இதே பிரச்சனைதானா?சொல்ல வந்த கருத்தை கவிதையாக சொன்னது அழகு :)

said...

நல்லாயிருக்கு...

உறவுகளின் பெயரால் உள்ளங்களை கொன்று போட்ட தொலைக்காட்சி தொடர்கள்..

சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com

said...

நாங்கல்லாம் சமீபத்தில் 'சித்தி'யால் பாதிக்கப்பட்டவர்கள். பாவம். நீங்க அந்த காலத்திலேயே பாதிக்கப்பட்டவர்போல் தெரிகிறது.

said...

உங்களின் ஏக்கம்...உண்மையிலும் உண்மை..

said...

முத்துலெட்சுமி, நீங்க சொல்கிறதை ஏற்றுக் கொள்கிறேன். அடிக்ஷன் ஆகாம இருக்குற வரைக்கும் சீரியல் பார்ப்பது உங்களுக்கு okay. ஆனா உங்களுக்கு பிடிக்காததை எப்படி அந்த தயாரிப்பாளருக்கு காமிக்கப் போறிங்க? மேலும், நான் சாடியது, மனிதர்களை விட, தொலைக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை மட்டும் தான்.

said...

கொத்தனாரே, கண்டிப்பா இன்று உங்களுடைய வெண்பாவ படிக்கிறேன்.

said...

துர்கா, எல்லா ஊரிலேயும் இந்த பிரச்சனை இருக்குதான்னு எனக்கு தெரியல. அமெரிக்காவில் குளிர்க்காலத்தில் புது புது சீரியல்கள் வரும்; வேனிர்காலத்தில் எல்லாம் ரீ-ரன்னாக இருக்கும்.

பாராட்டுக்கு நன்றி துர்கா

said...

சூர்யா, கோபிநாத்
உங்க பாராட்டுக்கு நன்றி!

said...

சுல்தான், மாறாத ஒன்றாக தொலைக்காட்சியின் தொல்லை என்றே கூறலாம்.

said...

புதிய வரவில் கலக்குறீங்க, உங்களின் 'வியர்டு' குணாதிசயத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.

தவிரவும், உங்கள் ப்ளாக்கில் 'Show Links' தெரியும்படி செய்தால், நலம்.

said...

காட்டாறுயக்கா! சின்ன பிள்ளையா இருக்கும் போதே கவுஜ எழுத ஆரம்பிச்சாச்சா, நானு ஒரு கவுஜ போட்டு வாங்கி கட்டிகிட்டேன், அதை விடுங்க பது வரவிலேயே கலக்கி வர்ரீங்க வாழ்த்துக்கள்:-))

said...

சிவா, அழைத்தமைக்கு நன்றி! மங்கை யக்கா ஏற்கனவே என்னை வியர்டுன்னு பறைசாற்ற வைத்துவிட்டாரே! இதோ அந்த பதிவு:
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_27.html

நீங்கள் சொன்ன மாதிரி லிங்க் தெரியும்படி செய்து விட்டேன். அறிவுரைக்கு நன்றி!

said...

அபி அப்பா, என் அத்தை(அப்பாவின் தங்கை) தமிழ் புலவர். என் தந்தையோ தமிழ் பக்தர்(?). அதனால தமிழ் மேல் ஒரு ஈர்ப்பு சிறுவயதிலே இருந்தது. அத உரம் போட்டு வளர்த்தது ராஜலெட்சுமி என்ற தமிழ் ஆசிரியை. இவர் என் அத்தையின் மாணவி. அதனால் என் மேல் தனி பாசம் இவருக்கு. தமிழில் உள்ள பல நூல்களை அடையாளம் காட்டியவர் இவர். இவர் சிலாகித்து குறகளுக்கும், செய்யுள்களுக்கும், etc பதவுரை சொல்லும் அழகை கேட்டுக்கொண்டே இருக்கலாம். கவிதை எழுத தூண்டியது இதுவாகக் கூட இருக்கலாம். முன்னர், அன்றைய தமிழில் எழுதினேன். பின், எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுத ஆரம்பித்தேன். இதுவே பிடித்துப் போக முன் எழுதும் நடை மறந்தே போச்.

ஏண்டா கேட்டோம்ன்னு ஆச்சா..... Sorry... I got carried away!