Tuesday, April 03, 2007

நண்பனின் முதல் இரவு - புது அனுபவம்

ஏனோ நமக்கு முதல் முறை என்பது ஒருவித முக்கியத்துவமான ஒன்றாகிவிடுகிறது. குழந்தைப் பருவத்தில் குப்புற விழுந்தது முதல், தத்தி நடந்தது வரை, வாலிப பருவத்தில் மீசை முளைத்தது முதல் காதல் வயப்படும் வரை, முதுமைப் பருவத்தில் தலை நரைக்க துவங்கியது முதல் இறக்கும் வரை ஒரு சில முதல்கள் முக்கிய வாய்ந்ததாக நம்மால் நினைத்து நினைத்து மகிழவோ, அழவோ வைக்கிறது. மன்னிக்கவும்.... திருமண பருவத்தை வேண்டுமென்றே விட்டுவிட்டேன். முதல் புத்தகம், முதல் பயணம், முதல் முத்தம், முதல் பதிவு, முதல் கவிதை, முதல் காதல், இன்னும் பல முதல்கள் நம் வாழ்வில்.

நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் முதல் புது அனுபவங்களை தொகுத்து தரலாமுன்னு இருக்கேன். போதும் நிறுத்து.... கதைக்கு வா என்ற கூக்குரல் காதில் ஒலிப்பதால், அரு(று)மை(வை)யான துவக்கவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

அமெரிக்க கனவோட 24 மணி நேரம் பறந்து வந்துருவோம். ஆனா குளிர் காலமா இருந்ததுன்னா.... நாம படுற அவஸ்தை சொல்லி மாளாது. அப்படி குளிர் காலத்துல அமெரிக்கா வர்றவங்க பாவம் பண்ணினவங்கன்னு குடு குடுப்பக் காரன் சொன்னதா எனக்கு ஞாபகம். அப்படி ஒரு குளிர் காலத்தில் அதுவும் பனி விழும் காலத்தில் என் நண்பன் முதன் முதலில் வேலையின் நிமித்தம் அமெரிக்கா வந்தான். அன்று சனிக்கிழமை. பனி 4 அடிக்கு பெய்யுது. பயங்கர குளிரு வேற. விமான நிலையத்தில் போய் நின்னா இவனைத் தவிர அத்தன பேரும் வெளியில வந்துட்டாங்க. எங்கனாச்சும் சீட்டுக்கு கீழ இழுத்து மூடி தூங்கிட்டானோன்னு ஒரு வித கலக்கம் ஆட்கொள்ள, வாசலையே வெறிச்சி பாத்துட்டு இருக்கேன். வெறுங்கைய வீசிட்டு, சிடு சிடுன்னு வர்றான். என்னடான்னா.... பயண மூட்டை (luggage) தொலைஞ்சி போச்சின்றான். ஒரு வழியா அவன வெளில தள்ளிட்டு வந்து, விமான நிலையத்தில் புகார் கொடுக்க வச்சி, வீட்டுக்கு வந்தோம். காலை வீட்டில் வந்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர் விமான நிலைய அதிகாரிகள். வரும் போது ஒரு கடையில் (Meijer) அவனுக்கு இரவு உடுப்பு (என்ன.... ஒரு நீள கால் சட்டையும், மேல் பனியனும் தான்) வாங்கிக் கொண்டு வந்தோம். வரும் வழியெல்லாம் பனிய வெறித்து பார்த்தவாறே, குளிரைத் திட்டிட்டே வந்தான். இத்தனைக்கும் குளிருக்காக ஸ்வெட்டர், இத்தியாதி ஐட்டங்களெல்லாம் போட்டிருந்தான்; காரில் ஹீட்டர் போடப் பட்டிருந்தது.

வீட்டுக்கு வந்து, ஒரு வழியா சகஜ நிலைக்கு அவன் வந்ததும் கத பேச ஆரம்பிச்சோம். 10 வருஷ கதய விடியிறதுக்குள்ள பேச மாட்டோ மான்னு ஏக்கம் எப்போ மனசுக்குள்ள வந்த்துன்னு தெரியல. பேசினோம்; பேசினோம்; பேசிட்டே இருந்தோம். படுக்கப் போகலாமுன்னு முடிவு பண்ணி, வீட்டில் உள்ள பாதுகாப்பு பெட்டி (Security System) பற்றி சொன்னேன். அமெரிக்காவில், வீட்டுக்கு வீடு பாதுகாப்பு பெட்டி உண்டு. இது நமக்கெல்லாம் (அப்போ) புதுசு. வீட்டினுள் இருந்து கொண்டே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்; வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இரண்டும் வெவ்வேறு முறையில் செயலாற்றும். பூம் பூம் மாடு மாதிரி சொன்ன கதயெல்லாம் கேட்டுட்டு, போதும் எனக்கு புரிந்தது என்றான். நானும் அக்கறையா, என்ன கேக்காம கதவ தெறக்காதன்னு சொல்லிட்டு படுக்க போய்ட்டேன்.

தலைவருக்கு காலை 5 மணிகிட்ட தூக்கம் கலைந்து விட்டது. ஜன்னல் வழியே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தவனுக்கு, வரவேற்பரையில் போய் உட்காரலாமுன்னு தோணியிருக்குது. நேரம் போகாமல், அப்படியே ஒவ்வொரு closet கதவா திறந்து திறந்து பார்த்தவன், அறியாமல், முன் வாசலை திறக்கப் போய், பாதுகாப்பு பெட்டி தன் வேலைய செவ்வனே செய்ய, சைரன் சத்தம் கேட்ட எனது நண்பன், துண்டக் காணம் துணியக் காணமுன்னு கதவ தெறந்து வெளிய ஓடிட்டான். நான் அடிச்சி புடிச்சி கீழ இறங்கி வந்து சைரன ஒரு வழியா நிறுத்தி, நண்பனைத் தேட, அவனோ, பக்கத்து வீட்டு செடியின்(Evergreen tree) பின் ஒளிந்தவாறு வெறும் பனியனுடன், செறுப்பில்லாமல் உட்கார்ந்திருக்கிறான். என்னப் பாத்ததும் பாஞ்சி வீட்டுக்குள்ள வந்தத இப்போ நெனச்சாலும் சிரிப்பு தான் வரும். இவனோ, அழுகை முடிந்த பின்னும் விசும்பலை நிறுத்தாத குழந்தை மாதிரி, வீட்டிற்குள் வந்து 30 நிமிடத்திற்கு பின்னும் குளிரில் வெட வெடன்னு அவன் ஆடிட்டு இருந்தது இப்போ நெனச்சா பாவமா இருக்கும். அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் பிரசுரிக்கத் தகுந்தவை அல்ல.

இப்படியாக நண்பனின் முதல் அமெரிக்க இரவு, நடுங்கும் குளிரில் சுபமாக, மறக்க முடியாத நிகழ்வாக இனிதே முடிந்தது.


அனுபவம் தொடரலாம் .....................

14 பேர் மறுமொழிந்துள்ளனர்:

Anonymous said...

I enjoyed reading your post. I laughed so much. Thanks. Keep posting.

Radha

Anonymous said...

:))))
பாவம் அவர்.

said...

ராதா, சிரித்தால் சந்தாஷம் தான்.

துர்கா, அவரிடம் உங்களைப்பற்றி ப்ளாக் போட்டிருக்கிறேன் என்றேன். அவர் வேகமாக என்னுடைய ஊர் பேர் போடவில்லையே என்று கேட்டதையும் எழுதி விடுகிறேன். நீங்கள் அவர் ஓடி ஒளிந்ததை பார்த்திருந்தீர்களானால், இப்படி சொல்ல மாட்டீர்கள். விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்

said...

பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு வந்த புதிதில் நான் கழித்த சில முதல் இரவுகளின் அனுபவங்களைப்பற்றி சிந்திக்க வைத்துவிட்டீர்கள். நான் முதன்முதலில் வந்திறங்கிய ஊரில் என் குளிர்கால நடுக்கங்களை இன்றும் நினைவு கோறுகிறேன். உங்கள் பதிவு பிரமாதம்.

said...

இதுதான் முதலிரவு அனுபவமா? நாங்கூட என்னவோ ஏதோன்னு ஓடியாந்தேன். :-) நல்ல அனுபவந்தான். பனியனோட செருப்பில்லாம பொதருக்குள்ள உக்காந்திருக்குறதும். :-))

said...

பரதேசி, முதல் முறை வந்திருக்கீங்க... நன்றி! பாராட்டுகளுக்கும் நன்றி! ஓகோ.... உங்களை சிந்திக்க வைத்துவிடேனா?

said...

ராகவன், நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் மரமண்டைல ஏறியிருக்குது. எப்பவுமே உட்கார்ந்து, யோசிச்சி, ப்ளான் பண்ணி எழுதுனது இல்ல. அதான் இப்பிடி. ஜாலியா கத எழுத ஆரம்பிச்சதுல இப்பிடி ஒரு அர்த்தம் கொண்டு வரும்ன்னு எதிர்பார்க்கல. :)))

said...

இதுதான் முதலிரவு அனுபவமா? நாங்கூட என்னவோ ஏதோன்னு ஓடியாந்தேன். :-)

ரிப்பீட் ஜி ரா

ஆமா இந்த மாதிரி ஆர்வமான் தலைப்பு கொடுக்கிறது எப்படி?
:)

said...

/இதுதான் முதலிரவு அனுபவமா? நாங்கூட என்னவோ ஏதோன்னு ஓடியாந்தேன். :-)//

Yeah... Metoo :)))

said...

ஹிஹி.. நானும் :-)

said...

முதலிரவுன்னதும் என்னமோ எதோன்னு பெரிய மனுஷியா கெளரவமா ஒதுங்கிப்போயிட்டேன். இப்ப என்னன்னா
ஒரு 10 பின்னூட்டம். அதான் வந்து பார்த்தேன்.

நல்லா இருக்கு. ஆமாம், புதருலே ச்சும்மாத்தானே 'உக்காந்து'ருந்தார்? :-)

said...

//ஆமா இந்த மாதிரி ஆர்வமான் தலைப்பு கொடுக்கிறது எப்படி?
//
அய்யனாரே, ரொம்ப சிரமப் படல.... மனசுல வந்தது.... வார்த்தைகளா விழுந்தது.... அவ்வளவு தான். நமக்கு யோசிச்சி எழுதுற பழக்கமில்லை.

said...

ராம் அவர்களே, சேதுக்கரசியாரே, ரொம்ப உணர்ச்சி வசப் பட்டுடீங்க போலவே!
;-)

said...

துளசி யக்கா, நீங்க.... என்னப் போயி.... You too Brutus!

சரி சரி கண்ணத் தொடச்சிக்கிறேன். எனக்கு இப்பொ ப்ரெஞ்ச் தத்துவ ஞானி ஹென்றி பெர்க்ஸன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.

"The eye sees only what the mind is prepared to comprehend. "


//நல்லா இருக்கு. ஆமாம், புதருலே ச்சும்மாத்தானே 'உக்காந்து'ருந்தார்? :-) //
ஹி ஹி ஹி....அப்படி தான் நினைக்கிறேன். நான் புதருக்கருகில் போய் பார்க்கவில்லை. இப்படி ஒரு யக்கா கேட்பார்கள் என்று அப்போது தோன்றவில்லை.