Wednesday, February 27, 2008

மரணத்தின் சுவடுகள்


மரணத்தின் முதல் அறிமுகம். பாட்டியம்மா… ஏதும் அறியா சிறு வயது. என் வயதொத்த சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட ஏற்றார் போல் பெரியவர்கள் துணையில்லா அக்கணம் மகிழ்ச்சியையே தந்தது. பரிட்சயமில்லா உறவுகள். முதலில் பயம். ஏன் இந்த கூப்பாடு என்று. அம்மாவின் கண்ணீர் அமைதியா இருக்க சொல்லியது.

இரண்டாம் அறிமுகம் தாத்தா. என் துறு துறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாது எதற்கெடுத்தாலும் திட்டும் என் தாத்தா. விவரம் புரிந்த வயது. 2 நாட்களாக காத்திருந்த மரணம். மரணத்தை வரவேற்றுக் காத்திருந்தது விளங்காத இளம் மனசு. இடைவிடாது ஒலித்த தொலைப்பேசி அச்சுறுத்தியது. ஊரிலிருந்து வந்த அப்பாவின் கதறலில் அரைகுறையாக புரிந்தது.

மரணத்தின் பயம் புரிந்த வயதில் மூன்றாவது/நான்காவது/ஐந்தாவது மரணங்கள். மூவரும் மனதுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். மரணம் எப்படி அறிவிக்கப்பட்டது? திடீரென்று, ஒரு நடுநிசியில், சில்லென ஊடுருவும் பனிப்பொழுதில், தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும். தொலைப்பேசியின் ஒலியும், அதனூடே கொண்டுவரும் செய்தியும் இது தான் என மனம் நம்பத் துவங்குகிறது.

வார்த்தைப் பிரயோகத்திலே உள்ளும் புறமும் நடுங்க ஆரம்பிக்கிறது. மனதிற்கருகிலா பிறர் மரணத்தை கேட்கும் போதோ அது செய்தியாகி போய்கிறது. சுவடுகள் ஏதுமில்லா மரணமாகிப் போகிறது. சில மரணம் கேள்விகள் பிறப்பிடமாகிறது. சில மரணம் விலகி நின்று பார்க்க வைக்கிறது. சில மரணம் நம்மை சீண்டிப் பார்க்கிறது. புத்தகம் சொல்லும் ஏதும் உண்மையில்லாமல் போகிறது. வார்த்தைகள் ரசனையற்றதாக போகிறது. ஏன் மரணம் மட்டுமே பல முகம் கொண்டதாக தெரியப் படுகிறது?

மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. வாழ்க்கையின் சுவைதனை அறிந்த பின்னரும் மரணம் எதிர்கொள்ள முடியா எதிரியாகவே தெரிகிறது. நம்முடனே பிறந்து, நம்முடனேயே வளர்ந்து, கடேசியில் நம்மை முந்திக்கொள்கிறது மரணம்.

மரணமும், அது குறித்தான பயமும் ஏன்? அது அறியப்படாத இரகசியமாக இருப்பதாலா? நம்முள் இருந்து, நம்மை வெல்வதாலா? அதன் சுவையை உணர வேண்டினாலும், நம்மால் முடியாது போவதாலா? மரணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நம் மனம், மரணம், தன் மிச்சமாக, எதையாவது விட்டுச்செல்கிறது எனக் கொள்கிறது. மீளாத் துயரம், அழுகை, தன்னிரக்கம், ஏக்கங்கள், பிரிவுத் துயர், இன்ன பிற. மரணத்தை ஏற்கும் வரையில் தான் அதன் தொடர்ச்சியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதை மறுக்கிறது. அழுகையின் சுவடு ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போகிறது. மீளாத் துயர் மீளும் போது குற்றவுணர்வு ஆட்டிப் படைக்கிறது. தன்னிரக்கம் விலகும் போது தலை நிமிர்ந்து மரணத்தை பார்க்க முடிகிறது. ஏக்கங்கள் வேற்றுரு கொள்கிறது. ஆக மரணத்தின் சுவடுகளாய் சித்தரித்தவை யாவும் மரணத்தின் சுவடுகளே அல்ல என்றாகிறது.

மரணத்தை ருசிக்கும் எண்ணம் மெல்ல தலை தூக்க ஆரம்பிக்கிறது. அதன் மேல் ரசனையும், மாய சுழற்சியும் வந்து போகிறது. நெருக்கமானவர்களின் மரணத்தைக் கூட ஒட்டுதல் இல்லாது காண ஆயுத்தமாகிறது. மரணத்தை இரசிக்கும் வேளையில், மரணம் பிறப்புக்கு சமானமாகிறது. விகாரமாய் தெரிந்த மரணம் வியப்பான பிறப்பாகிறது. சுவடே இல்லாத பாதையாகிறது.


பின்குறிப்பு:
இக்கட்டுரை என் ஆருயிர் தோழிக்கும், அவள் போல மரணமடைந்த எல்லாருக்கும், இனி மரணிக்கப் போகும் எனக்கும் சமர்ப்பணம்.

26 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

//இக்கட்டுரை என் ஆருயிர் தோழிக்கும், அவள் போல மரணமடைந்த எல்லாருக்கும், இனி மரணிக்கப் போகும் எனக்கும் சமர்ப்பணம்.//

ஒவ்வொரு நொடியும் மரணத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கும் எனக்கும் சமர்ப்பணமாக எடுத்துக் கொள்கிறேன்...

//தன்னிரக்கம் விலகும் போது தலை நிமிர்ந்து மரணத்தை பார்க்க முடிகிறது.//

இந்த வரிகளை படித்தவுடன் அட என்று நிமிர்ந்து அமர்ந்து மரணத்தைப் பற்றிய புரிதலை இதற்குமேலும் உட்சென்று வெளிக்கொணர முடியுமா என்றிருந்தது.

அந்த கடைசி முடிவுப் பத்திகள் அழகாக வந்திருக்கிறது, ஆறு.

மரணம் ஒவ்வொரு பருவத்திலும், வளர்சி நிலையிலும் புதிய விசயங்களை விட்டுச் செல்ல தவறுவதில்லை... 8 வயது குழந்தைக்கு தன் பெற்றொர்களில் ஒருவரை இழக்கும் பொழுது விட்டுச் செல்லும் வடுவிற்கும், அதே குழந்தை வளர்ந்து 30 வயதிலிருக்கும் பொழுது அதே பொற்றொருடைய இழப்பை சந்திப்பதற்கும் வித்தியாசங்கள் இருப்பதனைப் போல - ஆனால், இந்த இரண்டாவது நிலையில் "மரணம்" புரிந்தும் எடுத்துக் கொள்ளலாம் நீங்கள் குறிப்பிட்ட அந்த கடைசி பத்தியில் இருந்த நிலையிலிருந்து, புரியாமல் வெறுப்பிலும் மரணத்தை எடுத்துச் செல்லலாம். ஆனால், என் நிலையில் அந்த பாராவில் சொன்ன நிலையிலிருந்து எடுத்துக் கொள்ள முடிந்தால் அதுவும் ஒரு அழகான(!?) நிகழ்வாக நம்மை கடந்து செல்வதை நாம் கண்ணுர முடியும் போல.

said...

//தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும்.///

என்ன சொல்லுறதுன்னே தெரியலைங்க..... நானும் இந்த நிலைமை அனுவிச்சிருக்கேன்..... :((((

said...

அருமையான பதிவு!

said...

ம்ம்..வரும்..வரும்..நான் அந்த வரிசையில் நிற்கிறேன்.

நல்ல பதிவு...

said...

மரணம் குறித்தான ஒரு தத்துவார்தமான பதிவு, எழுத்தாளர் சுஜாதா மறைவின் போது , இப்படி ஒரு தத்துவம் வருவது நல்ல ஒரு அஞ்சலியே, மரணம் வெல்ல முடியாத ஒரு சக்தி!

சுஜாதாவிற்கும் அஞ்சலிகள்!

பிரிதொரு முறை இதனைப்பற்றி விரிவாக பேசுகிறேன்(பயப்படாமல் இருந்தால்)

said...

காட்டாறு,

என்ன ஒரே தத்துவமா கொட்டிடீங்க? :)

//அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும்.//

இது நமக்கும் நடந்துருக்கு. நேரங் கெட்ட நேரத்துல அடிச்சுட்டு, சாரி நேரம் தெரியலென்னு சொல்லுவாங்க. எரிச்சலா இருக்கும்.


//மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. வாழ்க்கையின் சுவைதனை அறிந்த பின்னரும் மரணம் எதிர்கொள்ள முடியா எதிரியாகவே தெரிகிறது. நம்முடனே பிறந்து, நம்முடனேயே வளர்ந்து, கடேசியில் நம்மை முந்திக்கொள்கிறது மரணம்.//

நல்லா சொல்லியிருக்கீங்க... எனக்கு உங்க இந்தப் பதிவின் மூலமா, திரு.சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி சொல்வதுதான் பொருத்தமா இருக்கு!

said...

//நல்லா சொல்லியிருக்கீங்க... எனக்கு உங்க இந்தப் பதிவின் மூலமா, திரு.சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி சொல்வதுதான் பொருத்தமா இருக்கு!//

தஞ்சாவூரான் கூறியதனைப் போன்றே, இங்கே எழுத்தாளார் சுஜாதாவிற்கு நானும் மறைவு அஞ்சலி சொலுத்திக் கொள்கிறேன்... இங்குதான் பொருத்தம் .

said...

//திடீரென்று, ஒரு நடுநிசியில், சில்லென ஊடுருவும் பனிப்பொழுதில், தொலைபேசி அழைப்பில், வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் போதே மனசு பக்பக் என பதறும் போது. தொண்டைக் குழியில் போராட்டம் நடக்கும் போது. உரையாடலின் கரு புரியத் துவங்கும் போது, மனம் தன்நிலை கொள்ளாது பயணிக்க ஆரம்பிக்கிறது. அதன் பின் நடுநிசியில் தொலைப்பேசி ஒலித்தால் மனம் திடுக் திடுக்கென அதிரும். தொலைப்பேசியின் ஒலியும், அதனூடே கொண்டுவரும் செய்தியும் இது தான் என மனம் நம்பத் துவங்குகிறது.//

அனுபவித்திருக்கிறேன் இந்த வலி..

said...

'தந்தி' வந்திருக்குனாலே ஒரு பயம் வரும்! பெரும்பாலும் அது இழப்பின் செய்தியாய் இருக்கும் என்பதே.....

ம்ம்.. 'இந்த நேரத்தில்' பொருத்தமான .... ஓர் ஆறுதல் பதிவு...

பதிவிலுள்ள வார்த்தைகளின் வீச்சு...
வாவ்!

said...

//மரணம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதி என அறிந்திருந்தும், மரணத்தை வென்றுவிட ஆசை எல்லாருக்குமே இருக்கிறது//
இந்த கருத்தினை பெள‌தீக‌ அடிப்ப‌டையிலா அல்ல‌து ஆன்மீக‌ த‌த்துவ‌த்தின் அடிப்ப‌டையிலா அணுகுவ‌து என‌ முத‌ற்க‌ண் நினைத்தேன். அத‌ற்கு முன்னால் சாம‌ர்செட் மாஹ்ம் எனும் த‌த்துவ‌ அறிஞ‌ன் த‌ன‌து வாழ்க்கைச் ச‌ரித‌த்தில் ம‌ர‌ண‌த்தினைப் ப‌ற்றி கூறியிருப்ப‌து என்ன‌ என‌ நோக்குவோம். "Death is nothing but deprivation of senses and there is nothing terrible in not living."
புல‌ன்க‌ள் அட‌ங்குகின்ற‌ன். ம‌ன‌ம் அழிகிற‌து. பிராண‌ன் (இதை வெறும் life breadth
என‌ நினைக்காம‌ல் அத‌ற்கு மேல் ஒன்று ) உட‌லை விட்டு அக‌ல்கிற‌து. மாஹ்ம் சொல்கிறார்: இதில் ப‌ய‌ப்ப‌டுவ‌த‌ற்கு என்ன‌ இருக்கிற‌து என‌ ! இந்த‌ ப்ராண‌ன் உட‌லை விட்டு நீங்கிய‌பிற‌கு என்ன‌ ஆகிற‌து என‌ ஒரு விஞ்ஞான‌ ரீதியான‌ நிரூப‌ண‌ம் இல்லாதிருப்ப‌தால் தான் ப‌ய‌ம் என்று ஏற்ப‌டுகிற‌து. ப‌ய‌ம் என்ப‌து ஒரு உண‌ர்வு. அது ம‌ன‌ம் இருக்கும் வ‌ரை தான் இருக்க‌முடியும். ம‌ன‌ம் அழியும் நிலையிலே ப‌ய‌மும் அழிந்து போகும்.
ஆக‌, உயிர் வாழும்போதே இந்த‌ ம‌ன‌த்தினை அழித்து முடியுமா ? ஆன்மீகம் சொல்கிறது முடியும் என. "நான்" என்று எதை நான் நினைக்கிறேனோ அது " நான்" இல்லை. நான் நினைக்கும் " நானில் " உட‌ல் பிர‌தான‌ம். உண‌ர்வுக‌ள் பிர‌தான‌ம். ஆக‌வே உண‌ர்வுக‌ள் வாயிலாக‌ ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌ம் பிர‌தான‌ம். ம‌ன‌ம் அழிய‌வேண்டுமானால் ந‌ம்முடைய‌ " நான் " எனும் concept மாற‌வேண்டும்.
ஆக‌வே ர‌ம‌ண‌ர் கூறுவார்: நான் யார் ? எனும் கேள்வித‌னை கேட்டுக்கொண்டே இரு. உன‌க்கு க‌டைசியில் " நான் " என்ப‌து யார்? அல்ல‌து எது என்ப‌து புரி ந்து விடும்.

ஆக‌வே ஆன்மீக‌ம் ம‌ர‌ண‌த்தினை வென்றுவிட‌ ஆசைப்ப‌டுவ‌தை த‌வ‌று என‌ச்சொல்வ‌தில்லை. சொல்ல‌ப்போனால், ஆன்மீக‌த்தில் ம‌ர‌ண‌ம் என்ப‌தே ஒன்று இல்லை. த‌த் த்வ‌ம் அஸி எனும் வேத‌ப் பொருள் ப‌டி, அது நீயே தான் எனும்போது ம‌ர‌ண‌மேது. ம‌ர‌ண‌ம் என்ப‌து ஒரு பிர‌மை. மாயை.
(For better understanding, let me draw an analogy. When we shut down the computers where do all the documents we created go? Do you feel that they are dead ?They continue their existence.But you do not see them alive. The moment you boot your CPU draws the information you need. Now, this CPU is only a place. Likewise, for the prana (read Athma) the body is only a place to dwell so long as it is required. )
இதுவே இன்றைய மரபியல் விஞ்ஞான‌க் க‌ருத்துக்க‌ளூடே பாருங்க‌ள். நான் இருக்கிறேன். என‌து த‌ந்தை இறந்து விட்டார் என‌ச் சொல்கிறேன். ஆயினும் நான் யார்? அவ‌ருடைய‌ ஏதோ ஒரு அணுதானே என் தாயின் க‌ர்ப்ப‌த்தில் புகுந்து தாயால் சும‌க்க‌ப்ப‌ட்டு, நானானேன். ஆக‌, நான் இருக்கும் வ‌ரை, என்னுடைய‌ தோற்ற‌த்திற்குக் கார‌ண‌மான‌ க‌ரு என்னிடையே தொட‌ர்ந்து இர‌ட்டிப்பாய், ப‌ல‌ம‌ட‌ங்காய் ப‌ரிண‌மித்து இருக்கும்போது, என‌து தந்தை இற‌ந்து போனார் என‌ எப்ப‌டி சொல்வேன்? இந்த‌ லாஜிக் principle of deduction தொட‌ர்கையில், என‌து த‌ ந்தையும் இருக்கிறார், என‌து தாத்தாவும் கொள் தாத்தா எல்லாருமே இருக்கிறார்க‌ள். ம‌ர‌ண‌ம் எங்கே ?


ஆக‌, ம‌ர‌ண‌ம் என்ப‌து ஆன்மீக‌ப்ப‌டியும் ச‌ரி, பெள‌தீக‌ப் ப‌டியும் சரி, இல்லை. ஆத்மா என ஒன்று இருக்கிற‌து. அது தொட‌ர்ந்து கொண்டே இருக்கிற‌து. நாம் அதை வெவ்வேறாக‌ பல உருவங்களில்
கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் காண்கிறோம். Let me conclude that your friend is not dead. Never will she be. She is alive. When you believe in this you can dare face DEATH with all your might.

ம‌ர‌ண‌ம் உட‌லுக்குத்தான். ஆத்மாவுக்கு அல்ல‌.வெல்ல‌முடியும். உட‌ல் ம‌ர‌ண‌த்தை அல்ல‌. ம‌ர‌ண‌ ப‌ய‌த்தினை.
அதைத்தான் ம்ருத்ய‌ஞ்ஜ‌ய‌ம் என்கிறார்க‌ள்.


//மரணத்தை இரசிக்கும் வேளையில், மரணம் பிறப்புக்கு சமானமாகிறது//

ஆதி ச‌ங்க‌ர‌ர் இதை வேறு வித‌மாக‌ச் சொல்கிறார். அவ்வ‌ள‌வே.

புன‌ர‌பி ஜ‌ன‌ன‌ம் புன‌ர‌பி ம‌ர‌ண‌ம், புன‌ர‌பி ஜ‌ன‌னி ஜ‌ட‌ரே ச‌ய‌ன‌ம். அம்மாவின் வயிற்றிலே மறுபடியும் நான் பிறக்கவேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்பொழுது மரணத்தினை எதிர்கொண்டால் தானே, ரசித்தால் தானே, மறுபடியும் அன்னை வயிற்றில் பிறக்கமுடியும்?
இதெல்லாம் ச‌ரி.
"மிச்சமிருந்த ஆசைகள்" பற்றி எழுதிய உடன் மரணம் பற்றிய பதிவா? அற்புதம் தான். ரொம்பவே போர் அடித்து விட்டேன். பூர்வாஸ்ரம ப்ரொபஸர் பழக்கம் 7 ஆண்டுகளாகியும் என்னை விடமாட்டேன் என்கிறது.ஆசிகள்.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.‌

said...

காட்டாறு அம்மா ! நான் தான் மீனாட்சி பாட்டி.
எங்காத்துக்காரர் மாதிரி வளா வளான்னு போர் அடிக்கமாட்டேன்.
மனுஷன் என்னை போரடித்தே உயிரெடுத்துக் கொண்டிருக்கிறார்.
நான் ஒரே வார்த்தையிலே சொல்லிவிடுவேன்.
தேகம் அனித்தியம். மரணம் நிச்சயம். சிவனை மறவாதிரு மனமே.
எதற்கும் புதுச்சேரி அரவிந்தர் மரணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று
ஒரு அஞ்சு நிமிஷம் உன்னிப்பா படிச்சா நல்லது.
http://www.sriaurobindosociety.org.in/qstarch/qstnov99.htm

மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.

said...

// Thekkikattan|தெகா said...
மரணம் ஒவ்வொரு பருவத்திலும், வளர்சி நிலையிலும் புதிய விசயங்களை விட்டுச் செல்ல தவறுவதில்லை//

ஒவ்வொரு வளர்ச்சிக்கும் பி(மு)ன் மரணம் இருக்கிறதே. ஒரு விதை அழிந்தால் தானே செடி.

said...

// இராம்/Raam said...
என்ன சொல்லுறதுன்னே தெரியலைங்க..... நானும் இந்த நிலைமை அனுவிச்சிருக்கேன்..... :((((
//

இராம், சோகம் வேண்டாம். இதையெல்லாம் விட்டு வெளியே வரணும் என்பதற்கே இந்த பதிவு.

said...

கப்பி, கோபி, பாராட்டுக்கு நன்றி. உணர்ந்து தெளிய வேண்டும் என்பதே என் நோக்கம்.

said...

நிறைய சிந்தனைகளை கிளறிய பதிவு...

என் வரையில் மரணத்தை ஒரு நினைவூட்டலாகவே பார்கிறேன்...மரணத்தை தள்ளிப் போடவும், தப்பிக்கவுமே வாழ்கிற வாழ்க்கையில் எனக்கு உடன்பாடில்லை....

மரணம் கடைசி தளமாய் இருக்கலாம்...அதற்கு முன்னர் நான் பிரவேசிக்க வேண்டிய தளங்கள் நிறையவே இருப்பதாக நினைக்கிறேன்.....

நிறைய எழுத ஆசைதான்...பின்னர் எழுதுகிறேன்...

said...

// வவ்வால் said...
பிரிதொரு முறை இதனைப்பற்றி விரிவாக பேசுகிறேன்(பயப்படாமல் இருந்தால்)

//

கண்டிப்பா பேசுங்க வவ்வால். பயமெல்லாம் நமக்கு கிடையாதுங்கோ. எந்நிமிஷமும் ரெடி தான்.

கையேடுன்னு ஒருத்தர் தொடரா இறப்பு குறித்து அறிவியல் ரீதியா எழுதியிருந்தாரு. நீங்க வாசித்திருக்கலாம். லிங்க் தேடுகிறேன்.

said...

// தஞ்சாவூரான் said...
காட்டாறு,

என்ன ஒரே தத்துவமா கொட்டிடீங்க? :)
//

தத்துவமா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. என் மனதில் உணர்ந்த அனுபவத்தை தான் எழுதினேன்.

//நல்லா சொல்லியிருக்கீங்க... எனக்கு உங்க இந்தப் பதிவின் மூலமா, திரு.சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி சொல்வதுதான் பொருத்தமா இருக்கு!
//
அஞ்சலின்னு சொல்லும் போது வார்த்தையில் அது காணாமல் போய்விடும். அஞ்சலி நம் மனதுள் இருந்தால் போதுமே. அன்று முழுவதும் அவர் நினைவில், அவர் குடும்பத்தார் நினைவில் இருந்தாலே, அந்த பாஸிடிவ் எனர்ஜி அவரின் குடும்பத்தாருக்கு உதவுமே.

said...

//என் மனதில் உணர்ந்த அனுபவத்தை தான் எழுதினேன்.//

உணர்ந்த உண்மையை
எடுத்துச் சொன்ன எழுத்துக்களிலே
எத்துணை வலிமை !
எத்துணை மென்மை !

சிவ.சூ. நா.
தஞ்சை.
கதிரவன் நாளன்று வருக‌
http://arthamullaValaipathivugal.blogspot.com

said...

Kindly verify whether this is the link u r searching for .

www.deathclock.com

thatha
thanjavi

said...

// பாச மலர் said...

அனுபவித்திருக்கிறேன் இந்த வலி..
//

ம்ம்ம்... மலர், வலியின் கொடுமை அனுபவித்தவர்களுக்கு தெரியும். அதிலிருந்தும் மீள முடியும் என்பதற்கு நானும் ஒரு எடுத்துக்காட்டு.

said...

// தென்றல் said...
ம்ம்.. 'இந்த நேரத்தில்' பொருத்தமான .... ஓர் ஆறுதல் பதிவு...

பதிவிலுள்ள வார்த்தைகளின் வீச்சு...
வாவ்!
//

தென்றல், என் வார்த்தைகள் உங்கள் மனதுக்கு ஆறுதல் அளித்தால்.. நன்று!

வார்த்தைகள்.... ம்ம்... அனுபவித்து எழுதும் போது பல சமயங்களில் வார்த்தைகளில் ஜாலங்கள் நம்மையும் அறியாமல் குடி கொண்டுவிடுகின்றன. நோக்கம் ஏதுமின்றி, பேச்சுக்களத்தை மனதில் கொண்டு, ஒருமித்த மனதாய் எழுதும் போது அருவி போல் கொட்டும். அது தான் நடந்தது.

said...

வவ்வால், இதோ நான் சொன்ன பதிவின் லிங்க்
http://kaiyedu.blogspot.com/2008/02/i.html
http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html
http://kaiyedu.blogspot.com/2008/02/iii.html

said...

வரிசையில் எல்லோருமே நிற்கிறோம். வார்த்தைகளில் எழுத முடியாத சொல்லவியலாத மௌனத்தை தாங்கிக்கொண்டு..

உங்களின் பதிவுகளில் மிகச்சிறப்பான ஒன்றென்று எல்லோரும் இனி இதை(யும்) கூறுவர்.

பதிவும் பின்னூட்டங்களும் அருமை.

said...

//உங்களின் பதிவுகளில் மிகச்சிறப்பான ஒன்றென்று எல்லோரும் இனி இதை(யும்) கூறுவர்.

பதிவும் பின்னூட்டங்களும் அருமை.//

இந்தப் பதிவுக்கான பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ள
இடம்
http://arthamullaValaipathivugal.blogspot.com
காட்டாறு மற்றும் அவருடைய நண்பர் குழாம் சூழ‌
வந்து பாராட்டு விழாவில் பங்கெடுக்கவேண்டும்.
Pl browse to posting on 29th March 2008
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

Browse posting on 29th Feb.2008

said...

ஆத்தா நான் இப்பத்தான் ஓஞ்சே நீங்களுமா?நானும் சொல்ல ஆரம்பிச்சா....ஓ நோ வேண்டாம்...நிகழ்காலத்தை வாழ்வோம்

போகட்டும் புது தொடர் விளையாட்டு வா ஆத்தா
http://kouthami.blogspot.com/2008/03/blog-post_04.html