என் நண்பனிடமிருந்து ஈமெயில். 82 வயதான மூதாட்டியார் தில்லி மாநகரில் கற்பழிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, 2 நாளில் இறந்து போனார். இது 2 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இது கேட்டதும் என் கண்களில் நீர். மனதில் குடைச்சல். நாம் மனிதர்கள் தானா? ஆறறிவு படைத்தவர்கள் தானா? வேலை செய்ய மனமில்லாமல், வீட்டுக்குள் ஓடி ஒளிந்தேன். என்ன ஆச்சி நம்ம மக்களுக்கு? ஏனிந்த புத்தி பேதலிப்பு? மூதாட்டியாரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்? கேள்வி மேல் கேள்வி. மன உளச்சல்.
என் கண்முன் பற்பல காட்சிகள் வந்து போகின்றன. பல வருடங்களுக்கு முன் நடந்த கதையிது. ஆந்திராவில் நடந்தது இது. அங்கு கொத்தடிமை என்பது சர்வ சாதரணம். பல கிராமங்களில் பெண்களின் நிலை ஆண்களால் (தகப்பன் - மகள், தனையன் - தங்கை என்ற பாகுபாடின்றி) எச்சூழ்நிலையில், எவ்வாறெல்லாம் சூறாடப்படுகிறது என்பது பற்றியும், அதை ஒரு பொருட்டாக கருதாத அம்மக்கள் பற்றியும் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. நான் பணி செய்த இடத்தில், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, எங்களை குழுக்களாக பிரித்து, பெண்களிடன் பேசி, அவர்களின் மன புழுக்கத்தை வெளிக் கொணரவும், தற்காப்பு முறைகள் பற்றி விளக்கவும் அனுப்பினார்கள். அவர்கள் சொன்னவையாவும் பதிவில் இடமுடியாதவை. ஆனால் 82 வயது பாட்டியின் செய்தி, இந்த கிராமத்து நிலையை என் கண்முன் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அப்போது இருந்த என் உள்ள வெளிப்பாடு தான் இந்த கிறுக்கல்கள்.
சமீபத்தில் என் நண்பன் 2 வயது பச்சிளம் குழந்தையை தகப்பனே கற்பழித்த கொடுமையை கூறினான். மற்றுமொரு நண்பனிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில், நான் அன்று (பல வருடங்களுக்கு முன்) எழுதிய மனக் குமுறலை பதிவில் எழுதும் படி பல முறை வேண்டிக் கொண்டான். அந்நண்பன் தூண்டுதலால், இன்று அவனுக்காக இப்பதிவு…… முடிந்தால் வாசிக்கவும்.
=============================================
பெண்ணின் நிலை
அழுத்திப் பிடித்து கண்ணத்தில்
முத்தம் தருவார் அடுத்த வீட்டு அண்ணா
கழுத்து துவங்கி புட்டம் வரைத் தடவி
தன் அன்பை தெரிவிப்பார் சித்தப்பா
எப்போதும் மடியிருத்தி
அணைத்துக் கொள்வார் மாமா
அடி பம்பு தண்ணியில் குளிக்கும் சாக்கில்
இடுப்புத் துணி நழுவ விடுவார் தோழியின் தந்தை
பேச்சின் நடுவில் உதட்டின் குவியலை குறிவைப்பார்
புதிதாய் திருமணமான பக்கத்து வீட்டு அக்காளின் கணவன்
முலை தடவுவதில் முன்னுரிமை
கொடுப்பார் பக்கத்து வீட்டு தாத்தா
சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அக்குளுடன்
முலையழுத்தி இறக்கி விடுவார் ரிக்ஷாக்காரர்
இருட்டின் வெளிச்சத்தில் சன்னலோரம்
தூக்கி நிலா காண்பிப்பார் டியூசன் வாத்தியார்
இயலாத நிலையிலும்
யோனி கிழிக்க முற்படுவார் மருத்துவர்
நிலைப் படியில் பயணிப்பினும்
புட்டம் பிடிப்பர் இடி மன்னர்கள்
வேலையின் நடுவில் மார் நடுவை
அளவெடுப்பார் மானேஜர்
இது இன்றும் என்றும் தொடர் கதை
இந்த மண்ணில் பிறந்த பெண்ணின் நிலை
ஆம்! இம்மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்ய வேண்டும்!!!!
-- காட்டாறு