Friday, December 21, 2007

ரெடி 1, 2, .... 22

2007 முடிவடைகிறது

ஆவலுடன் வரவேற்போம் 2008

இடையூறுகள் வரலாம்

தடைகள் பல சந்திக்க நேரிடலாம்

விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்வோம்

வழிகாட்டியாய் வாழ்வோம்

தடைகளை தாண்டும் தைரியம் பெறுவோம்

கவனமாய் அடியெடுத்து வைப்போம்

முன்னெச்சரிக்கையுடன் செயல் படுவோம்

சவால்களை துணிவுடன் எதிர்கொள்வோம்

சிரித்து மகிழ்வோம்

ஒற்றுமையுடன் வாழ்வோம்

புதியன கண்டுபிடிப்போம்

புது நட்பு கொள்வோம்

திட்டம் தீட்டி செயலாற்றுவோம்

ஒற்றுமையாய் வாழ்வோம்

வீர தீர செயல்கள் பல புரிவோம்

மென்மேலும் உயர்வோம்

கனவுகள் பல காண்போம்

இயற்கையை நேசிப்போம்

ஓய்விற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்

ஒருவரை ஒருவர் அன்பு செய்வோம்
அன்பே சிவம்!
புதிய வருடத்தில் உடல், உள நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
காட்டாறு

Thursday, December 20, 2007

வாருங்கள் வாழ்த்துவோம் மங்கையை!

நம் எல்லோருக்கும் மங்கை செய்து வரும் சேவை பற்றி தெரியும். உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளை (டிசெம்பர் 1 -- http://manggai.blogspot.com/2007/11/blog-post_30.html) ஒட்டி பல விழிப்புணர்வு கூட்டங்கள்/மாநாடு/இயக்கம் நடத்தினார். அவர் தில்லியில் வெற்றிகரமாக நடத்திய ஒரு கூட்டம் குறித்து பெருமையடைந்த UNICEF, அவருக்கு புதிய ப்ராஜெட் செய்ய அனுமதி கொடுத்ததை ஒட்டி, இந்த வாரம் தில்லியிலிருந்து கோயம்புத்தூர் பயணமானார். அங்கிருந்து எனக்கெழுதிய இ-மடலில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்தியா முழுவதிலிருந்தும் 400 பேர் பங்கேற்ற இந்த ப்ரோகிராம் நல்ல படியாக முடிந்தது என்றும், இறுதியில் அவருக்கு UNICEF-லிருந்து BEST IMPLEMENTER and ORGANIZER அவார்டும், சாந்தி ஆசிரமத்திலிருந்து மகிளசேவகி சிறப்பு அவார்டும் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.


நம்மிடையே வலம் வரும் ஒருவருக்கு கிடைத்த இந்த பெருமை நமக்கும் பெருமையே. மங்கையே தாங்கள் செய்யும் சேவைக்கு தலை வணங்குகிறோம். நீவீர் மென்மேலும் வளர, தங்களுக்கு உளநலனும், உடல் நலனும் கொடுக்க பிராத்திக்கிறோம்.
வாருங்கள் வாழ்த்தலாம் மங்கையை!

பின்குறிப்பு:
எனக்கு இந்த ப்ரோகிராம் பற்றி விரிவாக தெரியாததால், மங்கை பயணம் முடித்து திரும்பியதும் விரிவாக பதிவொன்று எழுதுவார் என நம்புவோம்.

Sunday, December 16, 2007

கண்டுபிடிங்க பார்க்கலாம்

எங்கள் ஊரில் இது பனிக்காலம். இன்னக்கி கூட அரை அடிக்கு பனி பெய்துள்ளது. இந்த காலங்களில் பூக்கள் பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். அதனால கஜானா போய், ஆயிரக்கணக்கான புகைப்படங்களுக்குள் புகுந்து, ஒரு அலசல் அலசி, வெளி வந்து பாத்தா..... லேட்டாச்சின்னு சொல்லிட்டாங்க. :-) ஆனாலும் பதிவிடாம விட முடியுமா? அதனால உங்களுக்காக இங்கே கொஞ்சம் பூக்கள். அதோட உங்களுக்கு ஒரு போட்டியும். இங்கிருப்பவை என்ன பூவென்று கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள். ;-)

படம் 1:




படம் 2:


படம் 3:



படம் 4:


படம் 5:


படம் 6:



படம் 7:



படம் 8:


படம் 9:


படம் 10:

Tuesday, December 11, 2007

தாயுமானவள்


நீயும் என் அன்னையே

உன்னை கண்ட இன்று
காலவேந்தன் பின்னோக்கி இழுத்துச் செல்ல
மெல்ல விரிந்து மனதில் தங்கிய காட்சி
உள்ளம் தான் எத்துணை ஆரவாரிக்கிறது

அரைக்கால் டவுசருடன் நான் திரிந்த அந்த அருமையான நாட்கள். கால் இறுதி விடுமுறை என்னை கூத்தாட வைக்க, தலைதெறிக்க வீடு சென்று, புத்தக மூட்டைதனை தூக்கியெறிந்து, கால் தரை படாது ஓடிய அக்கணம், இரு கரங்கள் எனை இழுத்தணைத்தது. உனைக் கண்டதும் விரைந்து ஓடத் துவங்க, விரட்டி விரட்டி எனைத் தொடர்ந்து, வெட்க மிகு, என் தாயின் முந்தானை தேட, கேலியுடன் தான் அவள் மிருதுவாக எனை அணைக்க, பெரியவனாக நான் தள்ளிவிட்டேன் அவளை. அவள் வரவெண்ணி களித்திருந்த போதிடினும், அவள் வந்ததும் ஓரக்கண் பார்வையாய் நான். நான் என் சகஜ நிலைக்கு வர, அவள் செய்த குறும்புகள், என்னையும் அறியாமல் சிரிக்கிறேன் இன்று.

பாட்டி தான் அவள் தன் பக்கம் இழுத்து, தலை நிறைய எண்ணெய் கொட்டிவிட, அவள் முகம் போன போக்கு. அப்பப்பா… காண கண் கோடி வேண்டும். என் சிரிப்பு அவளை வெறுப்பேற்ற, குமுறினாள் தன் தாயிடம். தாழம்பூ வைத்து பின்னலிட்ட அவள் ஜடை, என் கைவசம் சிக்கித் தவிக்க வைக்கும் என் குறும்பு.



காட்டுப் புலியென்றும், கிணற்றுக்குள் பேயென்றும் கதை சொல்லி கிடுகிடுக்க வைப்பாள். பயந்து நான் அலறவே, தட்டிக் கொடுத்து உறங்க வைப்பாள்; கால் போன போக்கிலே, காட்டெருமை கதை பேசி கை பிடித்தே நடந்திடுவாள்; பால் சோறு ஊட்டிடுவாள். யாரும் அறியா வண்ணம் ஒரு கவளம் உண்டிடுவாள்.


கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது.

மாப்பிள்ளை என்றனர். நாணி கவிழ்ந்த அவளை கேலி செய்தனர். புதியதாய் அவள் எனக்கு. திருமணம் முடிந்தது, புதியனளாய் அவள். நடையில் துள்ளல் இல்லை, வார்த்தையில் கேலி இல்லை. என்னை இழுத்து அணைப்பாளும் இல்லை. காலம் தான் மாறிப் போனது.

கேலி செய்யும் பருவம் எனதானது. கேட்டு மகிழும் பருவம் அவளானது. நாம் கேட்காமலே மாறிப்போனது எப்போது? காளையாய் நான். கல்லூரி கதை சொல்ல, புதிதாய் கேட்பாள்; எத்தனை முறை கேட்டிருப்பினும், வாய் விட்டு சிரிப்பாள் முதல் முறை கேட்பவள் போல். அவள் சிரிக்கவே பல பொய் கதைகள் உருவான காலமும் உண்டு. பொய்யென அறிந்தும், மெய்யென கனிவுடன் கேட்பாள். கதை கதையாய் நான் அளந்துவிட, கொல்லென சிரித்து, கண்ணீர் துடைப்பாள். அவளை சிரிக்க வைப்பதில் எனக்கின்பம்.

மறைத்து வைத்து காசு கொடுப்பாள். மறுத்திடின் முறைத்திடுவாள். வளரும் பிள்ளை என்பாள்; வளர்ந்த பிள்ளையென அறிந்திடினும். அவள் வீட்டு அவலம் மறைத்து, கவள உருண்டை என் வாயில் திணிப்பாள்.


என் ஆசைகளும், கனவுகளும் அவளறிவாள். அவளுள் புதைந்த ஆசைகள் என்னவோ? கனவுகள் என்ன ஆனதோ? நானும் கேட்டதில்லை; அவளும் சொன்னதில்லை. அவளுக்கென கனவுகள் இல்லாமலா இருந்திருக்கும்?

பதின்ம மாத குழந்தையின் த்தைக்கு கொண்டாடியவள்
பத்து வயதில் விரட்டி ஓடி மகிழ்ந்தவள்
பதினைந்து வயதில் சரிக்கு சரி வாதிட்டவள்
பதினெட்டு வயதில் தோழியானவள்
என்றென்றும் என் தாயும் ஆனவள்
எனதருமை அத்தையம்மா!
இன்று உன்னைக் கண்டதும், என்னை பெற்ற அன்னையை கண்ட மகிழ்ச்சி; தோழியை கண்டெடுத்த துள்ளல். எனதருமை அத்தையே, நீயும் என் அன்னைதான் என்பதை உன்னால் மறக்கவோ, மறுக்கவோ முடியுமோ?

அன்புடன்,
என் செல்ல அத்தையின்
உன் செல்ல மருமகன்.

Sunday, December 09, 2007

அவனுக்கு தெரியும்… இவனுக்கு தெரியுமா?

இரு தினங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. நடந்தது காலை 7 மணியளவில். இந்நாட்டில் அதிகாலையில் வேலை செல்வோர் அதிகம். வங்கியை கொள்ளையடித்து விட்டு, போலீஸில் மாட்டிக் கொண்டவன், தன் காரில் ஓட்டமெடுக்க…… அவனை விரட்டினர் காவலர்கள். போலீஸில் மாட்டிக் கொண்டால் என்னாவது என்ற பயத்தில், நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையின் எதிர் திசையில் புகுந்தான் நம் கதாநாயகன் கள்வன். 70 மைல் வேகம் செல்லும் அந்நெடுஞ்சாலையில், மக்கள் சர்வ சாதாரணமாக 80களில் செல்வர். எதிரே யாரும் வரமாட்டர்கள் எனத் தெரிந்ததால், பின் வரும் கார்களின் வேகத்தோடும், முன் செல்லும் கார்களின் ப்ரேக்கிங், லேன் மாற்றுதல் முதலியவற்றில் மாத்திரம் கவனம் கொண்டு செல்வது நடைமுறை.

நம் கதாநாயக கள்வனோ, போலீஸின் அதிரெடி சேஸிலிருந்து தப்பிக்க, தவறுதலாக எதிர்திசை புகுந்ததும் அவனுக்கு தெரிந்திருக்கும், தான் பிழைக்க சாத்தியமில்லை என. என்ன கொடுமையடா இது…. காலையில் மனைவி மக்களிடம் சொல்லிக் கொண்டு, மாலை வரும் போது கடைகண்ணிக்கு போய் வருவேன் என சொல்லி சென்றவன்… தனக்கு நேர் எதிர் வந்த கள்வனின் நோக்கம் அறியாது, என்ன செய்வது என்றும் அறியாது, நிலைகுலைந்து, எதிர் மோதி, இருவரும் அத்தலத்திலே இறந்தனர். இது தான் செய்தி.

எதிர்திசையில் நுழைந்ததால் கள்வனுக்கு தெரியும் தான் இறந்துவிடுவோம் என்று. ஆனால், இம்மனிதனுக்குத் தெரியுமா இன்று நாம் இறக்கடிக்கப் படுவோம் என்று? செய்தியில் காண்பிக்கும் போது…. அந்த இரு கார்களின் நிலையும், அம்மனிதன் பின் வந்த மற்ற கார்களின் நிலையும் மனதை கசக்கிப் பிழிவதாய் இருந்தது.

Tuesday, December 04, 2007

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்பு

வாய்க்கா வரப்போரம்
தனிச்சி நின்னு நான் பாடவே
தலைசாச்ச நாத்தோட
காத்தும் வந்து விளையாடுதே

காத்திலாடும் கிளைமேலே
சல சலக்கும் இலையினூடே
வள மூக்குப் பச்சக் கிளி
கெஞ்சலாய் கொஞ்சுதே

பச்ச மண்ணு அது மேல
குமரிகள் நாத்தாங்கால் நட
கையிசையின் தாளமாய்
வரிசை வனப்பூட்டுதே

மரத்தசைவு சுகத்தினிலே
பச்சப் புள்ள கண்ணுறங்க
அம்மையின் துணையின்றி
காத்து வந்து தூளியாட்டுதே

ஓடிவரும் தண்ணீரு
தேங்கி நிக்கும்-அதனுள்ளே
ஆமக்குட்டி நீந்த
குட்டித் தவள கொட்டமடிக்குதே

கருக் கொண்ட சோளக் கதிரு
குமுஞ்சி நிக்கும் தன்னாலே
ராத்தூகம் போயி
வெடித்து சிதற நேரம் பாக்குதே

ஆத்தாங்கரையோரம்
வளர்ந்திருக்கும் புல்வெளில
ஆட்டுக்குட்டி தன்னோட
கன்னுக்குட்டியும் ஆட்டம் போடுதே


-- காட்டாறு