அன்பின் மாதம் ஆரம்பம்
பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியை காதலர் தினமின்னு சொன்னாலும் சொன்னாங்க எந்த கடைக்குப் போனாலும் சிவப்பு கலரில் விதவிதமான பொம்மைகளும், இதயமும் தான். கடந்த வருடம் என்னோட அமெரிக்க நண்பர்களிடம் இது குறித்து விவாதித்த போது அவங்க சொன்னது என்னான்னா... இந்த தினத்தில் நம் அன்பை (காதலை மட்டுமல்லாது) நம் பெற்றோருக்கும், தோழ தோழிகளுக்கும். சகோதர சகோதிரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளலாம். காதலர் மட்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு. அப்படியா? அன்பை பரிமாற தனியாக ஒரு தினம் வேண்டுமா? சொல்லுங்க மக்களே. இந்த கேள்விக்கும், இந்த பதிவிற்கும், இந்த தலைப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. எனினும், ஒருவரை ஒருவர் அன்பு செய்து இந்த அன்பின் மாதத்திலும் வாழ்வோம்.
இப்போ கதைக்கு வருவோம். பறவைகளை கவனிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச பொழுது போக்கு. காலைல எழுந்ததும் கீச் கீச் கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும் பாருங்க. அனுபவிச்சவங்களுக்கு நான் சொல்லுறது புரியும். (நானெல்லாம் இந்த கீச் கீச் கேட்டுட்டே அடுத்த ரவுண்டு தூங்கிருவேன். உண்மையை சொல்லிட்டேனப்பா). பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதமின்னு பாட்டு கேட்டிருக்கிறோம். அது எத்தனை உண்மைன்னு அவங்களை உன்னிப்பா கவனிச்சா புரியும். அவைகள் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம். கலர் கலரா, வித விதமான சைஸ், ஷேப்களில், கூக் கூக் சத்தங்களிலும் வித விதமாய். அப்பப்பா... தூரமா இருந்து பார்க்கும் போது அவைகளும் நம்மை கவனிக்காத மாதிரி இருக்கும். அவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஒருவித காப்புணர்ச்சியுடன் இருப்பது தெரியும். பக்கத்தில் போனா என்ன ஆகுமின்னு நான் சொல்ல வேண்டியதில்லை.
ராபின்ன்னு ஒரு பறவை நம்மூரு ஊர்க்குருவி மாதிரி ஆனா கொஞ்சம் பெருசா இருக்கும். சிறு தானிய வகைகள் கொடுத்தால் தினம் நம் வீட்டின் முன் ஆஜர் ஆகி விடும். அதே பறவை தான் தினம் வருமான்னு எனக்கு தெரியாது. ஆனா அவற்றை பார்க்கும் போது உற்சாகம் வருவது உண்மை.
ஸ்டார்லிங்-ன்னு ஒரு பறவை. பெரும் கூட்டமா தான் இருக்கும். சர் சர்ன்னு எங்கேயோ திரும்பி 2 முறை பறந்துவிட்டு அப்புறமா வேறு திசையில் பறந்து போயே போயிரும். எதுக்காக அப்படி செய்துன்னு எனக்கு புரியல. காத்திருந்து பார்ப்பவர்களை ஏமாற்றுகிறதோ?
கார்டினல் பத்தி பேசலைன்னா இந்த பதிவு முழுமை பெறாது. அவ்ளோ அழகு. அருமையான குரல். இது தான் தினமும் என்னை எழுப்பும் அலாரம்.
பறவைகள் பத்தி பேசினா பேசிக் கொண்டே போகலாம். அதனால இதோ உங்கள் பார்வைக்காக சிறு விடியோ.