Friday, March 30, 2007

இரயில் பயணம்

வலைப்பதிவில், சென்னை பறக்கும்/மின்சார இரயிலில் வேலைக்கு செல்பவர் எத்தனை பேர் உள்ளனர்? இது சுமார் 13 வருடங்களுக்கு முன் நான் எழுதியது. இப்போது சென்னை வெகுவாக மாறியுள்ளது. இக்காலகட்டத்தில் நான் 13 வருடத்திற்கு முன் உணர்ந்து எழுதிய என் கருத்து இன்று மாறிவிட்டதா என்று அறிய இவ்வருட துவக்கத்தில் ஒரு முறை சென்னையில் இரயில் பயணம் மேற்கொண்டேன். மாற்றம் எதுவும் இருந்ததாக எனக்குப் படவில்லை. ஒரு முறை சென்றதை கொண்டு இன்றும் அப்படித்தான் என்று கூறுவது சரியில்லை என்று பட்டது. எனவே, உங்கள் முன் இக்கவிதையை வைக்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் கூறவும்.


இரயில் பயணம்
தயிர் சாத சட்டியுடன் கொளுத்து வேலைக் கும்பல்
கேலியும் கூத்துமாய் ஒரு நோட்டை கையில் சுழற்சியவாறு கல்லூரிக் கும்பல்
புத்தக சுமையோடு சந்தாஷ சிரிப்புடன் சிறுவர் சிறுமியர் கும்பல்
முண்டியடித்து இடம் கிடைத்த நிறைவுடன் அலுவலகக் கும்பல்
இடம் கிடைக்காத எரிச்சலுடன் ஒரு கும்பல்
--
வயதானவர்கள் வர எழுந்து இடம் கொடுக்கும் தியாக செம்மல்கள்
தன் குறை மறந்து ஜோடியாக பாடி வரும் கவிக்குயில்கள்
எக்காள சிரிப்புடன் இடி மன்னர்கள் ஒரு புறம்
இத்தனை நெருக்கடியிலும்
சுரண்டுவதே தொழிலாய் கொண்ட வக்ர புத்திக்காரர் ஒரு புறம்
--
அவரவர் இடம் வர விசுக்கென்று இறங்கும் மனிதர்கள்
அவசர கதியில் இயங்கும் நம் வாழ்வு
அலுவல் நோக்கி தினம் தினம் பயணம்
இலக்கின்றி நகரும் நம் வாழ்வில்
விலகி நிற்கும் மனித நேயம்
--
தோழமையுமின்றி பகைமையுமின்றி
சிறு புன்னகையுடன் நகரும்
நெருடல் இரயில் பயணம் நன் இன்றைய வாழ்க்கை!
-- காட்டாறு

Wednesday, March 28, 2007

தலைப்பு செய்தி: பூனைகளின் ஆர்ப்பாட்டம். துளசி டீச்சர் திண்டாட்டம்


முன்குறிப்பு:
காட்டாற்றுக்கும் இந்த பூனைகளின் நடுவுலைமைத்தவறா எண்ணங்களுக்கும் சம்பந்தம் இல்லை.



வீட்டுல பம்முது பூனைக்குட்டி!

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா


கண்டேனே கண்டேனே
வீட்டு பரணுல பம்முறதக் கண்டேனே
வயசான பூனை ஒன்னு
அதன் பின் குட்டி ஒன்னு

செல்வங்களே வாங்க
காரணம் சொல்லிப் போங்க
பரண் கோழைக்கு சொந்தம்
வீறு கொண்டு வாங்க

தமிழ்மணத்துல
மியாவ் மியாவ்
துளசி டீச்சர் ஒருவர்
மியாவ் மியாவ்

பூனைக்கு பாடம் சொல்ல
மியாவ் மியாவ்
கேட்டேன் நானும்
மியாவ் மியாவ்

வயசான காலத்துல
மியாவ் மியாவ்
எனக்கெதுக்கு டீச்சர்
மியாவ் மியாவ்

போதும் இந்த டார்ச்சர்
மியாவ் மியாவ்
துளசி டீச்சருக்கு மணி கட்டுறது யாரு
மியாவ் மியாவ்

கண்டீரா கண்டீரா
பூனை ஒன்னு கண்டீரா
எங்க போனது கண்டீரா
செல்லமா வளர்ந்தது கண்டீரா

கண்டேனே கண்டேனே
கூட்டமா போறத கண்டேனே
நாட்டாம பண்றத கண்டேனே
மணியுடன் பூனைக்குட்டி ஒன்னு
எடுப்பா நிக்கிறத கண்டேனே!

Tuesday, March 27, 2007

எட்டிப்பார்க்கலாம்.... தப்பில்லை.... விளைவுகளுக்கு பொறுப்பு நீங்களே

நெஞ்சில் உரமிருந்தால் ....... தொடரவும். விளைவுகளுக்கு நீங்க... நீங்க.... நீங்க மட்டுந்தேன் பொறுப்பு.

பொன்ஸ் அவர்களுக்கு, மகளிர் சக்தியிலிருந்து நீக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துட்டு மேலே வாசிக்கவும்.
அபி அப்பா, சேதுக்கரசி, மை பிரண்டு சரவணன், கோபிநாத், தம்பி, சென்ஷி, கண்மணி யக்கோவ் (காட்டு மாட்டுத்தனமா திட்டிடீகல்ல...... கா வுடாதீக.... கு.ச்சுப்ரமணிக்கு புஸ்கோத்து வாங்கி அனுப்புறேன்), முத்துலெட்சுமி யக்கோவ் (கா வுடாதீக.... தம்பி புள்ள சைக்கிள் தூசி தட்ட தட்டாமல் வாரேன்), இன்னும் எல்லாருக்கும் ஒரு வேண்டுக்கோள். இனி என்னால நீங்க கண்கலங்காம வலம் வர என்னாலான முயற்சி எடுக்கிறேன். அதுக்கு இந்த பதிவு மட்டும் விதி விலக்கு...... அடிக்க வராதீக...... படிக்க வாங்கன்றேன்.
மங்கை, புதியவர்களை தேர்ந்தெடுத்தது உங்கள் பெருந்தன்மை. ஆனா, ஏனுங்க உங்களுக்கு என் மேல கோவம். வந்ததும் வராததுமா weirdo-வா இருக்க சொல்லுறீக. நான் என்ன பாவம்..... இல்லீங்கோ... நீங்க என்ன பாவம் செய்தீகன்னு தான் தெரியல...... பரவாயில்லை.... நீங்க பயந்து ஓட மாட்டீகன்னு நம்பிக்கையில இத தைரியமா எழுத ஆரம்பிக்கிறேன். நானே எழுதுறதோட நம்மளைப் பற்றி தெரிந்த அறிந்த நண்பர் பெருமக்களை கேட்டா எப்படியிருக்கும்னு அவுகள கேட்டா..... ரொம்பதான் கஸ்ட படுத்திபுட்டேன் போல...... எப்பப்போவ்...... அவங்க சொன்னத நான் எழுத மாட்டேன்பா. எனக்கே பயமாருக்குதுன்னா........ சரி ஓவர் பில்டப் கொடுக்காம மேட்டருக்கு வான்றீங்களா....

1) பழகுவது
குழந்தைகளிடமும், வயதில் என்னைவிட சிறியவரிகளிடமும். வயதானவர்களிடமும் வெகு சுலபமாக பழகிவிடுவேன். உடனே ஒன்னுக்குள்ள ஒன்னா ஆயிருவேன். பெரும்பாலும் குழந்தைகள் என்னை அவர்கள் வயதொத்தவர்களாகத்தான் நினைத்து பழகுவர். (அவங்க வயசுக்கு இறங்கி போறதுனால, லூசுன்னு நினைச்சி விளையாடுவாங்களோன்னு பல நாள் சந்தேகம் வரும். புறங்கையால ஒதுக்கிருவேன்ல.). பெரியவர்களோ, அவர்கள் பேத்தி/மகள் போலெண்ணி கதை பேசுவார்கள். (பெரும்பாலும் எங்க காலத்துலன்னு தான் ஆரம்பிக்கும்.... ஒருவேளை இவங்களும் அவங்க வயதொத்தவரா எண்ணுவார்களோ... ச்ச்ச்ச அதல்லாம் இருக்காது.) மேலே கூறியவை வியர்டு இல்லை. இதோ அடுத்த வரியை வாசிக்கவும். என் வயதொத்தவர்களிடம் பேசவே காசு கேட்பேன். ஹி ஹி ஹி.... நெஜமாகவேங்க.... என்னைப் பொறுத்தவரை என்னுடைய First impression is always bad impression. என்னை முதலில் பார்க்குமுன் என்னைப் பற்றித் தெரியாதிருந்தால், நான் முசுடு என்று போய்விடுவீர்கள். மூன்றாம் முறை (மெய்யாலுமே மூன்றாவது நான்காவது முறை தான்) பார்க்கையில், நீங்கள் பேசாவிட்டாலும் (நீங்க எதுக்கு முசுடு கிட்ட பேசப்போறீங்க) நானாக வந்து பேசி பழகுவேன். பேசியதும் தோழமையாகி விடுவேன். அப்புறம் என்ன ஒரு நாள் ஏனடா இவளோட போய் பேச முயற்சி பண்ணினோமுன்னு ரேஞ்சுக்கு நினைக்க வச்சுருவென். அதுவும் உங்கள்ட்ட பேசி அல்ல... உங்கள் குழந்தைகளிடம் பழகி..... ஹி ஹி ஹி ....

2) சிரிப்பு
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே(?) என்னுடைய trade mark சிரிப்பு தான். அதுவும் வாய் விட்டு சிரிப்பேன். இது எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப ஜாலி டைப்னால கூட இருக்கலாம். அவங்க ஜோக்கடிக்க சிரிக்க யாராவது வேண்டாமா? எனக்கு கோபம் வருவது ஆடிகொரு முறையாக இருக்கும். அப்படி கோபம் வந்தாலும் அமைதியாகிவிடுவேனே தவிர சத்தம் மட்டும் வராது. என் ஒவ்வொரு பருவத்திலேயும், சிரிக்காமல் பேச வராதா என்று யாராவது ஒருவராவது கேட்டிருப்பார்கள் என்னிடம். இது என்ன வியர்டா.... கண்மணி யக்கா பகுதிய படிக்கிறவங்க எல்லாம் ஆபிஸ், ரோடு, மாடு, மட்டின்னு கண்ட இடத்துல இருந்து சிரிக்கலயா-ன்னு கேக்குறது இங்கே வரைக்கும் கேக்குதுங்கோ. அதை விடுங்கள். இப்புடு சூடு.... இன்றும் Tom & Jerry, Woody woodpecker பார்த்தால் வாய் விட்டு சிரிப்பேன். என் தோழரின் மகன் 7 வயது சிறுவன், நான் சிரிப்பதைப் பார்த்து weirdo என்று செல்லமாகத்(? நெனைப்பு தான் எனக்கு) திட்டியிருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! என்னைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் காமெடி படத்திற்கு என்னை தியேட்டருக்கு கூட்டிச்செல்ல அவ்வளவு யோசிப்பார்கள்! யாரவது ஜோக் ஏதாவது சொல்லப்போக கொஞ்சம் டைம் கெடச்சாலும் அத நெனச்சி நெனச்சி சிரிப்பேன். திடீர் திடீருனு சிரிச்சா யாருக்கு தான் பயம் வராதுன்னு சொல்லுங்க.

3) புத்தகம் வாசிப்பது
ஆன்மீகம், தத்துவம், மித்தாலஜி (புராணக்கதைகள்), சிறுவர்க்கான படக்கதை படிக்க ரொம்பப் பிடிக்கும். ஓஷோ, ஜெட் மெக்கென்னா, வேதாத்ரி, ஜிக்கி வாசுதேவ், ஜெர்ரியோட Talking with God புடிக்கும். இதுல என்ன வியர்ட்டா இருக்குன்னு யோசிக்கிறது புரியுது. கட்டிலை சுற்றி புத்தகங்கள் குவிஞ்சு கெடந்தால் தான் தூக்கம் நன்றாக வரும். வெரைட்டியா கெடக்குமில்ல. அட்டை டு அட்டை தான் படிப்பேன்ற ரகசியத்த உங்களுக்கு மட்டும் காதுல சொல்றேன். நடுவுல உள்ளது தலைக்கு வைத்து படுத்தா தானா மனசுக்குள்ள போயிருமாமில்ல.... ஒருமுறை சொல்லாமல் என் ரூமுக்கு வந்த என் தோழி அசந்துட்டால்ல.... அவளுக்கு மயக்கம் வராத கொற தான். ஒரே தும்மல் தான் அவ கிட்டேயிருந்து. நூலக காப்பாளரே பலமுறை நீங்கள் நெஜமாகவே ஒரு வாரத்தில் இத்தனையும் படிச்சுருவீங்களான்னு கேட்ட கதையும் உண்டு. சி(ப)ல சமயம் ஒரு மாதிரியா பாத்ததும் உண்டு. பின்ன என்னங்க... லைப்ரரி போய் ஆன்மீக செக்க்ஷன் முடிஞ்சதும், குழந்தைகள் செக்க்ஷன்ல நின்னு மேய்ஞ்சிட்டு இருந்தால்..... ஏதோ வெளியில தொரத்தாம இருக்குறதுக்கு நன்றி சொல்லனும் அவங்களுக்கு.

4) Road trip (ஊர் சுற்றுறத ரீஜண்டா எழுதிருக்கிறேன்)
இந்தியால இருந்தவரைக்கும் தமிழ் நாடும், கேரளாவும், கர்னாடகாவும், அழுது பொலம்பிருக்குதுல்ல.... நான், என் தம்பிமார் 2 பேர், தோழி ஒருத்தி அப்படின்னு ஒரு கோஷ்டி போட்டுட்டு இதோ வாரோம்ன்னு கெளம்பினா, எங்க அம்மாவுக்கு தெரியும் 2 நாள் கழிச்சி தான் கோஷ்டி வந்து சேரும்ன்னு. அப்படியே செங்கோட்டை போய் கோழி வறுவல் சாப்பிட போறோம்ன்னு (இத்தனைக்கும் நான் விவேகானந்தர் பேச்சைக் கேட்டுட்டு காய் கறிக்கு மாறியிருந்த நேரமது) கெளம்பி, குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு, அப்படியே மதுர வந்து, அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி, கொடைக்கானல் போறோம் அப்படின்னு போன் பேசி வைகுறதுக்குள்ள மனசு மாறி பொள்ளாச்சி டாப் ஸ்லிப் கெளம்பி, அங்கிருந்து ஊட்டி போய்.... முது மல வழியா மைசூர் இறங்கி... இப்ப்ப்ப்ப்போ நெனச்சா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னுனுனுனுனுனுது. இதே கத நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம் நடக்கும். அமெரிக்கா வந்ததும், ஆருயிர் தோழி (அதே இந்திய குடிமகள் தான்) இருக்குமிடத்திலே வேல கிடைக்க, இப்போ புது விதமா சுத்துறோம். என்னன்னு கேக்குறீங்களா...... மயக்கம் போடாம கேட்கனும். ஒரு சாம்பிள் இங்கே. ஒரு முறை வலது புறம் மட்டும் திரும்பி ஓட்டுவோம்ன்னு திட்டம் போட்டு (!?), வட கிழக்கு மூலையிலிருந்து (மிச்சிகன் மாநிலம்) மேற்கே வந்துட்டோ ம்மில்ல (சான் பிரான்சிஸ்கோ வந்து தான் அடங்கினோம்). எடுத்துக் கொண்ட நாட்கள் அதிகமில்லை ஜெண்டில் உமன்/மேன். 5 நாட்கள் தான். அப்புறம் அங்கேயிருந்து விமானத்துல திரும்பிப் போனது வேற கத. இது மாதிரி அட்வென்சர் சுற்று பயணம் நிறைய. இதெல்லாம் சத்தியமா உன்மை. இப்போ கூட ...... சரி போதும் நிறுத்துன்னு சவுண்டு உடுறாங்கப்பா.

5) கண்டிப்பா அஞ்சாவதும் வேணுமான்னு யோசிச்சு சொல்லுங்க. இங்கிட்டு உள்ள மக்கமாரேல்லாம் பழய கத விலா வாரியா எடுத்துவுட்டு எழுத சொல்றாக. முடிவு உங்க கையில.

அப்போ வாரேன்.




பின்குறிப்பு:
இது வேறையாக்கும் புலம்பாதீக. டக்குன்னு ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போரேன். ரொம்ப நாளா இரண்டும், மூன்றும் எனக்கு வியர்டா தெரிஞ்சதே இல்லீங்க. ஒன்னாவது எனக்கே புரியாத புதிர். ஹி ஹி ஹி....

Monday, March 26, 2007

தோழியின் மரணம்

எப்படியடி முடிந்தது உன்னால் மட்டும்!

அன்னையின் கருவறையிலிருந்து வெளி வர முடிந்தது
தடுமாறி எழுந்து பின் காலூன்றி நிற்க முடிந்தது
நடை பயிலும் போது விழுந்து மீண்டும் எழுந்து நடக்கத் தெரிந்தது

வாழ்க்கையின் சரிவுகளைத் தாண்டி முன்னேற முடிந்தது
வாழ்க்கைப் பட்ட இடத்தின் நெளிவு சுளிவுகளுக்கேற்ப மாற முடிந்தது
குழந்தை பிறப்பில் மரித்து உயிர்த்தாய்

கணவனின் கண்ணிமையாய் இருக்க முடிந்தது
கண்ணின் மணியாய் குழந்தையை வளர்க்க தெரிந்தது
பாழும் நீரில் விழுந்து எழ தெரியாது போனது ஏனோ

இன்று,
கட்டிய கணவன் துடிக்க,
கண்மணிக் குழந்தை சூழ்நிலை புரியாது விழிக்க,
தாயின் அழுகுரல் மேலோங்க,
தந்தையின் விழி வற்ற,
உற்றவரையும், மற்றவரையும் தவிக்க விட்டு,
அரணாய் கட்டி காத்த உன் இல்லம் விட்டு
சென்றாயடி, மனம் கொன்று வென்றாயடி

ஏக்கம் தீர வழியில்லையடி
உன் தூக்கம் கலைக்க ஒரு தாலாட்டு இல்லையடி

எப்படியடி முடிந்தது உன்னால் மட்டும்!

-- காட்டாறு

தாரா தாரா வந்தாளாம்.. சங்கதி ஒன்னு சொன்னாளாம்

ஆத்தீ இது வாத்துக் கூட்டம்....

(உங்களுக்காகவே காத்திருக்கும் வாத்துக்களையும், தாராக்களையும் படத்தை சுட்டிப் பார்க்கவும்.)

இது கனட நாட்டிலிருந்து தாராக்கள் தெற்கு நோக்கி குடி பெயரும் காலம். நான் கனடா-அமெரிக்கா எல்லைக்கோட்டில் இருப்பதால், ஒவ்வொரு வருடமும் இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத இன்பம் இது. சரி.. நான் பெற்ற இன்பத்தை பகிரலாமென்று ....... உங்களுக்காக உங்களுக்கே உங்களுக்காக இன்று சில போட்டோ க்கள் எடுத்தேன். சில வியக்கத்தக்க உன்மைகள் கீழே:

1) தாரா குஞ்சுகள் பிறக்கும் போது உள்ள நிறம் நாளாக நாளாக கருத்துவிடும். (எங்க பாட்டி பழமொழி பிரியை. அவர்கள் தாராக் குஞ்சியைப் பற்றி கேட்டிருந்தால்...... கழுதைக்குட்டி கூட பிறக்கும் போது அழகாகத் தான் இருக்கும் என்று கூறியிருப்பார்கள்)

2) தாரா பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் பருவம் வரும் போது தன் ஜோடியை கண்டு கொள்ளும். சில பறவைகள் ஒரே ஜோடியுடன் கடைசி வரை வாழும். ஒரு சில மட்டுமே ஜோடி மாற்றிக்கொள்ளும். (நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளலாமோ?)

3) முட்டையிட ஏதுவான இடத்தை தேர்ந்தெடுப்பது பெண் தாராவின் வேலை. (அங்கேயும் அதே கதை தானா?) அதுமட்டும் அல்ல.... பல சமயங்களில் கூடு கட்டுவதும் அவரே பார்த்துக் கொள்வார். (ஆணை நம்பி காலம் கடத்துவதில் பிரயோஜனமில்லை என்று எண்ணிக் கொள்வார் போலும்.). அடை காப்பதும் அவரே என்று சொல்லத் தேவையில்லாமல் போய்விட்டது.

4) ஆணுக்கு வேலையில்லை என்று நினைத்துவிட வேண்டாம். அவர் தான் பகைவரிடமிருந்து தன் மனைவியையும் (?), முட்டைகளையும், கூட்டையும் பார்த்துக் கொள்ளவேண்டும். (இதை எதற்கு ஒப்பிடலாம்?)

5) குஞ்சு பொரிக்க 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரம் வரை ஆகலாம். (மனிதர்கள் தேவலாம் போலவே!)

6) குஞ்சுகளை பராமரிக்கும் கடமை ஆணுக்கும், பெண்ணுக்கும் முதல் குடி பெயரும் காலம் வரை. இது சராசரியாக ஒரு வருட காலமாகும். அதன் பின் குஞ்சுகள் தனியாகவோ, தன் பெற்றொருடனோ வாழ ஆரம்பித்து விடும். (தத்து கழியனும் போல!)

7) இந்த ஒரு வருட காலப் பருவத்தை தாண்டி விட்டால், இவை 24 வருடத்திலிருந்து 42 வருடம் வரை உயிர் வாழும். (அம்மாடியோவ்!)

அவ்வளவு தான் இன்றைய கதை. இனி உங்களுடைய நேரம். என்ன திட்டிடெழுத போகிறீர்கள்?

Sunday, March 25, 2007

என் அழகியின் அருகாமை

மழையின் தூறலில் நீயிருந்தாய்
காற்றின் அசைவில் நீயிருந்தாய்
இலையின் துடிப்பில் நீயிருந்தாய்
பூவின் சரிவில் நீயிருந்தாய்

எங்கும் எதிலும் நீ
எனக்கு பைத்தியமா.....
தனியாக சிரிக்கிறேன், ரசிக்கிறேன், பேசுகிறேன்

நான் மட்டும் அறிந்த உண்மை;
எனக்கு மட்டும் தான் தெரியும்....
என் அழகியின் அருகாமை

-- காட்டாறு

Saturday, March 24, 2007

My friend 'Death'

I was waiting for my beloved friend "Death"
He said you can't wait for me
I will come to you when your time comes
I started waiting for my time
My time said you can't wait for me
I will come and go without waiting for you

I was confused
What do I do?
I concentrated on my daily work

Because I could not stop for Death,
He kindly stopped for me one day
He took my hand
Placed a kiss gently
He asked me to get into the carriage
The carriage held but just ourselves
And Immortality.

We slowly drove
He told me to put away
My labor, my passion, my love,
my desire and my everything
I was sitting with him with total calmness

We passed a school
We passed a park where children played
We passed the sea
We passed the fields of gazing grain
We passed the setting sun
We passed almost everything
That I wanted to see before my friend arrived

At last we stopped before a house
I saw a bearded man
Who was ready to let me in
He looked at me
Up and down
And said, 'Get lost. Your time is yet to come'

I woke up from my dream
Now I am eagerly waiting for my friend
Who can show me around the world

-- Kaattaaru

சாமியான என் அம்மா

என் அம்மா, காலையில
தூங்கிய என்னை அழ அழ எழுப்பி
முத்தம் கொடுத்து, கொஞ்சி,
குளிக்க வைத்து, சாமி கும்மிட வைத்து,
தல வாரி, சீருடை அணிவித்து
இட்லி ஊட்டி, பள்ளிக்கு அனுப்பினார்

பள்ளியிலிருந்து பாதியிலே
கூட்டி செல்ல வந்தார் என் மாமா
என் தலைமை ஆசிரியர் கலங்கிய கண்களுடன்
என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்
பின், என்னை இறுக அணைத்து அனுப்பி வைத்தார்
என்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிற மாதிரி இருக்குது

வர்ற வழியெல்லாம் வழக்கம் போல்
வள வளன்னு பேசிட்டே வந்தேன்
அம்மா "சாமி கிட்ட போயிட்டாடா"
என்றார் மாமா என்னை கட்டிப் பிடித்து
"சாமி கிட்டேயா? அப்படின்னா?"
ஒன்னும் சொல்லல அவர்; சும்மா அழறார்

வீட்டு முன்னால நெறையா பேர் இருக்காங்க
அழறாங்களோ?
சின்ன சலசலப்பு; நான் வந்ததனாலேயா?
கூடியிருந்தவங்க எல்லாரும் வழிவிடறாங்க
என்ன நடக்குதுன்னு தெரியல
எதுக்காக இத்தனை பேருன்னு புரியல

வீட்டுக்குள்ள அம்மா படுத்திருக்காங்க
அப்பா ஓன்னு அழறார்
"அழாதீங்க அப்பா
எனக்கு பயமாயிருக்குது"
அம்மா கட்டிலருகில் என் பாட்டி
என்ன பாத்ததும் கதறி அழுகிறார்

"யாராவது என்னிடம் பேசக் கூடாதா
என்ன நடக்குதுன்னு புரியலயே
ஏன் அழனும்
"நான் அம்மாவையே பார்க்கிறேன்
அம்மா அழகா இருக்காங்க
"எதுக்கு படுத்திருக்காங்க?"

நான் அப்பா பக்கம் போனேன்
அப்பா இறுக அணைக்கிறார் என்னை
அவரின் அணைப்பு எனக்கு பயமாக இருக்குது
அவர் அழுதுட்டே இருக்குறார்
எனக்கும் அழுகையா வருது
பயமாவும் இருக்குது

பாட்டிட்ட போனேன்
"சாமிட்ட போயிட்டாடா
தவிக்க விட்டு போயிட்டாடா
இனி வர மாட்டாடா
உன்ன கொஞ்ச மாட்டாடா"
புரிஞ்சது எனக்கு எதுக்கு அழனும்னு!

-- காட்டாறு

Friday, March 23, 2007

சற்றே உற்றுப் பாருங்கள்











பூவும் நீயே!
தேன் உண்ணும்
வண்ணத்துப் பூச்சியும் நீயே!










வானில் சுதந்திரமாய் பறக்கும்
பறவையும் நீயே!
அணைத்துக் காக்கும்
அன்னையும் நீயே!













Thursday, March 22, 2007

யூக்கலிப்டஸ் மர்மம் - கவனம் தேவை

யூக்கலிப்டஸ்-ன்னு சொன்னதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்ன்னு எனக்கு தெரியாது. எனக்கு தலைசுற்றல் தான் ஞாபகத்துக்கு வரும். ஒழுங்கா திரும்பவும் முந்தய வரியை படித்துக் கொள்ளவும். கதையில்லாமல் கருத்து சொன்னா, என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு(??!!??) புரியாது. ஆதலினால், கருத்து பறிமாறலுக்கு(?) அப்புறமா சிறுகதை(?) உண்டு.

ஒரு ஊருல......... ச்ச்ச.... கருத்துக்கு எதுக்கு ஒரு ஊருல...... யூக்கலிப்டஸ் பற்றி எது தெரியுமோ இல்லையோ யூக்கலிப்டுஸ் சளிக்கு நல்ல மருந்து என்பது எல்லாருக்கும் தெரியுமுன்னு நம்புறேன். ஆனால் மலேரியாவ ஒழிக்க முடியுமுன்னு தெரியுமா? ஆம்! தண்ணி அடிப்பதில்(?) யூக்கலிப்டஸ் மரத்தை மிஞ்ச ஆளில்லை என்றே சொல்லலாம். மலேரியா கொசுவினால் வருது. கொசு... தண்ணீர் தேங்கியிருப்பதால் பலுகி பெறுகுகிறது. ஒரு யூக்கலிப்டஸ் மரத்தை நட்டு வையுங்க அந்த இடத்துல. அது சர சரன்னு தேங்கியிருக்கும் நீரை உறுஞ்சி மள மளன்னு வளரும். அப்புறம் இல்ல கொசு தொல்ல.

அட நீங்க குளிர் பிரதேசத்தில் இருப்பவரா? சமைக்கும் போது சன்னலை திறக்க முடியாதும், சரியான காற்றோட்ட வசதியற்ற வீட்டில் இருப்பவரா நீங்கள்? சமையல் வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாசம் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறதா? கவலைய விடுங்க. இருக்கவே இருக்கிறார் யூக்கலிப்டஸ் எண்ணெய். சிறு குப்பியில் சிறிது நீரில் 2 சொட்டு யூக்கலிப்டஸ் எண்ணெய் விட்டு வீட்டின் பரந்த இடத்தில் வைக்கவும். போயே போச் சமையல் வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாசம்.

மீன் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அமெரிக்கா வாசியென்றால், சால்மன் மீன் பிடிக்க சீசன் தவறாது செல்பவரா? இந்தியா வாசியென்றால், அதுவும் கிராமத்து வாசியென்றால், ஆத்தோரமோ, கம்மா கரையோரமோ தூண்டில் (மேனகா காந்திக்கு தெரியாமதாங்க) போடுபவரா? மீன் உங்களை தேடி வர இதோ அருமையான யோசனை. யூக்கலிப்டஸ் இலையை நீரில் போடவும். மீன் அண்ணார் ஒரு சில வினாடிகள் ஸ்தம்பித்து விடுவார். அப்புறம் உங்கள் திறமை.

ஊரையே எரிக்கணுமா? ஐயா மன்னிச்சுக்கோங்க. சொல்லித்தான் ஆகனுமுங்க. ஊரையே எரிக்க யூக்கலிப்டஸ் மரம் வளர்த்தால் போதும்ன்னு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநகரம் சொல்லுது. கலிபோர்னியா அண்ணாச்சி, அக்கா, தம்பி, தங்கைகளே இக்கூற்றை நீங்கள் தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.

எல்லோரும் யூக்கலிப்டஸ் மரம் வளர்க்க தயாராகிட்டீங்களா? நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா. என் சோக கத இப்போ ஆரம்பமாக போகுது. இதயம் பலவீனமானவங்க படிப்பதை இத்தோடு நிறுத்திக்குங்க.

நான் பாட்டியுடன் வளர்ந்த செல்லக் கிளியாக்கும். என் தந்தையின் சகோதிரி கன்னிகாஸ்திரி. அவர் வருடம் ஒரு முறை எங்களுடன் வந்து 1 வார காலம் தங்குவார். ஒவ்வொரு முறை வரும் போதும் புதியதாக ஏதோ ஒன்று கொண்டு வருவார். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது (என்னடா இவ நாலா கிளாசுன்றா, ரண்டாம் கிளாசுன்றா, அதுக்கு மேல படிக்கலையான்னு சந்தேகம் வருவது நியாயம் தான். என்ன செய்றது. உங்கள் போறாத காலம். ஏதுக்கும் உங்கள் நல்ல நேரத்தை நம்ம தளத்து சோதிடத்திலகம் அண்ணன் VR சுப்பையா அவர்களிடம் (http://classroom2007.blogspot.com/), சுவனப்பிரியன் அறியாமல் (http://suvanappiriyan.blogspot.com/2007/02/blog-post_24.html) கேட்டு தெரிந்து கொள்வது நல்லது), எனக்கு எமனாய் வந்து புடியும் என்று தெரியாமலே (தெரிந்து தான் கொண்டு வந்திருப்பாரோ?) யூக்கலிப்ட்ஸ் தைலம் ஒரு சிறு பாட்டில் நிறைய கொண்டு வந்திருந்தார். என் பாட்டியிடம் அதை கொடுத்து, சளிக்கு கொடுத்தால் நல்லது என்றும் கூறிச் சென்றார்.

அவர் சென்று ஒரு வாரத்தில் எனக்கு சளி (சனியும் சேர்ந்து தான்) பிடிக்க, என் பாட்டி பள்ளிக்கு செல்லுமுன் வெறும் வயிற்றில் ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் மருந்தையும் குடிக்கக் கொடுத்தார். நானும் சமர்த்துவா குடிச்சிட்டு பள்ளிக்கு போய் உட்கார்ந்தா...... உட்கார்ந்தா தானே. காற்றில் அல்லவா மிதப்பது போலிருந்தது. மிதந்து போய் (ஆவியாக அல்ல) கணக்கு வகுப்பில் உட்கார, வீட்டுப்பாடம் செய்யாதது ஞாபகம் வர, வாத்தியாரம்மாவிடம் போய், என் புரியா நிலைமையை விளக்க, அவரோ நான் திருட்டுதனம் பண்ணுவதாக பாழாப்போன தலையில குட்டு வைக்க, அத்தோட கீழ விழுந்தவ தான். கண் முழிச்சா, என்ன சுத்தி அம்மா, அப்பா, அக்கா, அத்தைன்னு ஒரே கூட்டம். புரியாம பேந்த பேந்த (அப்படி தான் முழிக்கனும்னு ஒரு கட்டாயம் இருப்பதால எழுதிட்ட்டேன்) முழிக்க, ஒரு ஓர்மா பம்மி போய் உட்கார்ந்திருந்த என் பாட்டி, எ ராசாத்தின்னு கூப்பாடு போட, அப்புறம் என்ன.... எனக்கு ராச உபசாரம் தான்.

பின்னொரு நாளில் இது பத்தி என் தந்தையிடம் கேட்ட போது, 2 நாள் கழித்து நான் கண் விழித்தாதாக சொன்னார்கள். ஆர்ப்பாட்டத்தின் அர்த்தம் அப்போது தான் புரிந்தது. ஆகவே மக்களே, தூங்க வேண்டுமா? இருக்கிறது ஒரு பாட்டில் யூக்கலிப்டஸ் தைலம்.

Wednesday, March 21, 2007

மழை

இரசித்து கண் கொட்டாமல் பார்த்தேன் ஜன்னல் வழியே
மெல்லிய தென்றல் மேனி தழுவியது
தூறல் முகத்தில் மோதியது
கதவில் தொங்கிய திரைச் சேலை படபடத்தது
நிதானமாக ஆரம்பித்த மழை வேகம் பிடித்தது

மெய் மறந்து நின்றேன்
நானும் மழையும் மட்டுமே அங்கு
என்ன ஒரு சப்தம்; என்ன ஒரு கம்பீரம்
சாரல் பட்டு சிலிர்க்கும் என் மேனி

காற்று வேகமாக அடித்தது
மழை சற்றே அலைக்கழிந்தது
பட்டென அறைந்து சாத்தியது ஜன்னல் கதவு
என் எண்ணம் இடமாறியது

சகதியாய் ஓடும் மழை நீர்
முகம் சுளித்து, அருவருப்புடன் அதில் நடக்கும் மனிதர்கள்
குடை ஒரு கையில்; சேலை பாவடையுடன் ஒரு கையில்
கைப்பையை இடுக்கில் அதக்கி செல்லும் பெண்மணிகள்
அறுந்த செருப்பையும், தன் நிலையையும் நொந்து
செருப்பை கையிலேந்தி செல்லும் பெரியவர்
கடை விரிக்க இயலாத ரோட்டோர முதலாளிகள்
கோணிப்பாய் தலைப்பாகையாய்
நா நீட்டி மழை சாரலை உட்கொள்ளும் சிறார்

கிண்கிணி மணியுடன் சைக்கிள் சவாரி
சேறு வாரி இறைத்து விரைந்து சென்று
கெட்ட வார்த்தையால் மழை தினம்
அர்ச்சனை வாங்கும் ஆட்டோ ரிக்க்ஷா
நெரிசலை விரக்தியாய் ஏற்றி வைத்த
கார் ஜன்னல் வழியே பார்க்கும் வித்தியாசமான மனிதர்கள்
டீக்கடை வாசலில் தம்மடித்து
கேலியும் கூத்துமாய் அமர்க்களப்படுத்தும் விடலை பயல்கள்

பார்க்க பார்க்க ஆனந்தம்
உடல் முழுதும் ஓடும் பரவசம்
வீட்டிலிருந்து கீழிறங்கினேன்
போகும் போது சொல்வதில்லையா என்ற கேள்விக் கணை
சுள்ளென வந்தது வீட்டு பெரியவரிடமிருந்து
சட்டென மறைந்து போகும் உள்ள வெளிப்பாடுகள்!

-- காட்டாறு

வெள்ள காக்கான்னா என்னாங்க?

நான் படித்தது இரு பாலாரும் சேர்ந்து பயிலும் பள்ளியில். நாலாம் வகுப்பு படிக்கும் போது (நெசமாகவே படிச்சேன்), சோசப்பு-ன்னு ஒரு பையன் என்னுடன் படித்தான். நான் படிக்கும் காலத்தில் (ரொம்ப காலமாயிற்று) ஆண் பெண் என்று மாறி மாறி உட்கார வேண்டும். ஒரு பெஞ்சில் மூவர் உட்காரலாம். நான் நடுவிலும், எனக்கு வலப் புறத்தில் திருமணியும், இடப்புறத்தில் சோசப்பும் உட்கார்ந்திருப்போம். திருமணியோ எனக்கு படிப்பில் போட்டி. சோசப்புக்கு என்னை கண்டாலே ஆகாது. இன்று வரை எதற்கு என்று தெரியாது. பார்த்தால் கேட்க வேண்டும். சோசப்பை நான் தோசை என்றும், என்னை அவன் வெள்ள காக்கா என்றும் பட்ட பெயர் வைத்து தான் செல்லமாக (நற நற) கூப்பிட்டு கொள்வோம். வெள்ள காக்கா-ன்னா என்னங்க? தெரிஞ்சவங்க எனக்கும் தெரிவியுங்க. இன்று வரை எனக்கு தெரியல. தமிழ்மண பெரியவங்களுக்கு கண்டிப்பா தெரிந்திருக்கும் என நம்புகிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின் குறிப்பு:
(இது வேறயாக்கும் என்று முனகுவது காதுல விழுதுங்கோ)
பிற்காலத்துல தம்பிங்க மூலமா கேள்விப்பட்டேன். சோசப்புக்கு வீட்டில் பட்டப்பெயர் காக்கா. அது அவனுக்கு பிடிக்காத பெயராம்.

தெரியாத்தனமா கடலில் குதித்தேனோ?

என்னை அறிமுகம் பன்ணியாற்று. அடுத்து உங்களை அறிமுகப் படுத்திக்க வேண்டாமா? வீட்டுக்கு வந்ததிலிருந்து தேடல் தான். 3 மணி நேரம் கழித்து பயம் வந்தது. கடலில் குதித்து விட்டேனோ? நமக்கோ மேல் மண்ட காலி. எப்படி கரையேறுவேன்? ஓடி ஒளிய முடிவெடுத்தேன். இதற்காகத்தான் உன்னை படிக்க வைத்தேனா என்ற என் தந்தையின் குரல் காதருகில் கேட்டது மாதிரி இருந்தது. (ஆனாலும் இந்த ஆவி குழு என்னை படுத்திவிட்டது போலும்). சும்மா கைக்கு வந்ததை டைப் செய்துவிட முடிவு செய்துவிட்டேன். இனி உங்கள் பாடு.......

!முத்துலெட்சுமி அவர்களே கவனிக்கவும்!

முத்துலெட்சுமி அவர்களே,

இது எனக்கு மட்டும் தான் நடக்குதா? இல்லை என்னைப்போல் பலரும் மறுமொழி கொடுக்க முடியாது தத்தளிக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி கொடுக்கவோ, வேறு பதியங்களைப் படிக்கவோ இயலவில்லை. வேறு பதிவிலிருந்து உங்கள் பதிவிற்கு வந்தால் அந்த பதியத்தை காண இயலுகிறது. உதாரணத்திற்கு நான் http://blogintamil.blogspot.com/2007/03/blog-post_21.html இருந்து வித்தியாசமாய் செய் (http://sirumuyarchi.blogspot.com/2007/03/blog-post_3577.html) சுட்டினேன். படித்தேன். முன்னம் எழுதியவைகளுக்கு செல்ல முடியவில்லை. கலங்கி நிற்கும் எனக்கு பதில் சொல்வீர்களா?

அன்புடன்,
காட்டாறு

வணக்கோமுங்க வணக்கோமுங்க வணக்கோமுங்க

வணக்கோமுங்க! வணக்கோமுங்க! வணக்கோமுங்க! தமிழ்மணத்துல மணம் வீசுற, மணம் வீச போற, அண்ணாச்சிக்கும், அக்காவுக்கும், தம்பிக்கும், தங்கைக்கும் வணக்கோமுங்க! வலைப்பதிவு ஞானம் கம்மிங்கோ நமக்கு. அதிலேயும் ப்ளாக்கிங்கு நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசுங்கோ. ஆனா வலைப்பதிவுல தமிழ் பேச, தமிழ் பேசத்தெரிஞ்சவங்க கிட்ட பேச, பேசி அறுக்க, ரொம்ப ரொம்ப புடிக்குங்கோ. நம்புங்கோ. நண்பன் வழியா இப்பிடி ஒரு விஷயம் (தமிழ்ல உலக முழுதும் இருக்குற தமிழ் நெஞ்கள்ட்ட பேசுறது) ரொம்ப சாதாரணமா வலைப்பதிவுல இருக்குன்னு கேள்வி பட்டதும், நீங்கோ மாட்டிடிங்கோ. வந்து சில நாளாச்சிங்கோ. ஆனா என்ன முறையா அறிமுகப் படுத்துதல்ல தாமதமாச்சுங்கோ. தலைவர் ஸ்டைலுல சொல்லப்போனா லேட்டா வந்தாலும் ..... சரி... சரி... சொல்லல.

மொத மொதல்ல அப்பிடின்னு ஆரம்பிக்க நெனைச்சேன். ஆனா எந்த மொதல்லன்னு மறந்திரிச்சி. அதனால இப்போ என்ன சொல்ல வாரேனா, என்னை பற்றி பகிர, உங்களைப் பற்றி அறிய வாய்ப்பு கெடச்சதற்கு நன்றி! வணக்கம்! வந்தனம்!

வரவேற்பிங்கன்னு நெனைக்கிறேன். வரவேற்பிங்க. நம்புறேன்.

Tuesday, March 20, 2007

நண்பனுக்காய் ஒரு கவிதை

கவிதை எழுத ஆசைப்பட்டேன் என் நண்பனுக்காக
என்ன எழுதுவது

நேற்று சாயும் வேளையில் இரண்டு குருவிகளின் கீச்சு கீச்சுகளையா
பசுமையான நிலப்பரப்பை கண்டதும் எழுந்த மகிழ்ச்சியையா
கால்ஃப் கோர்ஸில் கூட்டமாக நின்ற கனட நாட்டிலிருந்து வந்த அன்ன பட்சிகளை
விரட்டிய நாயின் விளையாட்டினால் எனக்குள் பெருகிய சந்தோஷத்தையா

வீட்டு பின்புறத்தில் துள்ளி விளையாடிடும் அணில் குஞ்சுகளையா
காலை நேர பரபரப்பில் மனதில் துளிர்த்த வார்த்தைகளையா
யாரோ எழுதிய இமெயிலில் என் உள்ளத்தில் வந்த சிந்தனைகளையா
இன்று வேலையினிமித்தம் குழுமிய போது வந்த வெட்டி பேச்சின் நடுவே மின்னலென எழுந்த வரிகளையா

மறந்து விட்டேன் என்னுள் எழுந்த நீர் வீழ்ச்சியை
மன்னிப்பு கேட்க வேண்டும் அவனிடம்
என் உள்ளக்கிடக்கை காட்ட விரும்பாத என் மனநிலைக்கு

கருவிலே மரித்த, உருவாகாத கவிதையைத் தேடி தர அவன் உதவுவானா
தொலைந்து போன நான் எழுதாத கவிதையை கண்டுபிடிக்க உதவுவாயா நண்பா

-- காட்டாறு

Monday, March 19, 2007

கருமை

கடவுளின் இருப்பிடம்
கருமை கர்ப்பகிரஹம்

உறவின் தொடக்கம்
இரவின் கருமையில்

உயிரின் தொடக்கம்
அன்னையின் கருவறை

விவசாயிக்கு கொண்டாட்டம்
வானம் கருமைகொண்டால்

பூமி செழிப்பது
கார் மேகத்தால்

நிலத்தில் விளையும்
வைரமும் கருமையே

சுட்டெரிக்கும் சூரிய வெயிலில்
கண்ணைக் காக்கும் கருப்புக் கண்ணாடி

திருஷ்டி கழிக்க
குழந்தையின் கன்னத்தில் கருப்பு மை

கருமை தான் தொடக்கம்
நிறங்கள் அதிலிருந்து வந்தவை

நமை என்றும் பிரியா
நிழலும் கருமையே

கலப்பிடமில்லா கற்புடைய நிறமும்
கலவையில்லா கருப்பு ஒன்றே

பறவைகள் பல இருப்பினும்
ஒற்றுமை புகட்டும் காகமும் கருமை

இனிய குரலில்
இவ்வுலகை மயக்கும் கரிய குயில்

கருமை ஒரு எளிமை
சிறுமை இல்லை அன்பே

ஆயிரம் பெருமைகள் இவ்வண்ணத்திற்கு இருந்தாலும்
சிகரமாய் என்னுள் எழுந்தருளிய கருமை
என் தம்பி அது உன் நிறமாதலால்!

-- காட்டாறு

நானும் கர்ப்பஸ்திரி தான்

எனக்குள் நீ வந்தாய்
கலைத்துவிட மனதில்லை
உன் நினைவுகளை சுமந்தேன்
உரம் போட்டு வளர்த்தேன்
என்னுயிர் கொடுத்தேன்
உன் துடிப்பில் நான் மகிழ்ந்தேன்
ஜனிக்கும் நாள் பார்த்து தவமிருந்தேன்
கனிக்க மருத்துவரில்லை
கேலி செய்யும் நண்பர்களுண்டு
விடாது உன்னை சுமந்தேன்
காலமெல்லாம் சுமந்தாலும் கனமாக தெரியாதது ஏனோ
அடக்கி அடக்கி வைத்த உன் நினைவுகள்
முட்டி மோதும் போது உன்னை வெளியில் விட நினைத்ததுண்டு

மூடி மூடி வைத்தாலும் முடியவில்லை பெண்ணே
நீயாக நீ வரும் நாளை சொல்லிவிடு
ஜென்ம ஜென்மமாக காத்திருப்பேன்
நிரந்தர கர்ப்பிணியாக என்னை விட்டு விடாதே கண்ணே!

-- காட்டாறு

Sunday, March 18, 2007

அநாதை

நானும் அநாதை தான்

பாலூட்ட தாயுண்டு
சிரித்து விளையாட சகோதரர்கள் உண்டு
மகிழ்சியை பகிர நண்பர்கள் கூட்டமுண்டு

ஆனால்,
ஆதரவாய் தோள் சாய தோழனில்லை
ஆம், துன்பம் வரும் போது நானும் அநாதைதான்!

காட்டாறு

Friday, March 16, 2007

சிறு கவிதை

சிறு கரு விழிகள்
அடர்ந்த தலை முடி
குச்சி குச்சி கைகள்
நெடுநெடுவென வயதிற்கேற்ற வளர்த்தி

குட்டி அரை நிஜார்
சிவப்பு பனியன், பனியன் மேல் ஸ்டைலாய் சட்டை
எப்போதும் பைக்குள் கை - ஒயிலாய்
கேட்டால், உனக்கொன்றும் தெரியாது என்பது போல் ஒரு பார்வை

வயது முதிர்ந்தவளையும் குழந்தையாய் தாங்குவான்
அவன் வயதொத்தவளாய் எண்ணுவான்
எகதாளமாய் என்னை அழைப்பதில் அவனுக்கின்பம்
அவனை சீண்டுவதில் எனக்கின்பம்

கோபம் வந்தால் பற்கடித்து திட்டுவான்
சிரித்தால் பொய் கோபம் காட்டுவான்
முத்தங்கள் பல கொடுத்திடுவான் - திருப்பிக்
கொடுக்காது போனால் முறைத்திடுவான்

சுற்றியுள்ளோர் பொறாமை கொள்ளும் அன்னியொன்னியம் எங்களுக்குள்
குளிக்கும் போதும் நான் வேண்டும் என்பான்
ஊட்டி விட அடம் பிடிப்பான்
கள்ளமில்லாது உறங்கிடுவான் மார்பில் கை வைத்து

சிறு கை கொண்டு அணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்பான்
புரியாத கதையும் நிறைவாய் கேட்பான்
புரியாமல் போயினும் என்னிடம் வா என்பான்
தெரிந்தோ தெரியாமலோ மனதிற் பால் வார்ப்பான்

அவன் அன்பு.....
அதற்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
வார்த்தைகளில் அடங்காது; யாருக்கும் புரியாது
சொன்னால் உள்ளம் பொங்கும்; கண்களில் நீர் தேங்கும்

என்னை ஆட்டிப் படைக்கும் குட்டி பிசாசு
என்னை குழந்தையாக்கும் குழந்தை
எனக்கு உரிமையில்லா என் 4 வயது கவிதை
என் குட்டி மருமான் ஜேசன்

--காட்டாறு

Wednesday, March 14, 2007

பூமி பின்னோக்கி சுற்ற வேண்டும்

பள்ளிவிட்டு வீடு கூட்டிச் சென்ற அன்னத்தாயிடம் பண்ணிய குறும்புகள்
10 பைசா சேர்ந்ததும் ஜவ்வு மிட்டாய் வாங்க பர பரத்த மனது
வண்ண வண்ண ஜவ்வு மிட்டாயில் விதவிதமாய் கை கடிகாரம் செய்ய சொல்லி மகிழ்ந்தது
காக்கா கடி கடித்து உண்ட எச்சில் மாங்காய்

அம்மா ஊட்டிய நிலா சோறு
அத்தை பால் சோறு ஊட்ட, மாமா கதை சொல்ல வாயில் பால் சோற்றுடன் உறங்கி போனது
காலாற தந்தையுடன் கடற்கரையில் பல கதை பேசி நடந்தது
அக்காவுடன் சண்டை போட்டு, அம்மாவிடம் அடி வாங்கி, அடி வாங்கியதால் சண்டை போட்டது
தம்பியுடன் ஆங்கிலத்தில் உரையாடியது; ஆங்கிலம் தெரியாத காலத்தில்

கோயில் கடையில் அழகாக அடுக்கி வைத்த யானை பொம்மையை வாங்க அடம்பிடித்து அடி வாங்கியது
விதவித வண்ணங்களில் ரிப்பன் வாங்கி ஜடை போட்டு பெருமையுடன் திரிந்தது
திண்ணையில் பக்கத்து வீட்டு அத்தை சொல்லிய பேய் கதை
புது அரைப்பாவாடை அணிந்து திமிருடன் பார்த்த பார்வை
வானொலிப் பெட்டியின் பின்னால் சென்று பாடியவரை தேடிய அறியா மனம்
முதன் முதலில் பாரதி கவிதை படித்து நிமிர்ந்த நடை பயின்றது

கிராமத்து பாட்டி வீட்டில் திருடி சாப்பிட்ட கோழி முட்டை
தாத்தா அன்புடன் செய்து தந்த கருப்புக்கட்டி
கோழி விரட்டி மாமன் கூட்டில் அடைக்க, அதை விவரம் தெரியாது திறந்து பார்த்த கள்ளமில்லா மனது
பனங்காட்டில் பதனீர் குடிக்க காலில் செருப்பில்லாமல் ஓடி முள் கிழித்ததால் செய்த ஆர்ப்பாட்டம்
நுங்கு சீவிய காயில் சிறுவர்கள் காரோட்டியதை ஏக்கத்துடனும், வெட்கத்துடனும் பார்த்தது
மாட்டின் வால் பற்றி அதன் பின்னால் தறிகெட்டு ஓடியது
ஆட்டை தம்பிமார் பிடிக்க அவ்வாறே அதன் மடுவிலிருந்து பால் பருகியது
வாய்க்காலில் பாவாடை கட்டி குளிக்க தெரியாது நின்ற பட்டணத்துப் பிள்ளை
அம்மா அனாசியமாக வாய்க்காலில் நீந்துவதை ஆச்சிரியத்துடன் ரசித்தது

கொக்கு பார்த்து வெள்ளை போட சொல்லியது
கோழி கூட்டில் அம்மாவின் அடிக்கு பயந்து ஒளிந்தது
தட்டான் பிடிக்க வீட்டின் பின்புற காட்டில் பயித்தியமாய் அலைந்தது
புழுக்களை தூண்டிலில் மாட்டி தம்பிமார் தர ஆத்தாங்கரையில் பழி கிடந்தது
அடுத்த வீட்டு அழைப்பு மணி அடித்து, அவர் வரும் முன் ஓடி ஒளிந்த கள்ளத்தனம்
பாட புத்தகத்தில் கதை புத்தகம் வைத்து வாசித்து அம்மாவை ஏமாற்றியது

மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து எண்ணிய நட்சத்திரங்கள்
நிலவில் ஒழிந்திருக்கும் அன்னை மரியின் மடியில் நான் என கற்பனை
மேக கூட்டத்துடன் போட்டி போடும் கனவு கற்பனைகள்
காகித்தில் கப்பல் செய்து, மழை நீரில் விளையாடியது

இத்தனையும் திரும்பவும் வேண்டும்கிடைக்குமா?
பூமி பின்னோக்கி சுற்றுமா?

எப்படி முடியாது போனது உன்னால்

கருவறையிலிருந்து உதைத்து வெளி வர தெரிந்த உன்னால்.....
நடை பழகிய போது தட்டு தடுமாறி மீண்டும் எழ தெரிந்த உன்னால்.....
சைக்கிள் பயில்கையில் எத்தனை முறை கீழ் வீழ்ந்து தைரியமுடன் எழுந்தாய் நீ

தோல்விகளை சந்தித்து ஏற்ற பாதையில் முன்னேற முடிந்த உன்னால்.....
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நேருக்கு நேர் சந்திக்க முடிந்த உன்னால்.....
கேள்வி பல கேட்டு விதி முறைகளை மாற்ற எண்ணிய உன்னால்.....

பாழும் நீரில் மரணத்தை எதிர் கொள்ள தயங்கியது ஏனோ

உடைந்து அழும் உன் தாயுள்ளம்
வற்றிய கண்களுடன் உன் தந்தை
கண்ணிமைக்க மறந்த உன் சகோதரன்
கதறியழும் உன் சுற்றம் சூழல்

கற்றதை உணர வேண்டும் என்பாயே
மரணத்தை கற்று உறைந்து கொண்டாயோ!



-- காட்டாறு